ஏரிகளின் நகரம் போபால்: ஒரு முழுமையான ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பயணம்!

இந்தியாவின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள போபாலுக்கு ஒரு முறை பயணப்படுங்கள்.
போபால் சுற்றுலா
போபால் சுற்றுலாAI image
Updated on

வடநாட்டின் சோமநாதர் கோயில், அரை வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான ஸ்தூபியைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டிய இடம், போபால்!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால், அதன் இயற்கை அழகால் "ஏரிகளின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதிகள், பிரம்மாண்டமான ஏரிகள் மற்றும் பழமையான மற்றும் நவீன கலைக்கூடங்கள் நிறைந்த போபாலில் உல்லாச சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான 9 அசத்தலான இடங்கள் இதோ:

கலையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் போபால் சுற்றுலா அனுபவம்:

1. போஜ்பூர் சிவன் கோவில்:

போபாலில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில், பெட்வா (Betwa) நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில்.11-ஆம் நூற்றாண்டில் பரமார வம்சத்து மன்னரான ராஜா போஜனால் கட்டத் தொடங்கப்பட்ட கோவில் இது. இங்குள்ள சிவலிங்கம் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள மாபெரும் சிவலிங்கமாகும் (ஆவுடையாருடன் சேர்த்து).

இக்கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் அரைகுறையாகவே நிற்கிறது. இருந்தாலும், இதன் பிரம்மாண்டமான தூண்களும், கல்வெட்டுகளும், அக்கால சிற்பக் கலை நுணுக்கங்களும் காண்போரைக் வியக்க வைக்கும். 'வடநாட்டின் சோமநாதர் கோவில்' என்றும் இது அழைக்கப்படுகிறது.

2. சாஞ்சி ஸ்தூபி ( யுனெஸ்கோ தலம்)

போபாலில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பௌத்த ஆன்மீகத்தலம். கி. மு 3-ஆம் நூற்றாண்டில் அசோக பேரரசரால் நிர்மாணிக்கப்பட்ட பழமையான கற்சின்னங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் அரைவட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான ஸ்தூபியும், அதைச் சுற்றியுள்ள நான்கு தோரண வாயில்களில் (Toranas) செதுக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்களும் மிகவும் புகழ்பெற்றவை. அமைதியான சூழ்நிலையில் வரலாற்றுப் பயண விரும்பிகளுக்கு இது மிகச் சிறந்த இடம்.

போபால் சுற்றுலா
போபால் சுற்றுலாAI image

3. மேல் ஏரி ( படா தலாப்):

போபாலின் தலையாய அடையாளம் இந்த மேல் ஏரிதான். இது 11-ஆம் நூற்றாண்டில் ராஜா போஜனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பழமையான செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். உல்லாசப் பயணிகளுக்கு ஏற்ற சிறந்த இடம்.

இங்கு படகு சவாரி (Boating), மோட்டார் போட் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் வசதிகள் உள்ளன. மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தபடியே ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகுந்த மன அமைதியைத் தரும்.

4. விஐபி ரோடு மற்றும் சைர் சபா:

மேல் ஏரியின் கரையோரமாக அமைந்துள்ள 'சைர் சபா' என்பது ஒரு நவீன பொழுதுபோக்கு மண்டலமாகும். ஏரியின் அழகை ரசித்தபடியே செல்லக்கூடிய பிரம்மாண்டமான தொங்கு பாலம் (Suspension Bridge), சிறுவர்களுக்கான பூங்காக்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்கள் இங்கு உள்ளன. இரவில் விளக்கு வெளிச்சத்தில் இந்த இடமும், விஐபி ரோடும் மிகவும் எழிலாகக் காட்சியளிக்கும்.

5. வன விஹார் தேசிய பூங்கா :

மேல் ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு தனித்துவமான தேசிய பூங்கா. இது ஒரு சரணாலயம் மற்றும் மிருகக்காட்சி சாலையின் கலவையாகும். புலி, சிறுத்தை, கரடி மற்றும் பல்வேறு வகை மான்களை இயற்கை சூழலில் காணலாம். இங்கு மிதிவண்டி (Bicycle) வாடகைக்குக் கிடைக்கும். ஏரிக்கரையோரம் அமைதியான வனப்பகுதிக்குள் சைக்கிள் ஓட்டிச்செல்வது ஒரு சிறந்த அனுபவம்.

6. தாஜ்-உல்-மசாஜித்

இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான இது, போபாலின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அதிசயத்திற்குச் சான்றாகும். இளஞ்சிவப்பு நிறக் கற்கள், பிரம்மாண்டமான குவிமாடங்கள் (Domes) மற்றும் உயர்ந்த மினாா்களுடன் காட்சியளிக்கும் இதன் கட்டிடக்கலை முகலாய பாணியை நினைவூட்டும்.

இதன் முற்றத்தின் பிரம்மாண்டமும், அமைதியான சூழலும் புகைப்படக் கலைஞர்களுக்கும், வரலாற்றுப் பிரியர்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் மிகவும் பிடித்தமான ரசிக்க தக்க காட்சியாகும்.

7. பாரத் பவன்:

கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத இடம்.மேல் ஏரியைப் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த மல்டி-ஆர்ட்ஸ் சென்டர், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரியா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இங்கு பழங்குடியினரின் கலைக்கூடங்கள், நவீன ஓவியக் கண்காட்சிகள், திறந்தவெளி அரங்கம் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

8. பழங்குடியினர் அருங்காட்சியகம்:

மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு அற்புதம். சாதாரண அருங்காட்சியகம் போல இல்லாமல், பழங்குடியினரின் வீடுகள், அவர்களின் நம்பிக்கைகள், கதைகள் மற்றும் கலைப்பொருட்கள் பிரம்மாண்டமான வண்ணமயமான சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் நுழைவுவாயிலில் இருந்தே ஒரு புதிய கலாச்சார உலகத்திற்குள் நுழைந்தது போன்ற வியப்பு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
கேப் டவுன் பயணம்: சொர்க்கத்தை பூமியில் காணத் தயாரா?
போபால் சுற்றுலா

9. பிம்பேட்கா பாறை வாழிடங்கள் - யுனெஸ்கோ தலம்

போபால் நகரத்திலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அதிசயம். இது யுனெஸ்கோவால் (UNESCO) உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான ஆதிமனிதர்களின் குகை ஓவியங்கள் (Cave Paintings) இங்குள்ள பாறைகளில் இன்றும் அழியாமல் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் வேட்டை முறை மற்றும் வாழ்க்கை முறையைப் பாறை ஓவியங்கள் வழியாக நேரடியாகக் காண்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம்.

பயணத்துக்கு சிறந்த காலம்: போபாலுக்குப் பயணம் செய்ய அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலம் மிகவும் ஏற்றது. இங்கு போகும்போது போபாலின் புகழ்பெற்ற 'சுலைமானி டீ' (Sulaimani Tea) மற்றும் உள்ளூர் உணவுகளையும் ருசிக்கத் தவறாதீர்கள்!

குறிப்பாக இந்த உணவுப்பொருட்கள் பழமையான சாவேரி பஜார் (Zaveri Bazaar) தெருக்களில் (இந்தச் சுலைமானி டீயும், சூடான போஹா-ஜிலேபியும்) கிடைக்கிறது. இதோடு இன்னும் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கின்றது. அவற்றையும் சுவைத்து மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்:
புனே சுற்றுலா: வரலாறும் இயற்கையும் இணையும் ஒரு சொர்க்கப் பயணம்!
போபால் சுற்றுலா

இதைப்பற்றி படிக்கும் பொழுது நல்ல வழிகாட்டியாக செயல்படும். திட்டமிட்டு ஒவ்வொரு பகுதியாக பார்த்து மகிழலாம். நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் கலை, கலாச்சாரம் , பொருளாதாரம் மற்றும் சமூகப் பண்பாடுகளை புரிந்துகொள்ள வழி வகுக்கும். சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். இதனால் நல்ல மொழி திறமை உள்ள பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆதலால் பயணம் செய்வீர்! சுற்றிப் பார்த்து பரவசம் அடைவீர்!

பழங்கால வரலாறு மற்றும் உள்ளூர் உணவு வகைகளின் முழுமையான புரிதலைப் பெறுவதன் மூலம், உங்களது பயண அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com