
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த காலநிலை நிலவும் இடங்களுக்கு மக்கள் விரும்பி செல்வார்கள். மேலும் மலை வாசஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அந்த வகையில் 25 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை உள்ள குளுகுளு இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 'தீர்த்தன் மலைவாசஸ்தலம்' கோடைகால சுற்றுலாவிற்கு ஏற்ற வெப்பநிலை குறைவான இடமாக உள்ளது. மேலும் சாகச பயணிகளுக்கு சிறந்த இடமாகவும் நண்பர்களுடன், ட்ரெக்கிங் செல்லவும் சூப்பர் ஸ்பாட்டாக உள்ளது. விதவிதமான பறவைகளை இங்கு கண்டு ரசிப்பதோடு, ஆற்றில் மீன்பிடித்து மகிழ்வது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். ஜன நெருக்கடியில் இருந்து விலகி இயற்கையை ரசிக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த இடம் ஆகும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள 'பின்சார்' (Binsar) அல்மோராவில் இருந்து 34 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இமயமலையின் 360 டிகிரி காட்சியையும் கண்டு ரசிக்கும் இடமாக உள்ள' பின்சார்' பசுமையான ஓக் மற்றும் ரோடோடென்ட்ரான் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதமான காலநிலை நிலவும் இங்கு இயற்கையை ரசிப்பதோடு வனவிலங்குகளை பார்வையிடலாம். புகைப்படக் கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகவும் மலையேற்றம், பறவைகள் பார்ப்பது, பைக் ரைடிங், காடுகளில் நடப்பது போன்றவை மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் சுற்றுலாத்தலத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 'கலிம்போங்' ஆண்டு முழுவதும் இதமான காலநிலையை பெற்றிருப்பதோடு, தனித்துவமான கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளது. பழமையான 110 வருட தேவாலயத்தை கண்டு ரசிப்பதோடு விதவிதமான உணவுகள் ருசித்து மகிழலாம். மேலும் பாரா கிளைடிங், டிரெக்கிங் போன்ற சாகசங்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. குடும்பத்துடன் குளுமையை அனுபவிக்க மிகச் சிறந்த ஸ்பாடாக உள்ளது.
மன நிம்மதியுடன் கூட்டம் குறைவாக குளுமையை ரசிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 'நக்கர்' (Naggar) உள்ளது. சம்மருக்கு ஏற்ற சிறந்த இடமான 'நக்கர்' ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலிக்கு அருகில் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளை கண்டு ரசிப்பதோடு பாரம்பரிய கோட்டைகளையும் பார்த்து பரவசப்படலாம்.
மலைகளின் ராணியான முசோரியின் கிரீடம் என்று அழைக்கப்படும் லேண்டூர் உத்தரகாண்டின் முசோரியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு காலனித்துவ கால கட்டிடக்கலையை குளுமையாக கண்டு ரசிக்கலாம். ட்ரெக்கிங் வியூ பாயிண்ட், விதவிதமான உணவுகள் என குடும்பத்துடன் கோடையை கொண்டாட சூப்பரான சுற்றுலா தலமாக லேண்டூர் உள்ளது.
மேற்கூறிய சுற்றுலா இடங்கள் அனைத்தும் குளுமையான வெப்பநிலையை கொண்டுள்ளதால் கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த இடங்களாகும்.