
விமான நிலையத்தில் இருந்து குடிநுழைவு சோதனைப் பகுதிக்கு ரயில் மூலம் வந்து சேர்ந்தோம். ஜப்பான் நாட்டுக் குடிநுழைவுச் சோதனைகள் மிகக் கடுமையாக இருக்கும்; எந்தவொரு உணவுப்பொருள்களும் கொண்டு வரக்கூடாது என்று சிங்கப்பூரிலேயே பயண முகவர்கள் எங்களை மிகவும் அச்சுறுத்தினர். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. எந்த ஒரு சோதனைகளும் இல்லாமல் மிக விரைவாகக் குடிநுழைவு சோதனைகளை முடித்துவிட்டு, பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். அங்கே எங்களை ஜப்பான் மொழியும் ஆங்கில மொழியும் நன்கு தெரிந்த இரண்டு பெண் வழிகாட்டிகள் வரவேற்றனர். பின் இரண்டு பேருந்துகளில் சிகப்பு நாடா அணிந்தவர்கள் ஒன்றிலும் நீலநிற நாடா அணிந்தவர்கள் மற்றொரு பேருந்திலும் ஏறித் தங்கும் விடுதியை நோக்கிச் சென்றோம். சிகப்பு நிற நாடா வயதானவர்களையும் அதாவது சிங்கப்பூர் மொழியில் மூத்த குடிமக்களையும் நீலநிற நாடா இளம் வயதினர்களையும் குறிக்கும்.