
காலை 7மணியளவில் விடுதியில் காலைச் சிற்றுண்டி. பலவகையான ஜப்பானிய, சீன, மேற்கத்திய உணவு வகைகளும் குளிர்பானங்களும் இருந்தன. அவற்றுள் மேற்கத்திய பாணியில் அமைந்த ரொட்டி, வெண்ணெய், ஜாம், கான்ஃப்ளக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்குப் பேருந்தில் ஏறினோம். இன்றைய முதல் பயணமாக, கியோட்டோ நகரத்திலுள்ள 'புஷிமி இனாரி சரின்' என்னும் புத்தர் ஆலயத்திற்குச் சென்றோம்.
இது ஒருகாலத்தில் ஜப்பானின் தலைநகராக இருந்தது. எந்த ஒரு பண்பாட்டையும் ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கிய ஏட்டுச்சுவடிகள் போல உருவகப்படுத்தலாம். உதாரணமாக இன்றைய தஞ்சை பெரிய கோயிலில் நாயக்கர்கால ஓவியங்களுக்கு அடியில் சோழர்கால ஓவியங்கள் உள்ளது போல. இந்த உவமையை நகரங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்தியாவின் தலைநகராகிய தில்லிக்கு கல்கத்தாதான் முன்னோடி நகரம். அதுபோல ஜப்பானின் தலநகராகிய இன்றைய டோக்கியோவுக்கு மூன்று முன்னோடி நகரங்கள் உள்ளன. ஒன்று கியோட்டோ இன்னொன்று நாரா அதற்கும் முந்தையது காமகுரா.