
'கீழ்க்குரா சாக்கே' அரிசியிலிருந்து ஒயின் தயாரிக்கும் இடம். `சாக்கே` என்றால் ஜப்பான் மொழியில் அரிசி என்று பொருள். முதலில் அரிசியைப் புளிக்கவைத்து அதிலிருந்து எவ்வாறு ஒயின் தயாரிப்பது என்பதை ஓர் ஒளிக்காட்சியின் மூலம் விளக்கினர். பின் அந்த ஆலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக ஓரிடத்தில் கூடி அந்த நிறுவனத்தின் மேலாளர் ஒயின் வகைகளை விளக்கினார். எந்ததெந்த ஒயினுடன் என்னென்ன பக்க உணவு தேவை என்பதையும் விளக்கிவிட்டு ஒயினைச் சுவைப்பதற்குப் பார்வையாளர்களுக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் ஒருசில பேரைத்தவிர மற்ற அனைவரும் அதனைச் சுவைத்துப் பார்த்தனர். பின் பலரும் தங்களுக்குத் தேவையான ஒயின் பாட்டிலைகளை விலைக்கு வாங்கினர். அரிசியில் இருந்து மது தயாரிப்பது நமக்கொன்றும் புதிதல்ல. சங்ககாலத்திலேயே நம் தமிழர்கள் அரிசியைக் களைந்து அந்தத் தண்ணீரைப் புளிக்கவைத்துக் கள்ளைத் தயாரித்ததாக இலக்கியங்கள் பேசுகின்றன. 'தேள்கடுப்பன நாட்படு தேறல்' என்பது சங்க இலக்கிய வரி. அதாவது நாட்பட்ட தேறலானது பருகியதும் தேள் கொட்டியது போன்ற ஓர் உணர்வைத் தரும் என்பது அதன் பொருளாகும். இவ்விடத்தில தேறல் என்பது கள் அல்லது மதுவினைக் குறிக்கும்.