
புல்லட் ரயிலில் பயணிகள் அனைவரும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து மிக அமைதியாகத் தங்கள் வேலைகளைக் கவனித்தனர். ரயிலின் இருக்கைகள் பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப எந்தத்திசையிலும் மாற்றி வைத்துக்கொள்ளும் முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் குழுவினர்கள் மட்டும்தான் சற்று ஆரவாரத்துடன் இங்குமங்கும் சுற்றித்திரிந்து கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் இருந்தனர். ரயிலின் வேகம் மணிக்கு 300 கி.மீ. சுமார் ஒருமணி நேரப்பயணத்திற்குப் பிறகு சரியாக 11 மணிக்கு ஹிரோஷிமா நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து வேறொரு புதிய பேருந்தின் மூலம் அணுகுண்டு விழுந்த நினைவிடத்திற்குச் சென்றோம்.
6-8-1945 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகஷாகி என்ற இரண்டு நகரங்களில் அணுகுண்டு போட்ட கதை உலகறிந்த கதை. நாங்கள் சென்றதோ 5-8-2024. மறுநாள் அதன் நினைவுநாள். அதை நினைவூட்டும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மறுநாள் ஜப்பானியப் பிரதமர் திரு. 'கிஷ்டா ஃபியூமியோ' (KishidaFumio) (இப்போது அவர்பதவி விலகி ISHIBA SHIGERU என்பவர் பிரதமராகி இருக்கிறார்.) வருகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நினைவு நாளன்று நாங்கள் அங்கு சென்றது எதிர்பாராதவிதமாக நடந்தது.