மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு அழகிய இடமான கோனிக்ஸீயைப் பார்க்க ஆயிரமாயிரம் பயணிகள் வருவது அதன் அபூர்வமான இயற்கை அழகைச் சுட்டிக் காட்டுகிறது.
பவேரியா ஆல்ப்ஸின் கிழக்குக் கோடியிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் அமைந்துள்ளது இது.
அற்புதமான பிரம்மாண்டமான ஏரி. அதன்பின்னால் அடர்ந்த அழகிய காடு. சுண்ணாம்பு மலைச் சிகரங்கள். மலைச் சரிவுகள். பலவித மரங்கள். இப்படி ஒரு அழகிய காட்சியை வேறெங்கு உலகில் காண முடியும்?
ஏரியில் செல்ல மின்மோட்டார்கள் உள்ள படகுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஏனெனில் இங்குள்ள ஏரி நீரை யாரும் அசுத்தமாக்கக் கூடாது என்பதற்காக!
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் 21 படகுகள் செலுத்தப்பட ஆரம்பித்தன. இப்போதோ அதிக படகுகள் செலுத்தப்படுகின்றன.
படகு சவாரி இரண்டு மணி நேரம் நீடிக்கும்.
ஏரியின் நீளம் ஐந்து மைல்கள். அகலம் ஒரு மைல்.
கோனிக்ஸீ என்றால் ஜெர்மானிய மொழியில் ராஜாவின் ஏரி என்று பொருள்.
இங்கு ஏரிக்கரையில் ஒரு சின்ன மரவீடும் ஒரு மீன்பிடி படகும் உள்ளன. இதைப் பார்த்து ரசிப்பதில் பயணிகள் பரம ஆனந்தம் அடைகின்றனர்.
ஏரியில் செல்லும் போது ஒரு இடத்தில் படகு நிறுத்தப்பட்டு டிரம்பட் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. அதன் அற்புதமான எதிரொலியைக் கேட்டு பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஏரியின் ஒரு மூலையில் ஒரு அழகிய வளைவு – விரிகுடா – உள்ளது. இது மாலர்விங்கல் (MALERWINKEL) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் ’ஓவியரின் மூலை’ என்பதாகும்.
இந்த மாலர்விங்கலில் உள்ள சிகரத்தின் உயரம் 8900 அடியாகும். இந்த மலையடிவாரத்தில் ஒரு சின்ன ஆறு கரையில் மோதுகிறது. 25000 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த பனி அடுக்குகள் இந்த அழகிய ஏரியையும் சுற்றுப்புறத்தை உருவாக்கின என்பது வரலாறு.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பனி அடுக்குகள் ஒரு ‘U’ வடிவமுள்ள அழகிய பள்ளத்தாக்கை உருவாக்கின.
பழைய காலத்தில் பவேரிய மன்னர்கள் மேற்கு ஜெர்மனியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இடத்தில் வேட்டையாடுவது வழக்கமாக இருந்தது. அரிய வகையான கோல்டன் ஈகிள் பறவையும் (aquila cbrysaetos), சிவப்பு மானும் வேட்டையாடப் படவே கோல்டன் ஈகிள் இனம் அருகிப் போனது. ஆனால் இங்குள்ள செழிப்பான மரங்களின் காரணமாக மான்கள் மட்டும் பத்து மடங்காகப் பெருகின. இப்போது கோல்டன் ஈகிளை இங்கு வளர்க்கவும் சிவப்பு மான்களைப் பாதுகாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தூரத்திலிருந்து பார்த்தால் மலை மட்டுமே காணப்படும்; ஆனால் நெருங்கி வந்தாலோ உலகின் வெறெங்கும் காணமுடியாத ஏரி, மலைச் சிகரங்கள், அடர்ந்த காடுகள் என அனைத்தையும் கண்டு களிக்கலாம். அதனால் தான் உலகெங்கிலுமிருந்து பயணிகள் இந்த இடத்திற்கு வந்து கூடுகின்றனர்!