லடாக் பயண தொடர் 2 - மருத்துவப் பரிசோதனை செய்யாமல் லடாக்கில் சுற்ற அனுமதிப்பதில்லை!

Ladakh Travel Series
Ladakh Travel Series
Published on
இதையும் படியுங்கள்:
லடாக் பயண தொடர் 1 - லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை இல்லை என்பது தெரியுமா மக்களே?
Ladakh Travel Series

லடாக் மிக உயரத்தில் உள்ள பகுதி. லடாக்கின் தலைநகரான லே இருப்பது கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில். நம்மைப்போல் கடல்மட்டத்தில் வாழ்வோர் லே சென்று இறங்கியதுமே நிச்சயமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். ஏனென்றால் உயரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாகத்தான் இருக்குமல்லவா! 

Mountain Sickness, High Altitude Sickness ஆகியவை அடுத்தபடியாக பயம் காட்டும். தலை சுற்றல், வாயிலெடுக்க வருவது போன்ற உணர்வு வரலாம்.

இவற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. கடல்மட்டத்தில் ஆக்சிஜன் அளவு அமோகமாக இருக்கும். இங்கே சுவாசித்து‌ப் பழகிய நமக்கு லே சென்று இறங்கியதும் குறைவான அளவு ஆக்சிஜனில் சுவாசிக்கக் கடினமாக இருப்பது ஒன்றும் வியப்பில்லையே. லட்சரூபாய் வைத்துச் செலவு செய்து வாழ்ந்தவன் கையில் வெறும் நூறு ரூபாயைக் கொடுத்து அவ்வளவுதான் என்றுவிட்டால் பதட்டமாகுமா இல்லையா.. அப்படித்தான் நம் உடலும் குறைந்த அளவு ஆக்சிஜனைக் கண்டதும் முதலில் பதட்டமடையும்.

அதனால் லே சென்று இறங்கிய முதல் நாள் எங்குமே சுற்றாமல் முற்றிலுமாக ஓய்வில் இருக்கப் பரிந்துரைக்கிறார்கள். உடல் இந்தப் புதிய‌ சூழ்நிலைக்குப் பழகிக்கொள்ள முதல் நாள் ஓய்வு கட்டாயம் தேவை.

Ladakh
Ladakh

லடாக் இமயமலையில் உள்ளது. இங்கே சென்று இறங்கியதும் உங்கள் உடலின் மூன்று பகுதிகள் உடனடியாகக் கண்டுபிடித்துவிடும் நீங்கள் வழக்கத்தைவிட மிகவும் உயரமான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை.

  • முதலாவது உங்கள் மூளை.

  • இரண்டாவது நுரையீரல்கள்.

  • மூன்றாவது செரிமான மண்டலம்

மூன்றுமே முதலில் அதிர்ச்சியடையும். பின்னர் தன்னைத்தானே மீட்டுக்கொண்டு புதிய சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் வேலையைத் துவங்கிவிடும். அதற்கு உதவுவதற்காகத் தான் ஓய்வில் இருக்கச் சொல்கிறார்கள். 

ஆழ்ந்து மூச்சிழுத்துவிடும் பயிற்சிகளை (பிராணயாமம்) அவ்வப்போது செய்துகொண்டே இருக்கவேண்டிவரும். பச்சைக்கல்பூரத்தினை ஒரு கைக்குட்டைக்குள் வைத்துக்கொண்டு அவ்வப்போது முகர்ந்து கொண்டால் நல்ல பலன் தரும். மூக்கடைப்புக்குப் பயன்படுத்தும் இன்ஹேலர் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

உணவு சரிவிகிதமாக பாதுகாப்பானதாக இருப்பதுபோல் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. 

அதிக சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மற்றவற்றை மூளை பார்த்துக்கொள்ளும். முதல் நாள் ஓய்வுக்குப் பின்னர் மறுநாளே லடாக் களத்தில் இறங்கிச் சுற்றிப்பார்க்க உங்கள் உடல் நன்கு தயாராகிவிடும். கவலை வேண்டாம்.

நுரையிரலில் பிரச்சினை உள்ளவர்கள், வீசிங் போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கொஞ்சம் யோசித்துக் கிளம்புவது நல்லது.

  • லடாக் பகுதி நமக்கே தெரியாமல் நம் உடலின் நீர்ச்சத்தினை உறிஞ்சிக் கொள்ளும். அதனால் அடிக்கடி தண்ணீர் அருந்திக்கொண்டே இருக்க மறந்துவிடக் கூடாது. டீ-ஹைட்ரேஷன் ஆனால் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். நம்மூரில் எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்களோ அதைவிட மூன்று மடங்கு அதிகமாக லடாக்கில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். 

  • ஜெர்க்கின் வகையறாக்கள் நிச்சயம் தேவைப்படும். நல்ல ஷூ எடுத்துக் கொள்ளுங்கள்.

  • உதடும் தோலும் காயாதிருக்க கலாமைன், வாஸலின், தே.எண்ணெய் வேண்டியிருக்கும்.

  • நல்ல காமிரா எடுத்துக் கொள்ளுங்கள். 

  • பெரும்பான்மையான ‘சுற்றுலா ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்கள்’, Medical Fitness Certificate கேட்கிறார்கள்.

  • 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் Oxygen Saturation Level, Blood Sugar, BP, ECG  ரிப்போர்ட்டுடன் போவது நல்லது. இல்லாவிட்டால் லே சென்றதும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். லேவில் இருப்பதே அந்த ஒரேயொரு மருத்துவமனை தான். அங்கே சென்று காத்திருந்து ரிப்போர்ட் வாங்க வேண்டியிருக்கிறது. கட்டாயமாக மூன்று நாட்களுக்குப் போட்டுக்கொள்ள மாத்திரைகள் தருகிறார்கள். போட்டுக்கொள்வது நல்லது.‌ மருத்துவப் பரிசோதனை செய்யாமல் லடாக்கில் சுற்ற அனுமதிப்பதில்லை.

இமயமலை... இங்கே நாம் ரசித்த நீலகிரி, கோடைக்கானல், கொல்லி மலைகளுக்கு முற்றிலும் புறம்பான மலை. பச்சைப்பசேல் மலைகளை இங்கே தேடாதீர்கள். இருக்காது. கட்டாந்தரை மலைகள் தான். இதைப்போய் என்ன பார்க்கவேண்டிக் கிடக்கிறது என்கிறீர்களா..? அப்படியானால் கட்டாயம் போய் பார்க்கவேண்டியது நீங்கள் தான்.

Ladakh
Ladakh

லடாக் ஒரு Mountain Desert. உலகின் உயரமான மலைப் பாலைவனப்‌பகுதி. மருந்துக்குக் கூட பச்சை இல்லை தான். ஆனால் இதன் பிரும்மாண்டம் 100% உங்களை வாய்பிளக்க வைத்துவிடும். மில்லியன் ஆண்டுக்கு முன்னர் கடலாய் இருந்த இடம் இது. அண்டார்டிகாவில் இருந்து பிரிந்து பயணித்து ஆசியாவுடன் இணைந்த Indian Tectonic Plate. அந்த இணைப்பின் ஆதாரமாய் வான்முட்ட உயர்த்திவிட்டிருக்கும் இமயமலைத்தொடர், அப்போது நிகழ்ந்த பிரும்மாண்ட நிலநடுக்கத்தை நினைவூட்டிக் கொண்டு பார்த்தால், லடாக் புல்லரிப்பைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

டெக்டானிக் தட்டு மோதி உயர்ந்தது என்பதால் இங்கே உள்ள கட்டாந்தரை மலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகின்றன. மண்ணுக்குள்ளே இருந்த கனிம வளத்தைப் பொருத்து இந்த நிற மாறுபாடு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மலையின் நிறத்தைக் கொண்டே அந்த மலைகளுக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள மர்மங்கள் நிறைந்த குகைகள்!
Ladakh Travel Series

மலைகளின் இணைப்புகளில் உருவாகியுள்ள பள்ளத்தாக்குகள் சமவெளிகளாக உள்ளன. இங்கே தான் லடாக்கின் மாவட்டங்களும் கிராமங்களும் உள்ளன. இமயமலையின் எமரால்ட் என்று இந்த மாவட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இங்குதான் கொஞ்சம் பச்சையைப் பார்க்கலாம். இந்த மாவட்டங்கள் ஆற்றங்கரையோரம் உள்ளன. 

நீங்கள் லே மாவட்டத்தில் தான் தங்க வேண்டியிருக்கும். நூபுரா கிராமத்திலும் தங்கலாம். Youth Hostels Association of India என்ற அரசின் அமைப்பும் இங்கே சுற்றுலா ஏற்பாடு செய்து தருகிறார்கள். கட்டுப்படியாகும்படி இருக்கும் அரசாங்கத்தின் இந்த Package.

Kushok Bakula Rimpochee Airport
Kushok Bakula Rimpochee Airport

தொடர்வண்டி, பேருந்து, தனியார் வண்டிகள், ஆகியவற்றில் சாலைமார்க்கமாக லேவை அடையலாம். விமானத்திலும் அடையலாம். புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து நேரடியாக லேவுக்கு Flights உள்ளன. ஒருவேளை வான்மார்க்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் இந்தியாவின் மிக உயரமான குஷோக் பகுலா ரின்பொச்சே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இறங்குவீர்கள். உலகின் ரிஸ்கான ஆனால் இயற்கை அழகில் மதிமயக்கும் லாண்டிங் கொண்ட ரன்வேக்களில் இதுவும் ஒன்றாகும். லேவை நெருங்கும் போது விமானத்தில் இருந்து லடாக்கின் அனேக இடங்களைப் பறவைப்பார்வையில் பார்த்துவிடலாம். இந்த இடங்களில் தான் சென்று கால்பதிக்கப் போகிறோம் என்ற ஆவல் விமானத்துக்குள்ளேயே தொற்றிக்கொண்டுவிடும். 

லேவுக்குள் இரு சக்கர வாகனம் எடுத்துக்கொண்டும் சுற்றலாம். Couple Rides செல்லவும் நல்ல திடமான புல்லட் வகை வண்டிகள் கிடைக்கும்.‌ உலகின் உயரமான மோட்டார் பைக் சாலை லடாக்கில் தான் உள்ளது. ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள் இதற்காகவே வருகிறார்கள். நீங்கள் பைக்கர் என்றால் கண்டிப்பாக லடாக்கை மிஸ்  பண்ணிவிடாதீர்கள். 

மார்ச் முதல் செப்டம்பர் கடைசி வரை இங்கே சுற்றுவதற்கு உகந்த சீசன். மற்ற மாதங்களில் பனி மூடி வெள்ளைக் காகிதம் போல் தான் காட்சி தரும் லடாக். சுற்ற அனுமதியும் கிடையாது.

இந்தப் பூர்வாங்க தகவல்களோடு நான்கு ‌நாட்கள் லடாக்கில் சுற்றுவதற்கான ஐடினரிக்குப் போகலாம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com