
ரயில் பயணங்கள் என்பது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதான். குறைந்த விலையில் குடும்பத்தோடு நாடு முழுக்க சுற்ற ஏற்றது ரயில் பயணங்கள்தான். அந்த வகையில், 3 நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஒரு ரயில் அழைத்துச்செல்கிறது என்பது பற்றி தெரியுமா?
டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289km தொலை தூரம் வரை அமைத்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து கிழக்கில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரம்வரை செல்கிறது. உலகின் மிக நீளமான ரயில் பாதை இது. ஒரே ரயில் பாதையான இது ஐரோப்பிய ஆசியக் கண்டங்களை இணைக்கிறது. டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மேற்கே தொடங்கி சீனாவின் எல்லை மற்றும் ஜப்பானின் எல்லையைத் தொடுகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்தால் உலக வரைபடத்தில் பாதியைக் கடக்கலாம். வருடம் முழுவதும் இந்த ரயில் செயல்படுகிறது. மாஸ்கோவில் இருத்து விளாடிவோஸ்டாக் வரை செல்ல 3 வகுப்பு பயணச்சீட்டின் விலை 13,982 ரூபாய். 2 வகுப்பு பயணச்சீட்டின் விலை 17,018 ரூபாய் ஆகும்.
டிரான்ஸ்-சைபீரியன் ரயில் 18 நிலையங்களில் கடந்து 8 நேர மண்டலங்களை தாண்டி செல்கிறது. மாஸ்கோ - விளாடிவோஸ்டாக், மாஸ்கோ - உலன்படோர், மாஸ்கோ - பெய்ஜிங் என்று மூன்று பிரிவுகளை இணைக்கிறது.
அதில் நீங்கள் எந்த வழியில் பயணம் செல்ல விரும்புகிறீர்களோ அதற்கான விசாவை பெறவேண்டும். இந்த ரயிலில் ரஷ்யாவில் இருத்து தொடங்கி சீனா செல்ல வேண்டுமென்றால் ரஷ்யா மற்றும் சீனா நாட்டிற்கான விசாவை வாங்கவேண்டும். இதற்கான பயணச்சீட்டை மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையத்திலேயே எடுத்துக்கொள்ளலாம். மேலும் இணையம் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
உலகில் மிக மெதுவாக செல்லும் ரயில்;
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிளேசியர் இரயில் உலகின் மெதுவான இரயில் என்று கூறப்படுகிறது. இதற்கு பனிப்பாறை எக்ஸ்பிரஸ் இரயில் என்றும் இன்னொரு பெயர் உண்டு. பொதுவாக சுற்றுலா தளங்களுக்குச் செல்வதற்குத்தான் இரயில் பயணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த இரயிலில் செல்வதற்காகவே சுற்றுலாவைத் திட்டமிடுகின்றனர் பயணிகள். அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது இந்த இரயிலில் என்ற ஆர்வம் உங்களுக்கும் அதிகரிக்கிறது அல்லவா!
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸில் இருந்து ஆண்டர்மாட் வழியாகச் செல்லும் கிளேசியர் இரயில், ஜெர்மாட் மற்றும் செயிண்ட் மோரிட்ஸ் ஆகிய இரண்டு பகுதிகளை இணைக்கின்றன. மொத்தம் 291 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த இரயில் 8 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இரயில் செல்லும் வழியெல்லாம் பள்ளத்தாக்குகள், பனிப்பாறைகள், அழகிய கிராமங்கள் மற்றும் நீண்ட நெடிய குகைகள் போன்ற இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே மெதுவான பயணத்தை நாம் நிச்சயமாக அனுபவிக்கலாம்.
பயணத்தில் எண்ணற்ற பாலங்களின் மேல் பறந்தும், சுரங்கங் களுக்குள் புகுந்தும் இரயில் செல்வதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கின்றன. இயற்கையின் அழகை ரசித்தபடியே பயணிக்க பெரிய அகலமான ஜன்னல்கள் இந்த இரயிலில் உள்ளன.