மலேசியாவின் சொர்க்கத் தீவுகள்: ஒரு நாளைக்கு 140 பேருக்கு மட்டுமே அனுமதி!

பாஸ்போர்ட் குறியீடு முதல் தமிழ் வழி கல்வி வரை யாரும் அறியாத மலேசியாவின் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பக்கங்கள்.
சொர்க்கத் தீவுகள்
சொர்க்கத் தீவுகள்Gemini image
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னரால் ஆளப்படும் ஒரே நாடு மலேசியா தான். மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தாவது மற்றும் உலகில் 37வது பெரிய பொருளாதாரத்தையும் கொண்டுள்ள நாடு.

மலேசியாவின் பாஸ்போர்ட் 2026-ஆம் ஆண்டுக்கான Global Passport Index-இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மலேசியர்கள் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த மலேசியா, இப்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மலேசியாவின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பாஸ்போர்ட் அமைப்பின் நம்பகத்தன்மையை உலகம் அங்கீகரிப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை வளங்கள் கொண்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று. உலகிலேயே அதிகளவில் ரப்பர் மற்றும் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடு மலேசியா தான். உலகில் வட்டம் வடிவில் தபால்தலைகளை முதல் முறையாக வெளியிடப்பட்டது மலேசியா தான். பப்பாளி பழம் இதன் தேசிய பழம்.

மலேசியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. தென்கிழக்கு ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிற்கு, அதன் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலங்கள் வருவாயை ஈட்டித் தருகின்றன. குறிப்பாக சொர்க்கத்தீவுகள் எனக் கருதப்படுகிற லங்காவி தீவுகள் மற்றும் சிபடான் தீவுகள். இந்த இரண்டு தீவுகளுக்கும் சென்று வந்த சுற்றுலா பயணிகள் அவைகளை சொர்க்கத் தீவுகள் என்கிறார்கள்.

மலேசியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள லங்காவி (Langkawi), இயற்கை அழகு நிறைந்த 99 தீவுகளின் கூட்டமாகும். இது கெடா மாநிலத்தின் ஆபரணம் (Jewel of Kedah) என்று அழைக்கப்படுகிறது. லங்காவின் 'பளீர்' வெண் பரப்பை வேறு எங்கும் காணமுடியாது. இங்குள்ள அடர்ந்த காடுகளும், இயற்கையான குகைகளும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

இங்குள்ள இப்ராகிம் உசைன் கலை அருங்காட்சியகம், ராயல் அருங்காட்சியகம், வனவிலங்கு பூங்கா, வரி விலக்கு பகுதி கொண்ட வணிக வாளகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும்.

லங்காவி செல்வதற்கு பினாங்கு, குலா பெர்லிஸ் போன்ற இடங்களில் இருந்து கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கோலாம்பூர், சிங்கப்பூர், பினாங்கு, ஹாங்காங் போன்ற இடங்களில் இருந்து விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. லங்காவி தீவிற்குள் சுற்றி வர வாடகை கார்கள் உள்ளது.

பசுமையான மழைக்காடுகளுக்கு மேலே மலை உச்சியில் அமைந்துள்ள வளைந்த லங்காவி ஸ்கை பிரிட்ஜ் (Sky Bridge) நடைப்பாலம் உலகப் புகழ் பெற்றது. 'குனுங் மாட் சிஞ்சாங்' (Gunung Mat Cincang) மலையின் உச்சிக்கு கேபிள் காரில் சென்று அந்தமான் கடலின் அழகை ரசிக்கலாம்.

சிபடான் தீவு (Sipadan Island) என்பது மலேசியாவின் சபா (Sabah) மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால், செலிபஸ் கடலில் (Celebes Sea) அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு கடல்சார் தீவாகும். இது மலேசியாவின் ஒரே ஒரு கடல்சார் எரிமலைத் தீவு (Oceanic Island) என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

கடலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு செயலற்ற எரிமலைக் கூம்பின் மீது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்த பவளப்பாறைகளால் இத்தீவு உருவானது. இது கடலடியில் இருந்து சுமார் 600 மீட்டர் (2,000 அடி) உயரத்திற்கு செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது.

பிரெஞ்சு கடல்சார் ஆய்வாளர் ஜாக் கூஸ்டோ (Jacques Cousteau) தனது 1989 ஆம் ஆண்டு ஆவணப்படம் மூலம் இத்தீவின் நீருக்கடியில் உள்ள இயற்கை அதிசயங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார். அன்று முதல், உலகின் மிகச்சிறந்த ஸ்கூபா டைவிங் (Scuba Diving) தளங்களில் ஒன்றாக சிபடான் கருதப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் 400-க்கும் மேற்பட்ட மீன் இனங்களும், நூற்றுக்கணக்கான பவளப்பாறை (Coral) இனங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தீவின் அழகையும் கடல்வளத்தையும் பாதுகாக்க மலேசிய அரசாங்கம் மற்றும் சபா பூங்காக்கள் (Sabah Parks) அமைப்பு கடுமையான விதிகளைப் பின்பற்றுகின்றன. ஒரு நாளைக்கு 140 சுற்றுலா பயணிகளை மட்டுமே அரசு இங்கு அனுமதிக்கிறது. அதோடு, மாலை 4 மணி வரை மட்டுமே அந்த தீவில் தங்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஊட்டி முதல் கொல்லிமலை வரை: ஆயுத பூஜை விடுமுறையில் குடும்பத்துடன் என்ஜாய் செய்ய சூப்பர் சாய்ஸ்!
சொர்க்கத் தீவுகள்

இங்கு டைவிங் செய்ய 'Advanced Open Water' சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமாகும். இயற்கை வளங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும் இத்தீவு சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்.

சொர்க்கத் தீவுகள்
சொர்க்கத் தீவுகள்Gemini image

மலேசியாவில் வங்கி காசோலைகளில் தமிழில் எழுதி பணம் எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். காரணம் மலேசியாவின் வளர்ச்சிக்குத் தமிழ் மொழி, கல்வி, இலக்கியம் மற்றும் தமிழர்களின் உழைப்பு மிக முக்கியப் பங்களிப்பை வழங்கியதுதான். அதனை பெருமைப்படுத்தும் விதமாக1816-ஆம் ஆண்டில் பினாங்கு ஃபிரீ ஸ்கூல் (Penang Free School) பள்ளியில் முதன்முதலில் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் விலையில் வால்பாறை சுற்றுலா... குடும்பத்தோடு என்ஜாய் பண்ண சூப்பர் இடங்கள்!
சொர்க்கத் தீவுகள்

1816 ம் ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ் மொழி கல்வி தொடங்கி 2016 ம் ஆண்டு அதன் 200 ஆண்டு விழாவை கொண்டாடியது. அங்கு தேசிய கல்வி திட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களில் தமிழ் மொழி மூன்றாம் நிலை பாடமாக கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வெளியே அதிகளவில் தமிழ் பள்ளிக் கூடங்கள் இருப்பது மலேசியாவில்தான். மலேசியாவில் தற்போது 527-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.

மலேசியாவின் அரசியல் அமைப்பு, பாஸ்போர்ட் தரம், உலகப் புகழ்பெற்ற தீவுகள் மற்றும் அங்கு தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் முழுமையாக அறிந்து கொள்ளும் திருப்தியை வாசிப்பவர் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com