இந்தியாவின் கடைசி கிராமம் இப்போது 'முதல் கிராமம்'... மானா பயணக் கட்டுரை!

mana-village
mana-village
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மயமலையின் அற்புதமான காட்சிகளைக்காண விரும்புகிறீர்களா? அப்படி என்றால் கட்டாயம் நீங்கள் செல்லவேண்டிய இடம் மானா கிராமமாகும். உயரமான பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த இடம். உத்தரகாண்ட் எல்லைப் பகுதியில் உள்ள கடைசி கிராமம் இது.

2019 ஸ்வச் பாரத் இயக்கத்தின் கீழ் 'சிறந்த தூய்மையான, புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்' என்ற விருதை வென்றது. இது சதோபந்த் ஏரி போன்ற மலையேற்றங்கள், சரஸ்வதி நதி மற்றும் வியாச குகை போன்ற ஆன்மீக இடங்களுக்கு பெயர் பெற்றது.

எங்குள்ளது தெரியுமா?

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ள மானா வில்லேஜ், இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்பட்டு தற்போது "முதல் இந்திய கிராமம்" என அறியப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3,219 மீட்டர் உயரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோவில் இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீக இடமாகும். இந்தியா சீனா எல்லையில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்தரகாண்டின் மானா கிராமத்தின் வழியாகத்தான் பாண்டவர்கள் தங்கள் இறுதி பயணத்தை மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஊட்டி, கொடைக்கானல் அலுத்துவிட்டதா? கூட்டமில்லாத சொர்க்கம் - கோத்தகிரி!
mana-village

வியாச குகை, கணேஷ் குகை மற்றும் பீம்புல்:

மகாபாரதம் மற்றும் வேதங்கள் காலத்தில் இருந்தே ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. வியாச முனிவர் மகாபாரதத்தை எழுதியதாக நம்பப்படும் வியாஸ் குஃபா (Vyas Gufa), வியாசர் கூறிய மகாபாரதத்தை விநாயகர் எழுதிய குகை என்றும், விநாயகர் தியானம் செய்த இடமென்றும் அறியப்படும் கணேஷ் குஃபா (Ganesh Gufa) மற்றும் பீமன் சரஸ்வதி நதிக்கரைக்குச் செல்ல நதியின் குறுக்கே பாண்டவர்கள் காலத்தில் பீமனால் வைக்கப்பட்டதாக நம்பப்படும் பாறை பீம் புல் (Bheem Pul) ஆகியவை இங்குள்ளன.

வியாஸ் குஹா என்ற குகையில் இருந்தபடி தான் வேதவியாசர் மகாபாரதம் எழுதியதாக நம்பப்படுகிறது. சரஸ்வதி நதியை கடப்பதற்காக பாண்டவர்களில் ஒருவரான பீமனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் 'பீம் புல்' என்ற கல்பாலமும் இங்குள்ளது.

சரஸ்வதி நதியின் தோற்றம்:

சரஸ்வதி நதியின் பிறப்பிடமான இது இந்த கிராமத்தின் வழியாகப் பாய்ந்து, பின்னர் கேசவ் பிரயாகில் அலக்நந்தா நதியுடன் கலக்கிறது.

பழங்குடியினர்:

இங்கு பெரும்பாலும் பூட்டியா (Bhotia) பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு பெயர் பெற்றவர்கள். மானா இனப் பெண்கள் தலைசிறந்த கைவினைஞர்கள். அவர்கள் கையால் நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் கம்பளங்களுக்கு அதிக வரவேற்புள்ளது. அவர்கள் பொதுவாக குட்மா, துல்மா, பாங்கி, பட்டு, ஸ்வெட்டர், தொப்பி, மஃப்ளர், ஸ்கார்ஃப், கம்பளம், ஆஷான் மற்றும் பாக்கி போன்ற 10க்கும் மேற்பட்ட கம்பளிப் பொருட்களை நெய்கின்றனர்.

வசுதாரா நீர்வீழ்ச்சி:

மானாவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இயற்கை அழகு நிறைந்த நீர்வீழ்ச்சி இது. வசுதாரா நீர்வீழ்ச்சி (Vasudhara Falls) மற்றும் சத்தோபந்த் ஏரிக்குச் செல்லும் டிரெக்கிங் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்க புள்ளியாகும்.

நீலகந்த் சிகரம் (Neelkanth Peak):

6,596 மீட்டர் (21,640 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் 'கர்வால் ராணி' என்று அழைக்கப்படும் நீலகந்த் சிகரம் இமயமலையின் ஒரு முக்கிய சிகரமாகும். இந்த பனி மூடிய பிரமிடு போன்ற சிகரம் 'சிவனின் இருப்பிடம்' என்று போற்றப்படுகிறது.

மானாவிற்கு சென்றால் கிட்னி பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சுவைக்க மறக்காதீர்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
10 நாடுகள்... 4 தலைநகரங்கள்... வியக்க வைக்கும் டானூப் நதிப் பயணம்!
mana-village

செல்ல சிறந்த நேரம்:

பனிப்பொழிவு காரணமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை இங்கு செல்லமுடியாது. மே முதல் அக்டோபர் வரை செல்வதற்கேற்ற காலமாகும்.

எப்படி செல்வது?

ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் டேராடூன் போன்ற நகரங்களில் இருந்து சாமோலியை அடைய பேருந்துகள் உள்ளன. அங்கிருந்து ஷேர் ஜீப் மூலம் மானா கிராமத்தை அடையலாம். அருகில் உள்ள விமான நிலையம் டெஹ்ராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையமாகும். இங்கிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு டாக்ஸி மூலம் செல்லலாம் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ். (202கி.மீ)

logo
Kalki Online
kalkionline.com