

டானூப் நதியில் பயணம் செய்யும்பொழுது பிரமிக்க வைக்கும் பழங்கால மற்றும் இடைக்கால கோட்டைகள், அப்பகுதியின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற செழிப்பான திராட்சை தோட்டங்கள், அமைதியான ஆற்றங்கரை நகரங்கள் என அதன் அழகை ரசிப்பதற்கு சிறந்த வழி, நதிப் பயணத்தை சொகுசு கப்பலில் மேற்கொள்வதுதான்.
டானூப் நதி (Danube River):
ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி இது. இது ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி சுமார் 2,850 கி.மீ. பாய்ந்து, 10 நாடுகள் வழியாகக் கடந்து கருங்கடலில் (Black Sea) கலக்கிறது. இது ஒரு முக்கியமான சர்வதேச நீர் வழித்தடமாகவும், வரலாற்று சிறப்புமிக்க ரோமானியப் பேரரசின் எல்லையாகவும் திகழ்கிறது. இது கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகு நிறைந்த பல இடங்களை இணைக்கும் ஒரு முக்கிய நீர் வழியாகும்.
டானூப் நதிப்பயணத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்:
*ஹங்கேரியில் உள்ள 'டானூப்பின் முத்து' என்று அழைக்கப்படும் புடாபெஸ்ட் நகரம், நதியின் இருபுறமும் அழகான நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் புடா கோட்டை(Buda Castle).
*இசையின் தலைநகரான வியன்னா, அதன் அரச அரண்மனைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கு பெயர் பெற்றது.
*ஸ்லோவாக்கியா, பிராட்டிஸ்லாவா இடைக்கால பழைய நகரம் மற்றும் ஆற்றின் மேலே அமைந்துள்ள பிராட்டிஸ்லாவா கோட்டை (Bratislava Castle) பார்க்க வேண்டியவை.
*ஜெர்மனியில் உள்ள ரெஜென்ஸ்பர்க் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான இது இடைக்கால கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.
*இயற்கை கொஞ்சும் அழகிய இடங்களான ஆஸ்திரியாவிலுள்ள வச்சாவ் பள்ளத்தாக்கு (Wachau Valley) திராட்சைத் தோட்டங்கள், கோட்டைகள் மற்றும் மடாலயங்களைக் கொண்ட டானூப்பின் மிகவும் அழகிய பகுதியாகும்.
*ருமேனியாவில் டானூப் டெல்டா ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட டெல்டாவாகும். இது பறவைகள் மற்றும் வன விலங்குகளின் புகலிடமாகும்.
*ஹங்கேரியில் எஸ்ஸெர்கோம் பசிலிக்காவில் (Esztergom Basilica) உள்ள மிகப்பெரிய தேவாலயம் என பார்க்க வேண்டிய இடங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
டானூப் நதி பாயும் நாடுகள்:
10 நாடுகள் 4 தலைநகரங்கள் உலகை இணைக்கும் சர்வதேச நதி-ஐரோப்பாவின் டானூப் நதி. ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி(முதல் நதி வோல்கா). ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, பல்கேரியா, ருமேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் என 10 நாடுகளின் வழியாகவோ அல்லது அவற்றின் எல்லைகளைத் தொட்டோ பாய்ந்து கடைசியாக கருங்கடலில் கலக்கிறது.
நதி பாயும் 4 தலைநகரங்கள்:
உலகில் 4 தலைநகரங்கள் வழியாகப் பாயும் மிகப்பெரிய நதியாக உள்ள இது ஆஸ்திரியாவின் வியன்னா (Vienna), ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா (Bratislava), ஹங்கேரியின் புடாபெஸ்ட் (Budapest) மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் (Belgrade) ஆகிய 4 முக்கிய தலைநகரங்கள் வழியாக பாய்கிறது.
உருவாகும் இடம்:
ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் (Black Forest) மலையில் பிரெக்(Breg) மற்றும் ப்ரிகாச் (Brigach) ஆகிய இரு நீரோடைகள் இணைந்து இந்த நதியை உருவாக்குகின்றது.
ரோமானியப் பேரரசின் எல்லையாகவும், பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் கலாச்சார மற்றும் வணிகப் பாதையாகவும் செயல்பட்டு வரும் இந்த நதி இறுதியில் ருமேனியா மற்றும் உக்ரைன் வழியாக கருங்கடலில் கலக்கிறது.
டானூப் நதி ஐரோப்பாவின் புவியியல், பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றும் ஒரு உயிர்நாடியாக கருதப்படுகிறது. டானூப் நதியின் அழகை ரசிக்க ஒரு நதி பயணக் கப்பலில் (River Cruise) செல்வது அருமையான அனுபவத்தைத் தரும்.
செல்ல சிறந்த நேரம்:
டானூப் நதி படகுப் பயணம் பொதுவாக ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் மே முதல் செப்டம்பர் வரை சிறந்த காலமாக கருதப்படுகிறது.
டானூப் பயணத்தை வழங்கும் நிறுவனங்கள்:
வைக்கிங் ரிவர் க்ரூஸஸ், சாகா க்ரூஸஸ், அவலான் வாட்டர்வேஸ் என பல நிறுவனங்கள் இந்த நதிப்பயணத்தை வழங்குகின்றன.