Dawki என்பது இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹிட்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். டவ்கி பாலம் உமங்கோட் ஆற்றின் மீது அமைந்துள்ள ஒரு தொங்கு பாலம் ஆகும் . இது 1932 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த நதியில் உள்ள நீர் தெளிவான பச்சை நிறத்தில் காணப்படுகிறது. ஆற்றின் மறு கரையில் வங்கதேசம் உள்ளது. இது இந்திய - வங்காள தேச பார்டர் என்பதால், இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் காணப்படுவது போல் மறுபுறம் வங்கதேச சுற்றுலா பயணிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மிகவும் அமைதியான அழகு கொஞ்சும் இடம்.
டவ்கி / உம்ங்கோட் ஆற்றில் படகு சவாரி செய்வது மிகவும் சுகமான அனுபவம். இந்தியா வங்காளதேச எல்லையில் (Indo Bangladesh border) உள்ள காடுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகள் வழியாக பாயும் தெள்ளத் தெளிவான நீருக்கு டாவ்கி நதி பிரபலமானது. இது ஒரு அமைதியான மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகும். பசுமையான மலைகளால் சூழப்பட்ட அழகான உம்ங்கோட் நதியைக் கொண்டுள்ளது. ஆசியாவின் தூய்மையான நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நன்னீர் நதியில் படகுகள் காற்றில் மிதப்பது போன்ற தெளிவான நீர் உள்ளது. இங்கு வசந்த காலத்தில் படகு பந்தயப் போட்டி நடைபெறும் என்றும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அதனைக் காண வருவார்கள் என்றும் கூறுகிறார்கள்.
மேற்கு ஜெயின்டியா ஹில்ஸில் உள்ள மவ்லின்னாங்கிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உம்ங்கோட் நதியின் அழகிய மரகத பச்சை கலரில் இருக்கும் நீர் அமைதியாக கடந்து செல்லும் எல்லை நகரமான டாவ்கி அமைந்துள்ளது. ஆற்றின் குறுக்கே படகு சவாரி விடுகிறார்கள். பச்சைக் கலரில் பளிங்கு போல் தண்ணீர். விதவிதமாக பெரிய பெரிய கூழாங்கற்கள் நம் கண்ணை கவர்கின்றன. படகில் செல்லும் வழியில் 'போபில் நீர்வீழ்ச்சியில்' சிறிது நேரம் படகை நிறுத்தி அதன் அழகை ரசித்தோம்.
ஒரு படகில் மூன்று பேர் வரை ஏற்றி செல்கிறார்கள். நபர் ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். மிஸ் பண்ண கூடாத இடம் இது. ஆற்றின் கரையைச் சுற்றியுள்ள கம்பீரமான மலைகள் மற்றும் இயற்கை அழகும் பார்த்து ரசிக்க வேண்டியவை.
ஷில்லாங்கில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இந்த யானை நீர்வீழ்ச்சியும் ஒன்று. நகரின் புறநகர் பகுதியில் 12 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு அடுத்தடுத்த நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு யானையைப் போன்ற பாறையால் இது இப்பெயரை பெற்றது. இருப்பினும் 1897இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்தப் பாறை சிதைந்து அடித்துச் செல்லப்பட்டது. மழைக்காலத்தில் இங்கு மிகவும் அழகான காட்சிகளை காண முடியும்.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் தடுப்புச் சுவர் உள்ளதால் அருவியில் ஓடும் நீரை தொட்டு அதன் குளுமையை அனுபவித்தோம். தண்ணீர் மிகவும் சில் என்று ஐஸ் போல் இருந்தது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தந்தது. அங்கு யாரும் குளிப்பதில்லை. அருகில் சென்று பார்த்து போட்டோக்கள் எடுத்துக் கொள்வதுடன் சரி.
அழகான யானை நீர்வீழ்ச்சி மக்களால் விரும்பப்படும் பிக்னிக் ஸ்பாட்டாகும். சுற்றிலும் பசுமையான மரங்களுக்கு இடையில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்கலாம். இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சிறந்த நேரம் செப்டம்பர் முதல் மே வரை. இங்கு சுவையான சோளத்தை சுட்டுக் கொடுக்கும் சிறு சிறு உள்ளூர் கடைகளில் வாங்கி சாப்பிட்டோம். மிகவும் அருமையாக இருந்தது.
நாட்டின் மிக நீளமான 10 குகைகள் மேகாலயாவில் உள்ளன. இந்த நிலத்தடி வலை அமைப்புகள், சுண்ணாம்புக்கல் அரிப்பு மற்றும் இடைவிடாத நீரின் ஓட்டத்தால் உருவாக்கப்பட்டவை. மேகாலயாவில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான குகை மவ்ஸ்மாய் குகை. சிறப்புஞ்சலில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இயற்கையான சுண்ணாம்பு கல் அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. குகையின் குறுகிய பாதைகள் மற்றும் சிக்கலான ஸ்டாலாக்டைட்டுகள் ஒரு சிலிர்ப்பான பயணத்தை உருவாக்குகிறது. காட்டுப் பகுதியில் நடந்து, நிறைய படிக்கட்டுகளில் ஏறி இந்த குகையை அடைய வேண்டும். 30 ரூபாய் டிக்கெட் எடுத்து 150 மீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உட்கார்ந்து, நிமிர்ந்து, நடந்து, தவழ்ந்து என எல்லா நிலையிலும் நுழைந்து சென்றோம். ரொம்ப சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது.