

மிசோரம் வடகிழக்கு இந்தியாவின் அமைதியான மற்றும் அழகான மாநிலமாகும். இங்குள்ள ஐஸ்வால், சாலமன் கோவில், ரேக் மலை, வந்தாங் நீர்வீழ்ச்சி மற்றும் தம்தில் ஏரி போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும். இயற்கை எழில், பசுமையான மலைகள், கலாச்சாரம் மிக்க கிராமங்கள் மற்றும் மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும்.
ஐஸ்வால் (Aizwal):
மலை உச்சியில் அமைந்துள்ள மாநிலத்தின் தலைநகரம் இது. கலாச்சாரத்தையும் நவீனத்தையும் கலந்த இடமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,132 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் மிசோ பழங்குடியினர் வசிக்கின்றனர். பசுமையான தாவரங்கள் மற்றும் ஏராளமான இயற்கை அழகால் நிறைந்துள்ள இடமிது.
சாலமன் கோவில் (Solomon's Temple):
ஐஸ்வாலில் உள்ள புகழ்பெற்ற மிகப்பெரிய தேவாலயமாகும். கோதிக் பாணியில், 12 பிரதான கதவுகள் மற்றும் 32 ஜன்னல்களுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பிரதான மண்டபத்தில் 2,000 பேர், வளாகத்தில் 10,000 பேர் வரை தங்கக் கூடிய அளவு பெரியது. ஐஸ்வால் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1996ல் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்ட இந்த வெள்ளை பளிங்குக்கல் கட்டிடம் கித்ரோன் பள்ளத்தாக்கில்(Kidron Valley) அமைந்துள்ளது.
ரீக் மலை(Reiek Mountain):
1465 மீட்டர் உயரத்தில் மிசோரம் மாநிலத்தின் மிக உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான இது ஐஸ்வாலில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கீழே உள்ள தலைநகரம் மற்றும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகளை கண்குளிரக் காண முடியும். ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம் இது. இங்கிருந்து அழகிய சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம்.
ஹ்முயிஃபாங்(Hmuifang):
ரம்யமான காட்சிகளைக் கொண்ட அழகான வனப்பகுதியாகும். இது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயணங்களுக்கு ஏற்றது. இதன் உள்ளூர் விழாக்கள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சார விழாக்களுக்கு புகழ் பெற்றவை. இது பனிமூட்டமான மலைகள் மற்றும் புல்வெளிகளைக் கொண்ட சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
வந்தாங் நீர்வீழ்ச்சி(Vantawng Falls):
செர்ச்சி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி. இது நாட்டின் 13 வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது சிறந்த நீச்சல் வீரராகக் கூறப்படும் வந்தாங்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 750 அடி (230 மீ) உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி இது. இதனைச் சுற்றியுள்ள செங்குத்தான காடுகள் நிறைந்த மலைப்பகுதிகள் காரணமாக அருகில் செல்வது கடினமாக இருந்தாலும், ஒரு பார்வை கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
தம்தில் ஏரி(Tamdil Lake):
படகு சவாரி செய்ய ஏற்ற, அமைதியான இயற்கை ஏரி. தம்தில் என்பதற்கு 'கடுகு ஏரி' என்று பொருள். அற்புதமான நிலப்பரப்புகள் அமைதியான சூழல், பளிங்கு போன்ற தெளிவான நீர் நிறைந்த இந்த ஏரியைச் சுற்றிலும் பசுமையான காடுகளும், மென்சரிவு கொண்ட குன்றுகளும் சூழ்ந்துள்ளன.
ஃபாங்புய் சிகரம் (Phawngpui Peak):
"மிசோரமின் நீல மலை" என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரம். கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ள இது மாநிலத்தின் மிக உயரமான மலை மட்டுமல்ல, மிசோ பழங்குடியினரின் தெய்வத்தின் இருப்பிடமாகவும் நம்பப்படுகிறது.
பசுமையான காடுகள், தாவரங்கள், கம்பீரமான மலைகள் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகள் போன்ற காட்சிகளைக் காண ஏற்ற இடமிது. ஆர்க்கிடுகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உட்பட அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்தது.
ஃபல்கான் கிராமம் (Falkawn Village):
மிசோ மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரிய வாழ்வியலையும் அறிய சிறந்த இடமிது. மிசோ பழங்குடி மக்களின் உள்ளூர் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், மரபுகள் மற்றும் வாழ்வாதாரங்களை புரிந்து கொள்ள உதவும் இந்த கிராமம் ஐஸ்வாலில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூங்கில் வீடுகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருட்கள் வரை பாரம்பரிய மிசோ மக்களின் வாழ்க்கையை வெளிக்காட்டும் சிறந்த இடமாகும்.
டம்பா புலிகள் காப்பகம் (Dampa Tiger Reserve):
இயற்கை ஆர்வலர்களுக்கான சரணாலயம். மிசோரம் மாநிலத்தின் அடர்ந்த காடுகளுக்குள் டம்பா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஐஸ்வாலில் இருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டம்பா, சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு 1994 ஆம் ஆண்டில் புலிகள் காப்பக அந்தஸ்து வழங்கப்பட்டது.
புலிகளைத் தவிர இந்த காப்பகத்தில் சிறுத்தை, தேன் கரடிகள், இந்திய மலைப்பாம்பு, குரைக்கும் மான் போன்ற விலங்குகளும், அரிய பறவைகளும் உள்ளன.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மார்ச் வரை செல்வதற்கு சிறந்த காலமாகும். அப்போது வானிலை குளிர்ச்சியாகவும், வறண்டதாகவும் இருப்பதால் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.