பச்சை புல்வெளிகளைத் தாண்டி, இமயமலையின் மிக உயரத்தில் ஒரு ஏரி அமைந்துள்ளது. அங்கு கோடைக்காலத்தில் பனி உருகத் தொடங்கி, ஏரியின் அடியில் ஒரு திகில் காட்சி கண்களுக்குத் தெரிகிறது. அது நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள்! ஆம், இதுதான் ரூப்குண்ட் ஏரி (Roopkund Lake). உத்தரகண்ட் மாநிலத்தில் 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி (Skeleton Lake) என்று அழைக்கப்படுகிறது.
வருடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த ஏரி, கோடையில் பனி உருகும்போது தனது பயங்கர ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. நூற்றாண்டுகளாக, நூற்றுக்கணக்கான எலும்புகள் இங்கு சிதறிக்கிடக்கின்றன. ஒரு காலத்தில், ஆலங்கட்டி மழையால் ஒரு யாத்ரீகர்கள் கூட்டம் இறந்துபோனதாக ஒரு கதை உண்டு.
பழங்கதைகள் ஒருபுறம் இருக்க, அறிவியலாளர்கள் இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தனர். 2013-ல் நடந்த ஒரு ஆய்வில், பெரும்பாலான மண்டை ஓடுகள் உடைந்திருந்தன. இது ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட சேதமாக இருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது.
ஆனால், 2019-ல் நடந்த ஒரு பெரிய டிஎன்ஏ ஆய்வில் இந்த எலும்புகள் மூன்று வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவை என்று தெரியவந்தது. சிலர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். சிலர் மத்திய தரைக்கடல் (Mediterranean) பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் ஒரே நேரத்தில் இறக்கவில்லை, பல நூற்றாண்டுகள் இடைவெளியில் இறந்திருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இமயமலையின் இந்த உச்சியில் மத்திய தரைக்கடல் மக்கள் எப்படி வந்தனர் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இங்குள்ள எலும்புக்கூடுகள் திகில் நிறைந்த மர்மமாக இருந்தாலும், ரூப்குண்ட் மலையேற்றம் சாகசப் பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்.
இந்த மலையேற்றப் பயணம் லோஹஜங் (Lohajung) என்ற இடத்திலிருந்து தொடங்குகிறது. அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள், பனிக்கட்டி நிறைந்த பாதைகள் என இந்த பயணம் மிகவும் ரம்மியமான காட்சிகளை உள்ளடக்கியது. மேலும், வழியெங்கும் திரிஷுல், நந்தா குந்தி போன்ற பிரம்மாண்டமான இமயமலை சிகரங்களைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த மலையேற்றம் பொதுவாக 5 முதல் 9 நாட்கள் வரை நீடிக்கும். இது மிதமான மற்றும் கடினமான பயணமாக இருப்பதால், சரியான தயாரிப்புடன் செல்வது அவசியம்.
எப்போது செல்லலாம்?
மே-ஜூன் மாதங்கள் பனி உருகி, எலும்புகள் தெரியும் நேரம் இது.
செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வானம் தெளிவாக இருப்பதால், இமயமலை சிகரங்களின் அற்புதமான காட்சிகளைக் காணலாம். மற்ற நேரங்களில் இந்த ஏரி முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
நீங்கள் சவால்களை விரும்புபவர் என்றால், ரூப்குண்ட் மலையேற்றம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.