
நிறைய பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து அசைவ உணவு, முட்டை ஆகியவற்றை தருவது என்பது தெரிவதில்லை. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) என்ன சொல்கிறதென்றால், குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்தே அசைவ உணவுகளைக் கொடுக்கலாம் என்று சொல்கிறது. முட்டை, அசைவம் போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம். அசைவ உணவு கொடுக்கும் போது நன்றாக வெந்திருக்க வேண்டும். தொண்டையில் அடைத்துக் கொள்ளாமல் நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டியது அவசியம். சிறிய அளவில் இருந்து உணவுக் கொடுக்கத் தொடங்குவது மிகவும் அவசியம். உப்பு, காரம் போன்றவற்றை குழந்தைகள் உணவில் சேர்க்கக்கூடாது.
ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு இரும்புச்சத்துக் குறைப்பாடு மற்றும் Zinc குறைப்பாடு வந்துவிடும். எனவே, ஆறு மாதத்தில் இருந்தே அசைவம் கொடுக்க தொடங்குவது சிறந்தது.
முக்கியமாக American Academy pediatrics சொல்படி, ஆறு மாதத்திலேயே குழந்தைகளுக்கு முட்டையை உணவில் சேர்த்து கொடுப்பதனால் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை வளர்ச்சிக் குறைப்பாடு நன்றாக குறைந்து குழந்தைகள் நன்றாக வளர்வதாக ஆராய்ச்சியில் தெரிகிறது.
இனியும் 9 மாதம் ஆகட்டும், 1 வயது ஆகட்டும் என்று காத்திருக்க தேவையில்லை. குழந்தைக்கு ஜீரணமாகாது, பல் முளைக்கட்டும் என்று யோசிக்காமல் சீக்கிரமாகவே ஆரம்பித்தால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். அசைவ உணவில் நிறைய சத்துக்கள் இருந்தாலும், குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் கட்டாயப்படுத்தி ஊட்ட வேண்டாம்.
சைவர்கள் முடிந்தால் முட்டை கொடுக்கலாம். அதுவும் கொடுக்க முடியவில்லை என்றால் நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க தொடங்குங்கள். பாதாம், வேர்க்கடலை கொடுக்க ஆரம்பிக்கலாம். எந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்க தொடங்குவதற்கு முன்பு குழந்தை நல மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)