தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை. இந்த மலையானது ஆயிரம் முதல் 1300 மீட்டர் உயரம் உள்ளது. 280 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட அடர்த்தியான காடுகள் நிறைந்த மலை பகுதி ஆகும். இதன் உயரமான சிகரம் 4663 அடி கொண்டது. இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவார்கள். உயிரினங்களை கொல்லும் சூர் பழங்குடியினர் வாழ்ந்த காரணத்தால் இது கொல்லிமலை என பெயர்பெற்றது. மரங்கள் நிறைந்த அடர்த்தியான மலைப்பகுதியாக இருந்ததால் கொல்லிமலை எனவும் பெயர் பெற்றது.
இந்த மலையானது மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு இவற்றில் கொல்லிமலையை பற்றி குறிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியை முற்காலத்தில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான ஓரி என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவர் காட்டில் வாழ்ந்த சிங்கம் புலி கரடி மான் காட்டுப்பன்றி இவர்களை வேட்டையாடுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
ராமாயண காலத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்த மலைப்பகுதி என புராணம் கூறுகிறது. அவ்வையார், பெருஞ்சித்திரனார் போன்ற புலவர்கள் இந்த மலையை பற்றி பாடல் பாடி உள்ளனர். பிற்காலத்தில் சேர மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு உண்டு.
கொல்லிமலையில் அமைந்திருக்கும் பெண் தெய்வம் கொல்லிபாவை (படம் 1) என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 15000 ஆண்களுக்கு முற்பட்ட கோவில் என இங்கு வாழ்ந்த சித்தர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து ஆகாய கங்கை (படம் 2) நீர்வீழ்ச்சி அறநூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது. இம்மலை உச்சியில் அரபள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இங்கு புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகன் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார். இந்த மலைப்பகுதியில் சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. அங்கு தினசரி படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் பதினெட்டாம் நாள் வல்வில் ஓரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆகாய கங்கை பார்க்க வேண்டிய இடமாகும். இங்கு பலவிதமான காப்பி தோட்டங்கள் பழத்தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இங்குள்ள செம்மேட்டில் சீக்கு பாறை சேலூர் கோயிலூர் போன்ற வியூ பாயிண்ட்டுகள் உள்ளன. சீக்கு பாறையில் இருந்து பார்த்தால் 70 கொண்டை ஊசி வளைவுகளையும் அருமையாக பார்க்கலாம். போகர் மற்றும் அகஸ்தியர் வசித்த குகைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகள் உள்ளன.
அரபளீஸ்வரர் கோவில் (படம் 3): ஓரி மன்னன் கட்டிய சிவன் கோயில் ஆகும். தினமும் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
வாசலூர் பட்டி என்ற இடத்தில் படகு இல்லம் உள்ளது. இங்கு தினசரி படகு சவாரி நடைபெற்று வருகிறது. காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரை படகு சவாரி நடைபெறும்.
கொல்லி பாகை எட்டுக்கை அம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும். கொல்லிமலை தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பழங்குடி மக்கள் கொல்லிமலை சந்தை நடத்துகிறார்கள். இங்கு காட்டில் உள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை சாமான்கள், தேன், காப்பி மற்றும் மருந்து சாமான்கள் எந்தவித புரோக்கர் இல்லாமல் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. ராசிபுரம் - தம்மம்பட்டி - சேலம் இங்கிருந்து கொல்லி மலைக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மலைப்பாதை நீளம் 26 கிலோமீட்டர் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பழங்குடி மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
வாழ்க்கையில் ஒரு முறை ஏனும் இந்த கொல்லிமலை அழகை கண்டு ரசிக்க வேண்டும்