
சென்னையின் வழக்கமான சுற்றுலா தலங்களைைத் தாண்டி தனித்துவமான அனுபவங்களை வழங்கும் பல குறைத்து மதிப்பிடப்பட்ட இடங்கள் உள்ளன. அதிகம் அறியப்படாத இடங்களை ஆராய்வது நகரத்தின் வளமான வரலாறு, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும். இயற்கை ஆர்வலர்களுக்கு புலிகாட் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவை அமைதியான பயணங்களை வழங்குகின்றன. ப்ரோக்கன் பிரிட்ஜ் ஒரு தனித்துவமான புகைப்பட இடத்தை வழங்குகிறது.
புலிகாட் ஏரி (Pulicat Lake):
புலிகாட் ஏரி பழவேற்காடு ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றாகும். வங்காள விரிகுடாவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா தீவால் பிரிக்கப்பட்ட ஒரு அழகிய சுற்றுலாத்தலமாகும். இப்பகுதியின் இயற்கை அழகும், அமைதியான சூழலும், வரலாற்று சிறப்பும், சுற்றுச்சூழல் முக்கியத்துவமும் இதனுடைய முக்கிய சிறப்புகளாகும்.
பறவைகள் சரணாலயம்:
புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயமாகவும் செயல் படுகிறது. இங்கு குளிர்காலத்தில் பலவகையான இடம்பெயரும் பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு ஏராளமான வலசை வரும் பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகள் வாழ்கின்றன. கிங்ஃபிஷர்கள், நாரைகள் மற்றும் ஃபிளமிங்கோக்கள் போன்ற பலவகைப் பறவைகளை இங்கு காணலாம். இந்த ஏரி ஸ்ரீஹரிகோட்டா தீவால் வங்காள விரிகுடாவில் இருந்து பிரிக்கப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்தில் இங்கு விதவிதமான பறவைகளைைக்காண முடியும். குறிப்பாக ஃபிளமிங்கோக்கள் ஏரிக்கு அடுத்துள்ள சதுப்பு நிலங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
குடிசைத் தொழில்:
மென்மையான பனை ஓலைகளைக்கொண்டு பனை ஓலைகளில் இருந்து உருவாக்கப்பட்ட தொழில்முறை சேவைகள் மற்றும் நேர்த்தியான பொருட்களை அருகிலுள்ள பனை ஓலை கூட்டுறவு சங்கம் ஏற்றுமதி செய்கிறது.
வெள்ளை மற்றும் புலி இறால், ஜெல்லி மீன்கள், பின்மீன்கள் ஆகியவற்றுடன் கடல் உணவு ஏற்றுமதிக்கான செழிப்பான மையமாகவும் உள்ளது.
வரலாற்று சிறப்பு:
17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் முக்கிய வணிக இடமாக இருந்த பழவேற்காடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். இது டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வர்த்தக மற்றும் ஆட்சியிடமாக இருந்ததால் இது ஒரு வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும். இந்தியாவின் முதல் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி ஒடிசா மாநிலத்தில் உள்ள சில்கா ஏரியாகும்.
இந்த புலிகாட் ஏரி பல்வேறு வகையான பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. பறவை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது சென்னைக்கு வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக ஆந்திர பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. இது 759 சதுர கிலோமீட்டர்(293 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
இரண்டு ஆறுகள் ஆரணி ஆறு மற்றும் கலங்கி ஆறு இந்த ஏரிக்கு நீரை வழங்குகின்றன. இந்த ஏரி வளமான தாவரங்கள் மற்றும் விலங்கின பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. இங்குள்ள பல கிராமங்களில் மீன் பிடித்தல் முக்கிய தொழிலாகும்.
ஈர நிலங்களை பாதுகாக்கும் சர்வதேச ஒப்பந்தமான ராம்சார் தளத்தின் கீழ், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாகவும் இது கருதப்படுகிறது. ஏரியின் அமைதியான நீரில் படகில் பயணம் செய்வது, பறவைகளைப் பார்ப்பது, இயற்கை அழகை ரசிப்பது போன்ற ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.