
வருடத்திற்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் பார்த்த இடங்களுக்கே செல்லாமல் புதிதாக இடங்களுக்கு செல்வது புத்துணர்ச்சி அளிக்கும். அனைவரும் செல்லும் இடங்களை விட்டு புதிய நாடுகளை தேர்ந்தெடுக்கும்போது ஒருவித இனம் புரியாத பரபரப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அந்த வகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத நாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தென்கிழக்கு ஆசியாவின் திமோர் கடலின் வடக்கில் மலாய் தீவுக் கூட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்த தீவான திமோரில் அழகான நிலப்பரப்புகளுடன் சாகச பிரியர்களையும் ஆழ்கடல் நீச்சல் வீரர்களையும் வெகுவாக ஈர்க்கும் இடங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த நாடாக ,அதாவது 2023ல் 81,000 பார்வையாளர்கள் மட்டுமே வந்துள்ளதால் பரபரப்பின்றி பார்க்க வேண்டிய நாடுகளின் வரிசையில் உள்ளது.
பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய்க்கு நடுவில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான துவாலு, உலகின் நான்காவது மிகச்சிறிய நாடாக உள்ளது. ராணுவ படைகள் இல்லாத நாடாகவும், குற்ற செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடாகவும், அரசியல் கட்சி ஏதும் இல்லாத நாடாகவும் ,ஒன்பது பவளத் தீவுகளை கொண்ட நாடாகவும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது. 2023 ல் 3,136 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இங்கு வந்துள்ளதால் கோடை விடுமுறைக்கு ஏற்ற சிறந்த நாடாக உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கரீபியன் நாடாக இருக்கும் அங்கியுலா அற்புதமான கடற்கரை வளங்களை கொண்டுள்ளதால், உலகில் உள்ள பல பிரபலங்கள் தங்களுக்கேற்ற சுற்றுலா இடமாக அங்கியுலாவை தேர்வு செய்கின்றனர். .2024ம் ஆண்டு முதல் 5 மாதங்களில் சுமார் 98,052 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஆகவே பிரபலங்கள் பார்த்து ரசிக்கும் பிரபலமடையாத தீவாக இருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் மேற்கு கடற்கரையில் உள்ள நாடான சியாரா லியோன் அற்புதமான கடற்கரைகளை கொண்ட நகரமாக இருக்கிறது .2021ல் இங்கு 44 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். ஆகவே இந்த வருட சுற்றுலாவிற்கு ஏற்ற இட நெருக்கடி இல்லாத நாடாக இது உள்ளது.
மடகாஸ்கர் மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள கொமொரோஸ் தீவு செயல்படும் எரிமலைகள் ,வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகளைக் கொண்டுள்ளதால் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அதிகம் விரும்பப்படும் இடமாக இருக்கிறது. 2021 இல் 29,000 சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை புரிந்துள்ளதோடு மே மாதம் இதமான கால நிலை நிலவும் என்பதால் விடுமுறைக்கு விசிட் செய்ய வேண்டிய இடமாக உள்ளது.
பிரெஞ்சு கலாச்சாரத்தையும் சீனா மற்றும் வியட்னாமின் சமையல் முறைகளையும் கொண்டு தனித்துவமான உணவு முறைகளை பின்பற்றும் பிரெஞ்சு கயானா நாடு, தென் அமெரிக்காவிலேயே குறைவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக உள்ளது. 2017ல் 1,11,000 பார்வையாளர்கள் மட்டுமே இங்கு வருகை தந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக ரசிக்கும் இடமாக உள்ளது.
மேற்கூறிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அமைதியையும், மன நிறைவையும் ஒருங்கே பெறலாம்.