
தெரியாத இடங்களுக்கு பயணிக்கும்பொழுது அங்கு மிகவும் தெரிந்த பரிட்சயமான தோழிகளுடன் சென்று அவர்கள் பார்த்து ரசித்த முக்கியமான இடங்களை அவர்கள் வாய்வழியாகக் கூறக் கேட்டு அதனை நாம் பார்த்து மகிழ்வதில் ஒரு அலாதி ஆனந்தம் ஏற்படுவது உண்டு. அதுபோல் கொல்கத்தாவில் இருந்து ஜார்கண்ட் அங்கிருந்து ஜாம்ஷெட்பூர் சென்று அங்கிருந்து காரிலேயே எல்லா இடங்களிலும் பயணித்தபோது கண்ட கண்கொள்ளா காட்சிகள்.
ஜாம்ஷெட்பூரை எங்கெங்கு நோக்கினும் பூக்களடா என்று பாடலாம். அந்த அளவுக்கு சிரித்து வரவேற்றது செழித்து மர்ந்திருந்த பூக்கள். அப்படி செழிப்பதற்கு காரணம் இரும்பு சத்து அந்த மண்ணில் கலந்திருப்பதால்தானோ என்று தோன்றியது. ஆம் ஜாம்ஷெட்பூரை எஃகு நகரம் என்றுதானே அழைக்கிறார்கள். அதேபோல் எந்த இடத்தை பார்த்தாலும் டாடா பெயர் இருப்பதை காணமுடிந்தது.
புவனேஸ்வரி கோவில்
ஜாம்ஷெட் பூரில் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கரங்காஜர் சந்தை புவனேஸ்வரி கோயில். பொதுவாக டெல்கோ புவனேஸ்வரி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இச்சன்னதியில் சிவன், கிருஷ்ணர் மற்றும் பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
திம்னா ஏரி
இந்த ஏரியின் அழகை சிலாகித்துக் கூறுவதன் காரணம் இது ஒரு செயற்கையான ஏரி என்பதால்தான். இதன் தெளிந்த நீர் மற்றும் அழகிய இயற்கை காட்சிகள், மனதை நிறைக்கும் படியாக உள்ளது .மேலும் இதில் விளையாடும் நீர் விளையாட்டுகள், மலைகளுக்குப் பின்னால் உதித்தெழும் சூரியனின் அரிய காட்சிகள், பசுமையான தாவரங்கள், பறவைகளின் கீதம் ஆகியவை இந்த ஏரியில் காணத்தக்க சிறப்பு மிக்க காட்சிகள் ஆகும்.
நதிகள் சங்கமம்
இங்கு சுபர்நேகா மற்றும் டோமோ ஹானி என்ற இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைதி நிலவுகிறது மேலும் இவ்விடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் செழிப்பான தாவரங்கள் உள்ளதால் அமைதியான சூழல் நிலவுகிறது இங்கு சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது மிகவும் இனிமையான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஜாம்ஷெட் பூரின் ஒரு பகுதியாக இருக்கும் சோனாரியில் இந்த ஆறுகளின் சங்கமும் அழகை ஆராதிக்கிறது. இதனை ஒரு சிறிய வாகா என்று என் தோழி கூறினார். காரணம் இதன் ஒரு பகுதியில் இந்துக்களும் ஒரு பகுதியில் முஸ்லிம்களும் இருப்பதால் அப்படி கூறுவதாக கூறினார்.
பாட்டியா பூங்கா
இது சுவர்நேகா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது .இதில் புல்வெளிகளும், மலர்படுக்கைகளும் உள்ளதால் வார இறுதி நாளை கழிப்பதற்கு மக்கள் கூடுகின்றனர். சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற இடமாக உள்ளது. இதன் அருகில் சண்டி பாபா மந்திர் உள்ளது .அங்கு மாலை நேர வழிபாடு சிறப்பாக இருக்கும் .இது ஒரு பரந்த, அழகிய, ஏராளமான, பசுமையான தாவரங்களையும் கொண்டுள்ளது. ஜாம்ஜெட்பூர் நகரத்தில் உள்ள குவால் பாராவுக்கு அருகில் பாட்டியா பூங்கா உள்ளது.
ஜூபிலி ஏரி
இந்த அழகான ஜூபிலி ஏரி ஜாம்ஷெட்பூர் நகரில் மத்தியில் காணப்படுகிறது. இதன் அனைத்து பக்கங்களிலும் டாட்டா ஸ்டீல் வசதிகளால் சூழப்பட்டுள்ளன. இதில் மிருக காட்சி சாலை, மற்றும் லேசர் லைட் தியேட்டர் உள்ளது. இந்த ஏரி படகு சவாரிக்கும் ,மீன் பிடிக்கவும் உகந்ததாக இருக்கிறது. இதனால் நகரின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.
பழங்குடியினர் கலாச்சார மையம்: சந்தால், பழங்குடியினரின் மாறுபட்ட வளமான கலாச்சாரங்களை பாதுகாப்பதே இதன் நோக்கம். பாபா தில்கா மாஜி, பிர்காமுண்டா மற்றும் சிதோ கன்ஹு போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெரிய சிலைகள் மையத்தில் காணப்படுகின்றன. உட்புற களஞ்சியத்தில் கலை பொருட்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பழங்கால பொருட்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆஷியான தோட்டத்தில் பழங்குடியினர் கலாச்சார மையம் உள்ளது.
அமதுபி கிராமப்புற மையம்
ஜாம் ஷெட்பூர் கிராமபுற சமூகத்தின் தாயகம் .அதனால் இங்குள்ளோர் அலங்கரிக்கப்பட்ட காளை மாட்டு வண்டிகளில் அவர்களின் உள்ளூரில் தயாரிக்க பட்ட பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தின் காட்சிகளை எடுத்துச் சென்று அமதுபி கிராமப்புற மையத்தில் சேர்க்கிறார்கள். இங்கு பட்கரின் வரைபடங்கள் மிகவும் புகழ்பெற்றவை. மேலும் இந்த இடத்தில் நடக்கும் இந்த சந்தை நம் ஊரில் மாட்டு பொங்கல் அன்று மாடுகள் ஒன்று சேர்வது போல் இருக்கும் என்று கூறினார். அலங்கரிக்கப்பட்ட காளைமாடுகளின் அணிவகுப்பு அப்படி ஒரு அழகைத்தருகிறது.