
இரண்டு குடும்பங்கள் சேர்ந்து குழந்தைகளுடன் ஃபிலிம் சிட்டி பார்க்க கிளம்பிய பொழுது, அந்த காலத்தில் எப்பொழுதாவது வருடத்திற்கு ஒருமுறை சினிமா பார்ப்பதற்கு கிளம்பி போகும் பொழுது ஏற்படும் குதூகலம் எப்படி இருக்குமோ அதேபோன்ற மனோபாவம் தான் அன்று இருந்தது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது ராமோஜி ஃபிலிம் சிட்டி. கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவுக்கு பல திரைப்படங்களை எடுத்து முடிப்பதற்கான ஓர் உலகமே உருவாக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்த பொழுது தான் அறிய முடிந்தது.
உலகின் மிகப்பெரிய திரைப்படப்பிடிப்பு வளாகமாக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது ராமோஜி ஃபிலிம் சிட்டி. திரைப்பட தொழில்நுட்பம், கட்டடக்கலை, தோட்டக்கலை துறை ஆகியவற்றில் உலகின் தலைசிறந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது இத்திரைப்பட நகரம்.
மேலும் மாநில வாரியாக கிராமம், நகரத்து தெருக்கள் தொடங்கி ரயில் நிலையம், விமானதளம், காவல் நிலையம், கோவில், தேவாலயம், மசூதி, அரசவை தர்பார், சிறைச்சாலை, ஊட்டி மலர் பூங்கா, ஜெய்பூர் அரண்மனை, கேரள வனப்பகுதி, டெல்லி மொஹல் கார்டன், லண்டனில் உள்ள பிரின்சஸ் தெரு, ஜப்பான், தாய்லாந்தில் பாரம்பரிய கட்டடங்கள் வரை சிறிதும் மாற்றமின்றி அமைக்கப் பட்டுள்ளது வியப்புக்குரியது.
விமானதளத்துக்குள் சென்ற குழந்தைகள் சீட்டில் அமர்ந்துவிட்டு வெளியில் எழுந்து வரவே மனமின்றி வந்தார்கள்.
மேலும் கிராமத்து தெருக்களை பார்க்கும் பொழுது கோழிகள் ஓடி வருவது இயற்கையாகவே ஒரு கிராமம் இருப்பது போன்று தோன்றியது. சினிமாவுக்காக ஏற்படுத்தப்பட்டது போன்று தோன்றவில்லை. அவ்வளவு ஒரு நேர்த்தியை அதில் காண முடிந்தது. மேலும் மசூதி, சேவாலயம், கோயில் போன்றவற்றை ஒரே வளாகத்துக்குள் பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது அது.
அங்கு சென்று சுற்றிப் பார்க்க செல்லும் நம் போன்ற பொது மக்களுக்குத் தேவையான தீம் பார்க்குகளில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், உயர்தர உணவு விடுதிகள் ஹோட்டல்கள், நடனம், சாகச நிகழ்ச்சிகள் என்று உற்சாகமாகவும் உபயோகமாகவும் தங்கள் பொழுதை கழிக்கும் இடமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளது. அதற்குள் சென்றுவிட்டால் சினிமாக்காரர் களுக்குதான் என்றில்லை. பொதுமக்களாகிய நமக்கும் அது ஒரு புது உலகம்தான். மாய உலகம் என்று கூட சொல்லலாம்.
காலையில் புறப்பட்டு சென்றோமானால் அங்கு காலை டிபன், மதிய சாப்பாடு இடையிடையே ஸ்னாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உல்லாசமாக ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்த்து விதவிதமாக போட்டோக்களை எடுத்துக்கொண்டு திரும்பலாம். நாடகமோ சினிமாவோ ஏதோ ஒன்று ஷூட்டிங் நடந்த வண்ணமே இருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் ஏதும் இன்றி சினிமா எவ்வாறு உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் எத்தனை உழைப்பு இருந்தது என்பதை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள சினிமா மேஜிக் அரங்கமும் அதனுடன் கூடிய அனைத்து விஷயங்களும். அங்கு பெயிண்ட் அடித்து புதிதாக இருந்த சுவற்றின் மீது, புதிதாக வேறு ஒரு பெயிண்ட் அடிப்பதை பார்த்த குழந்தைகள் நன்றாகத்தானே இருக்கிறது.
இதன் மீது எதற்கு வேறு வண்ணம் பூசுகிறார்கள் என்று கேட்க, வேறு சூட்டிங் நடப்பதாக இருக்கும். அதற்கு வேற கலர் வேண்டும் அல்லவா? லொகேஷனை மாற்றுவதற்குதான் அப்படி செய்கிறார்கள் என்று கூறினோம். இப்படி மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வேலை நடந்துகொண்டே இருக்கிறது அங்கு.
தெலுங்கானாவை சுற்றிப் பார்க்க செல்பவர்கள் ராமோஜி ஃபிலிம் சிட்டியை பார்ப்பதற்கென்றே ஒரு நாளை செலவழிக்கலாம்.
தாய்லாந்துக்கு சென்று ஒவ்வொரு இடத்தையும் சுற்றி பார்க்கும் பொழுது அந்த பாரம்பரிய கட்டிடங்கள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கண்டு களித்ததை ஞாபகத்திற்கு கொண்டு வரும். இப்படி வாழ்நாள் முழுவதற்குமான ரீசார்ஜ் செய்து கொண்ட திருப்தி அதில் கிடைக்கும்.