
விடுமுறை நாட்களில் அப்போதுள்ள காலநிலை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து அதற்கேற்ப எங்கு செல்வது என முதலில் திட்டமிடவும். பயணம் மேற்கொள்ளும் பொழுது என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்வது பயணத்தை எளிதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்கும்.
பயணத்திற்கான பேக்கிங்:
பயணத்துக்கான பேக்கிங்கை நேர்த்தியாக செய்ய முதலில் ஒரு பேக்கிங் பட்டியலை உருவாக்க வேண்டும். இது ஓவர் பேக்கிங்கை தவிர்ப்பதுடன் தேவையானவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல உதவும். என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதாக இருந்தால் அவர்களுக்கு தேவையான முதலுதவி பெட்டி, ஆடைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பயணத்தின் நோக்கத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும்.
ஆடைகள்:
எத்தனை நாட்கள் பயணமோ அதற்கேற்ப துணிகளை எடுத்து வைக்க வேண்டும். பயணத்தின் நோக்கத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக கோடைக்கால பயணத்துக்கு என்றால் இலகுவான ஆடைகளை எடுத்துச்செல்லலாம். குளிர் மிகுந்த இடத்திற்கு செல்வதாக இருந்தால் அதற்குத் தேவையான தெர்மல் வியர், ஜெர்கின், ஸ்வட்டர், உல்லன் சாக்ஸ், உல்லன் தொப்பி, கிளவுஸ் என தேர்வு செய்வது அவசியம்.
காலணிகள்:
பயணிக்கிற இடத்தைப் பொறுத்து ஷூ அல்லது செருப்பை தேர்ந்தெடுக்கலாம். பொதுவாகவே ஷூ அணியும்பொழுது நிறைய தூரம் நடப்பதற்கு ஏதுவாக இருக்கும். குளிர் பிரதேசத்திற்கு செல்வதாக இருந்தால் ஷூ அணிவது அவசியம். அத்துடன் அதற்கான ஷூவாக பார்த்து வாங்கி அணியவேண்டும்.
சுருக்கம் இல்லாத மடிப்பு:
ஆடைகளை சுருக்கமில்லாமல் மடித்து வைக்க பேக்கிங் க்யூப்ஸை (packing cubes) பயன்படுத்தலாம். இது ஆடைகளை ஒழுங்கமைக்கவும், இட வசதியை அதிகரிக்கவும் உதவும். பயணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடைத்து வைப்பதற்கு Eume World போன்ற பைகளை பயன்படுத்தலாம்.
ஃபோன் சார்ஜர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள்:
ஃபோன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டதால் ஒருநாள் பயணமாக இருந்தாலும் கூட போன் சார்ஜர், அடாப்டர் போன்றவை அவசியம். லேப்டாப், கேமரா, அதற்கான சார்ஜர்கள், பவர் பேங்க் போன்றவற்றை கொண்டு செல்வது மிகவும் அவசியம்.
கனமான பொருட்களை பயன்படுத்துதல்:
விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தால் கனமான காலணிகள் மற்றும் ஜெர்கின் போன்ற கனமானவற்றை அணிந்துகொண்டு இலகுவான காலணிகளையும், மேல் உடைகளையும் சூட்கேஸில் அடைத்து வைக்கலாம்.
கழிவறை பொருட்கள்:
எவ்வளவு நாட்கள் செல்கின்றோமோ அதற்கு தகுந்த ஷாம்பு பாக்கெட்டுகள், சோப்பு போன்றவற்றை பயண அளவு பாட்டில்களில் மாற்றி கசிவைத் தடுக்க அவற்றை தனியாக ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்லலாம். பேஸ்ட், பிரஷ், டியோடரன்ட், ஹேர் ஆயில் போன்றவற்றை எடுத்துச்செல்லவும்.
சரும பராமரிப்பு பொருட்கள்:
தட்பவெட்ப நிலை மாறும்போது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க சருமத்தை பராமரிக்க தேவைப்படும் கிரீம்கள், சன்ஸ்க்ரீன், பாடிலோஷன், உதடு வெடிப்புக்கு லிப்பாம் போன்றவற்றை எடுத்துச்செல்வது அவசியம்.
பிற அத்தியாவசிய பொருட்கள்:
காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துச்செல்வது மிகவும் அவசியம். பெண்களின் அவசியத் தேவையான சானிட்டரி நாப்கின்களை எடுத்துக்கொள்வதுடன், தொடர் பயணத்தில் சில சமயம் முகம் கழுவக்கூட வாய்ப்பில்லாத அளவுக்கு இருக்கும் சமயம் முகத்தை துடைத்துக்கொள்ள வெட் டிஷ்யூஸ் எடுத்துக்கொள்வதும் மிகவும் அவசியம்.
கிளம்புவதற்கு முன்பு செக் லிஸ்ட் செய்தவற்றையெல்லாம் எடுத்து வைத்துவிட்டோமா என்பதை ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள். இவ்வாறு திட்டமிட்டு பயணத்தை மேற்கொண்டால் பயணம் மிகவும் இனிமையாக இருக்கும்.