
மலைப்பகுதிகளில் மலையேற்றம் (ஹைகிங்), மலை ஜீப் சஃபாரிகள், வனவிலங்கு சஃபாரிகள், கேம்பிங், பைக்கிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் போன்ற பல சாகச விளையாட்டுகள் உள்ளன. இவை நமக்கு உற்சாகமான அனுபவத்தையும், இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பையும் தருகின்றன.
மலைப்பகுதிகளில் செய்யக்கூடிய சாகசங்கள்:
மலையேற்றம் (Hiking/ Trekking):
இது மலைகளின் அழகிய பாதைகளில் செல்லும் நடைப்பயணம் மேற்கொள்வதாகும். மன அழுத்தத்தை குறைத்து உடலையும், மனதையும் புத்துணர்ச்சியூட்டும். 'ஹைகிங்' என்பது குறைவான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மலை ஏறி இறங்கிவிடும் வகையாகும். 'ட்ரெக்கிங்' என்பது முறையான பாதை இல்லாத மலையில் சற்று பெரிய பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் போன்ற சில அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச்சென்று இரண்டு முதல் சில நாட்கள் வரை மலையேறுவது.
மலை ஜீப் சஃபாரி (Jeep Safari):
மலைப்பகுதிகளில் கரடு முரடான சாலைகளில் ஜீப் சஃபாரி செய்வது ஒரு விறுவிறுப்பான த்ரிலிங்கான அனுபவத்தைத் தரும். அடர்ந்த காடுகள், தேயிலைத் தோட்டங்கள், பனி மூடிய சிகரங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் வனவிலங்குகளைக் கண்டு ரசிக்கக் கூடிய ஒரு சாகச பயணமாகும். இது இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது. உயரமான மலைப்பாதைகள் வழியாக ஜீப்பில் பயணம் செய்வது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்.
வனவிலங்கு சஃபாரி:
காடுகளில் உள்ள வனவிலங்குகளையும், பறவைகளையும் காணும் வாய்ப்பை இந்த வனவிலங்கு சஃபாரி வழங்குகிறது. காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காணவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு தேசிய பூங்காக்கள் அல்லது வனவிலங்கு சரணாலயங்கள் போன்ற இடங்களில் விலங்குகளைக் காண்பது ஒரு சிலிர்ப்பான அனுபவங்களைத்தரும்.
கேம்பிங்:
மலைப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்குவது இயற்கையோடு ஒன்றிணைந்து நேரத்தை செலவிட சிறந்த வழியாகும். பாதுகாப்பான மற்றும் இயற்கையை ரசிக்க கூடிய இடத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். கேம்பிங் என்பது இயற்கையை ரசிக்கவும், சாகச நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஒரு சிறந்த வழியாகும். இதற்கு தேவையான உபகரணங்கள், தங்குமிடங்கள், பாதுகாப்பான் இடங்கள் பற்றி திட்டமிடுவது முக்கியம். கேம்பிங்கின் போது சூரிய உதயத்தை காண்பது, இயற்கை ரசிப்பது, மலையேற்றம் செய்வது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
மலை பைக்கிங்:
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மலை பைக்கர்கள், கரடு முரடான பாதைகளில் பயணிக்க வசதியாக சஸ்பென்ஷன், அகலமான டயர்கள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். கரடு முரடான நிலப்பரப்புகளில் சிறப்பு பைக்கை பயன்படுத்தி சாகசமாக ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சியாகும். மலைப்பகுதிகளில் பைக்கிங் செய்வது இயற்கையின் சவால்களை எதிர்கொள்ளவும், இயற்கையை அனுபவிக்கவும் ஒரு சிறந்த வழியாகும்.
மன அமைதிக்கும், உற்சாகத்திற்கும் வழிவகுக்கும் மலை சாகசங்கள் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் மலைப்பகுதிகளில் சாகசங்கள் செய்யும்பொழுது பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, அனுபவம் வாய்ந்த வழிகாட்டியுடன் செல்வது நல்லது.