

தனிமையை விரும்பும் பயணிகளுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் ஃபௌலா தீவு ஒரு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இயற்கை அழகை விரும்பும் அனைவருக்குமே இந்த ஃபௌலா தீவு ஒரு சொர்க்கமாகும். இந்த அழகான தீவு ஒரு தனித்துவமான குதிரைகள் மற்றும் செம்மறி ஆடுகளின் தாயகமாக விளங்குகிறது. இங்குள்ள வனவிலங்குகளும் மிகவும் அரிதானவை.
இத்தீவு ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்ற இடமாக உள்ளது. ஷெட்லேண்டின் (Shetland) மேற்கு பகுதியில் உள்ள வால்ஸ் (Walls) கிராமத்திலிருந்து வாரத்திற்கு மூன்று முறை படகு இயக்கப்படுகிறது. இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்வது அவசியம். ஃபௌலா விமான நிலையம் உள்ளது. விமானம் மூலமும் இப்பகுதியை அடையலாம். ஷெட்லேண்டிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் படகு சவாரி செய்து இத்தீவை அடையலாம்.
பிரிட்டனில் உள்ள ஃபௌலா (Foula) தீவு ஸ்காட்லாந்தின் ஷெட்லாண்ட் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய ராஜ்ஜியத்தின் மிகவும் தொலைதூர, மக்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்றாகும். ஷெட்லாண்ட் மெயின்லேண்டில் இருந்து சுமார் 20 மைல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இது மிகவும் தொலைவில் உள்ள தீவு என்பதால் 'உலகின் விளிம்பில்' இருப்பதாக கருதப்படுகிறது. பிரிட்டனின் மிக உயரமான, செங்குத்தான கடற்பாறைகளில் ஒன்றான 'டா கேம்' (Da Kame) சுமார் 1,233 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
ஏராளமான கடற்பறவைகள் கொண்டு 'பறவைகளின் தீவு' என்று அழைக்கப்படும் இங்கு அரிய வகை கடல் பறவைகளான பஃபின்கள் (Puffins) மற்றும் உலகின் மிகப்பெரிய கிரேட் ஸ்குவா (Great Skua) பறவை கூட்டங்கள் காணப்படுகின்றன. இத்தீவு வெறும் 5 சதுர மைல்கள் மட்டுமே கொண்டது. இதில் சுமார் 35 பேர் வசிக்கின்றார்கள்.
இங்கு பப்கள், கடைகள், பார்கள், வைஃபை அல்லது தேசிய மின் இணைப்பு என்று எதுவும் இல்லை. சூரிய சக்தி மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு படகு அல்லது சிறிய விமானம் மூலம் மட்டுமே பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு ஹோட்டல்கள் இல்லை. தீவில் தங்குவதற்கு மிகக் குறைவான இடங்களே உள்ளன. எனவே Foula Heritage போன்ற தளங்கள் மூலம் தங்குமிடங்களை முன் கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அங்கு கடைகளோ, உணவகங்களோ கிடையாது. எனவே தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வது நல்லது.
பறவை கண்காணிப்பு மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். ஷெட்லாண்ட் குதிரைகளின் தாயகமான இங்கு, மக்களைவிட குதிரைகள் அதிகம். இத்தீவு தனித்துவமான நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இசை பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஃபௌலா தீவு ஷெட்லேண்ட் தீவுகளின் ஒரு பகுதியாக இருப்பதால், ஷெட்லாண்டின் மற்ற தீவுகளுக்கான பயணத்திட்டங்களையும் இத்துடன் சேர்த்து திட்டமிட்டு சென்றுவரலாம்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரிட்டனின் ஷெட்லேண்ட் தீவுகளில் இருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ள சிறிய தீவான ஃபௌலா தீவு மக்கள் இன்றும் பழைய ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றுகிறது. கிமு 46 இல் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாட்காட்டி, மேற்கத்திய நாடுகளால் சுமார் 1600 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும் 1752 இல், பிரிட்டன் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக நாட்காட்டியில் 11 நாட்கள் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் ஃபௌலா தீவின் மக்கள் பழைய ஜூலியன் நாட்காட்டியை தொடர்ந்து பயன்படுத்தினர். 1900 ஆம் ஆண்டு ஏற்பட்ட லீப் இயர் மாற்றங்கள் காரணமாக, இரண்டு நாட்காட்டிகளுக்கும் இடையே 12 நாட்கள் வித்யாசம் இருந்தது. இதன் விளைவாக இத்தீவில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.