

பிச்சாவரம் அலையாத்தி காடு என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி (சதுப்பு நிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) காடாகும். பித்தர்புரம் என்ற பெயரே பிச்சாவரம் என்று மருவியதாக கூறப்படுகிறது.
இது சுமார் 1,100 ஹெக்டேர் (சுமார் 2,800 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான சிறிய நீர் வழிகளும், உப்பு நீர் கால்வாய்களும் உள்ளன. சுனாமியிலிருந்து கரையைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக இது திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீர் வழிகளுக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பெயர் பெற்றது.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் வனமானது இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரம், வடக்கில் வெள்ளாறும், சரணாலயத்திற்கு தெற்கில் கொள்ளிட கரையோரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த உப்பங்கழிகள் உப்பு நீர்ப்பாசனம் மற்றும் பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளை உருவாக்குகிறது. அடர்ந்த சதுப்பு நில மரங்களுக்கு இடையே படகு சவாரிக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட இயற்கையான நீர் வழிகளும், சிறிய தீவுகளும் உள்ளன.
காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், உணவகம் என பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் உள்நாட்டு மற்றும் பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் உட்பட 177-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வந்து செல்கின்றன. குறிப்பாக நவம்பர்-ஜனவரி பறவைகளைக் காண்பதற்கு சிறந்த காலமாகும்.
கடல் அரிப்பு, புயல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் அரணாக இந்த அலையாத்தி மரங்கள் (mangrove) செயல்படுகின்றன. இந்தியாவிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்து சுந்தரவனக் காடுகள் சுற்றுலாத்தலமாக இருப்பது இங்குதான்.
இங்கு மொத்தம் 18 வகையான மரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. ரைஸ்சோபோரா (Rhizopora), அவிசினியா போன்ற 18 வகையான மரங்கள் இங்குள்ளன. நீண்ட நெடுநீர் வழிப்பாதை, நாலாபுறமும் எழில் கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கை சூழ அமைந்திருக்கும் இந்த பிச்சாவரம் அலையாத்திக் காட்டிற்கு சுற்றுலா சென்றுவர மன மகிழ்ச்சி உண்டாகும். இங்கு கயாகிங், படகு சவாரி போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன.
படகு சவாரி நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. டிக்கெட் பெரும்பாலும் மாலை 4 மணி வரை மட்டுமே வழங்கப்படும். மதிய வெயிலைத் தவிர்க்கவும், பறவைகளை ரசிக்கவும் காலை நேரம் மற்றும் மாலை நேரம் மிகவும் சிறந்தது.
நபர் ஒருவருக்கு ரூபாய் 100 நுழைவு கட்டணமும், வாகனம் நிறுத்துவதற்கு ரூபாய் 50-ம் வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகில் நபர் ஒருவருக்கு ரூபாய் 75 வரையிலும், அதில் 5 பேர் வரை செல்லலாம். மோட்டார் படகில் 6 நபர்களுக்கு சுமார் 2,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
சிறந்த நேரம்:
குளிர்காலம் பிச்சாவரம் செல்வதற்கு சிறந்த பருவமாகும். இக்காலகட்டத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை தரும். அத்துடன் வானிலை மிகவும் குளுகுளுவென்று இருக்கும்.
செல்லும் வழி:
கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் சிதம்பரத்தில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பிச்சாவரத்திற்கு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் சிதம்பரம். அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் படகு இல்லத்தை அடையலாம்.