ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி முதல் கோல்கொண்டா வரை: ஹைதராபாத் பயணத்தின் ஏ டூ இஸட் (A-Z) கையேடு!

கைதட்டல் ஒலி கேட்கும் கோட்டை, மணி அடிக்காத கோவில் - ஹைதராபாத்தின் ஆச்சரியங்கள்!
ஹைதராபாத் சுற்றுலா|a bus in ramoji film city
ஹைதராபாத் சுற்றுலாAI image
Updated on

பட்ஜெட் விலையில் ஹைதராபாத் சுற்றுலா: ஃபிலிம் சிட்டி ஏசி பஸ் பேக்கேஜ் விவரங்கள்!

ஹைதராபாத்தை, ஹாயாக சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. முத்துக்களின் நகரம் என்றால் சும்மாவா? ஹைதராபாத்தில் முக்கியமான சில இடங்களை, நாம் வலம் வந்து கண்டு ரசிக்க வேண்டியது அவசியம்.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி:

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி, ஹாலிவுட்டைவிடச் சிறப்பானதெனக் கூறப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தனியார் நிறுவனமாகிய ஃபிலிம் சிட்டி, நிறுவனராகிய ராமோஜிராவ் பெயராலேயே அழைக்கப்படுகிறது. திரைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் கொண்டது. இதைக் காண உலகமெங்கிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

ஃபிலிம் சிட்டிக்குள் ஜப்பானியத் தெரு, லண்டன் தெரு, ரெயில் நிலையம், விமான நிலையம் தவிர, விளையாட பல வகை சாகச விளையாட்டுகள், விதவிதமான மலர்த்தோட்டங்கள், குழந்தைகள் பூங்கா போன்றவைகள் உள்ளன. மேலும், நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவைகள் நடைபெறுகின்றன.

ஒரு நாள் சுற்றுலாவிற்கு பதிவு செய்து கொண்டால், ஏ.சி. பேருந்து மூலமாக, ஃபிலிம் சிட்டியைச் சுற்றிக் காண்பித்து விடுவார்கள். காலை மணி 8 முதல் இரவு மணி 8 வரை செல்ல கட்டணம் உண்டு. தவிர, சிற்றுண்டி, உணவு, குளிர்பானம் ஆகிய வசதிகளுடன் நாள் முழுவதும் செல்ல மற்றொரு பேக்கேஜ் என பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளன.

சார்மினார்:

நகரின் பரபப்பான பகுதிகளில் உள்ள சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரின் பள்ளி வாசல் மூலைகளில், 56 மீட்டர் உயரமுள்ள நான்கு மினார்கள் உள்ளன. சுமார் 150 படிகள் ஏறி சார்மினாரின் மேல் தளத்தை அடைந்து பால்கனியிலிருந்து நகரத்தின் அழகைக் காணலாம். மிகவும் பரபரப்பாக செயல்படும் சார்மினார் அருகே கார்களை நிறுத்த இடம் கிடையாது. அழகழகான, வண்ணமயமான வளையல்கள் வாங்க ஏற்ற இடம். காலை 9 முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு.

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டையைப் பார்க்க வரும் சுற்றுலாவினர் ஏராளம். 120 மீட்டர் உயரமுள்ள கிரானைட் மலையின் மீது கோல்கொண்டா கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. எட்டு நுழைவாயில்கள் கொண்ட கோட்டையினுள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவைகள் உள்ளன.

ஹைதராபாத் சுற்றுலா|golgonda fort
ஹைதராபாத் சுற்றுலாAI image

வெற்றி நுழைவாயில் எனப்படும் 'பதே தர்வாசா' பிரபலமானது. இந்த நுழைவாயிலில் நுழைபவர்கள், ஒரு குறிப்பிட்ட சதுரத்தின் கீழே நின்று கை தட்டினால், அது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கும். கோல்கொண்டா கோட்டையை அமைத்த மன்னர்களின் பொறியியல் சிறப்பைக் கூறும் வகையில் இருக்கும். இந்த ஒலி அமைப்பினை கைதட்டல் மூலம் உணரலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்துள்ள இதன் கட்டுமானக் கலையின் அற்புதமான அழகு கண்டு ரசிக்க வேண்டியதொன்றாகும்.

ஜாலார் ஜங் மியூசியம்:

மியூசியத்திற்குள், பல்வேறு வகை சலவை மற்றும் உலோகச் சிற்பங்கள், விதவிதமான விரிப்புகள், பீங்கான் ஜாடிகள், இருக்கைகளென சுமார் 40,000க்கும் மேல் பொருட்கள், புத்தகங்கள், கையெழுத்துப் படிகள் மற்றும் அரசர்களின் வாள்கள், தலைப்பாகைகள் என பார்க்க வேண்டியவைகள் அநேகம்.

இங்கே உள்ள கடிகாரங்களுக்கான தனியறையில், 200 ஆண்டு காலம் பழமையான கடிகாரம் ஒன்று, பழுதாகாமல் ஓடிக்கொண்டிருக்கிறதெனக் கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற பலருக்கு ஜாலார் ஜங் மியூசியம் பயனளித்து வருகிறது.

இந்தியாவிலுள்ள மூன்று பெரிய தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றான ஜாலார் ஜங் மியூசியத்திற்குள் புகைப்படம் எடுக்க அநுமதி கிடையாது. நுழைவுக்கட்டணம் உண்டு. நிதானமாக மியூசியத்தைச் சுற்றிப்பார்க்க, குறைந்த பட்சம் நான்கு மணி நேரமாவது வேண்டும்.

பிர்லா மந்திர்:

வெண்மையான சலவைக் கற்களால் ஆன வெங்கடாசலபதி கோவில் இருக்கும் பிர்லா மந்திர், உசைனி சாகர் ஏரியின் தென்கரையிலுள்ள சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ளதைப் போன்ற பாலாஜியை இங்கே தரிசிக்கலாம். நுட்பமான கலை நயமிக்க சிற்பங்களால் முழுக் கோவிலும் நிறைந்துள்ளது. கோவிலில் மணி ஓசை கிடையாது. வெங்கடாஜலபதி சன்னதி தவிர, மற்ற கடவுள்களுக்கும் தனித் தனியாக சன்னதிகள் உள்ளன. பிர்லா மந்திர் அருகே பிர்லா கோளரங்கம், லும்பினி பூங்கா போன்றவைகள் இருக்கின்றன.

உபரித் தகவல்கள்:

ஹைதராபாத்தில், காஜா போன்ற பல்வேறு வகை இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், நல் முத்துக்கள், போச்சம்பள்ளி புடவைகள் பிரபலமானவைகள். இவைகளைத் தரமான கடைகளில் சென்று வாங்குவது அவசியம்.

ஹைதராபாத் சுற்றுலா செல்பவர்களை ஈர்க்கும் உசைன் சாகர் ஏரியின் பிரம்மாண்ட இரட்டை நகரக் காட்சி!

இரட்டைப் பிறவி நகரங்களென அழைக்கப்படுகின்ற ஹைதராபாத்தையும் அதன் வடக்குப் பகுதியிலிருக்கும் செகந்திராபாத்தையும் ஹுசைன் சாகர் ஏரி, நடுவே கம்பீரமாக காட்சியளித்து பிரித்துக்காட்டுவது அற்புதமான ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
பசுமை, அருவி, வியூ பாயிண்ட்: ஆச்சரிய அனுபவங்கள் தரும் நெல்லியம்பதி மலைகள்!
ஹைதராபாத் சுற்றுலா|a bus in ramoji film city

விமானம், ரெயில், சாலை ஆகியவைகள் வழியே ஹைதராபாத் செல்லலாம். ஊருக்குள் சுற்றிப்பார்க்க ஆட்டோ, டாக்ஸி, மெட்ரோ ரெயில்கள், தனியார் வாகனம், அரசு பேருந்துகள் போன்றவைகள் உள்ளன. ஹாயாக, ஹைதராபாத்தின் முக்கியமான இடங்களை, மினி டூர் மூலமாக சுற்றிப் பார்த்துவிட்டு பிரபலமான காஜா ஸ்வீட், போச்சம்பள்ளி புடவை என வாங்கிக்கொண்டு வீடு திரும்புபவர்கள் அநேகம்.

இந்தக் கட்டுரையின் மூலம் ஹைதராபாத் பயணத்திற்கான முறையான பட்ஜெட் திட்டமிடல், போக்குவரத்து வசதிகள் மற்றும் நுழைவுக் கட்டணங்கள் பற்றிய முழுமையான ஏ டூ இஸட் தகவல்களை நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நினைவுகளை மட்டுமே சேகரித்து வர முடியும்.

logo
Kalki Online
kalkionline.com