சமோவா: பசிபிக் பெருங்கடலில் கலாச்சார கிராமங்கள் இணைந்த சொர்க்கத் தீவு!

Payanam Articles
samoa-the-pacific-island
Updated on

மோவா (Samoa) என்பது தென்பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் நியூசிலாந்துக்கு நடுவே அமைந்துள்ள ஒரு அற்புதமான தீவு நாடாகும். இது பாலினேசிய பிராந்தியத்தில் 3,030 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைநகரம் மற்றும் முக்கிய துறைமுகம் அப்பியாவாகும்(Apia).

அடர்ந்த பசுமையான மழைக்காடுகள், எரிமலைக் குகைகள், வியக்க வைக்கும் வனவிலங்கு சரணாலயங்கள், பவளப்பாறைகள் நிறைந்த கடற்கரைகள் மற்றும் அமைதியான ஏரிகளால் வளம் பெற்றுள்ள தீவிது.

சவாய் Savai'i மற்றும் உபோலு (Upolu) ஆகிய இரண்டு பெரிய தீவுகள் மற்றும் மக்கள் வசிக்காத பல சிறிய தீவுகளைக் கொண்ட நாடு இது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கடற்கரைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளைக் கொண்ட அழகான தீவு. இங்கு பார்வையிட சிறந்த இடங்கள் To Sua Ocean Trench (இயற்கை நீச்சல் குளம்), லலோமானு கடற்கரை, பாபாசீயா சரிவுப் பாறைகள் மற்றும் பியுலா குகைக் குளம் என இயற்கை அழகு, சாகசம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இடங்கள் உள்ளன.

To Sua Ocean Trench (உபோலு தீவு):

30 மீட்டர் ஆழமுள்ள பனைமரங்கள் மற்றும் குகைகளுக்கு இடையே அமைந்துள்ள இயற்கையான நீச்சல் குளம்இது. ஒரு பிரபலமான உலகப் புகழ் பெற்ற இயற்கை நீச்சல் குளம். பாறைகளுக்கு நடுவே உள்ள இந்த இடம் ஏணி வழியாக இறங்கி நீந்துவதற்கு மிகவும் ஏற்றது.

லலோமானு கடற்கரை(Lalomanu Beach):

உபோலுவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இது வெள்ளை மணல் மற்றும் படிகத் தெளிவான நீர் கொண்ட அழகான கடற்கரையாகும். சூரியக் குளியல், நீச்சல் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்வதற்கு ஏற்ற இடம் ஆகும் இங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள், ஸ்நோர்கெலிங் செய்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றது. லோன்லி பிளானட் இதழால் உலகின் சிறந்த 10 கடற்கரைச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Payanam Articles
samoa-the-pacific-island

பாபாசீயா சரிவுப் பாறைகள் (Papaseea Sliding Rocks):

இயற்கையாக உருவான சரிவுப் பாறைகள் சமோவாவின் தலைநகரான அபியாவுக்கு அருகில், ஃபலிபுலா(Faleata) மாவட்டத்தில் உள்ள செக்கேயு(Se'ese'e) என்ற இடத்தில் அமைந்துள்ளது. எரிமலைப் பாறைகளால் உருவான ஒரு இயற்கை நீர்ச் சறுக்கு தளமாகும். சிறிய நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் பாய்ந்து, பாறைகளை வழுவழுப்பாக்கி உள்ளதால் அதில் சறுக்கி விளையாடி மகிழலாம்.

சலியாலா எரிமலை வயல்கள் (Saleaula Lava Fields சவாய் தீவு):

சவாய் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான இது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு பெரிய எரிமலை வெடிப்பின் அழிவுச் சான்றாக திகழ்கிறது. மைல் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் கடினமான, கருப்பு நிற எரிமலைப் பாறைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நிலப்பரப்பை விட, நிலவின் மேற்பரப்பு போல காட்சியளிக்கும். சமோவாவின் புவியியல் வரலாற்றை உணர்த்தும் எரிமலைக் குழம்பினால் உருவான நிலப்பரப்பு இது.

பியுலா குகைக் குளம்(Piula Cave Pool):

ஃபாதுமியா குளம் என்றும் அழைக்கப்படும் இது உபோலு தீவின் வடக்கு கடற்கரையில் உள்ள பியூலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு கீழே கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை நன்னீர் குளமாகும். இது குகை போன்ற அமைப்பைக் கொண்டது.

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் அருங்காட்சியகம் (Robert Louis Stevenson Museum):

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் அருங்காட்சியகம் சமோவாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற ஸ்காட்லாந்து எழுத்தாளரின் உடமைகள், வாழ்க்கை அனுபவங்கள், அவரது நூலகம் போன்றவற்றைக் காணலாம். அவர் இங்கு 5 ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். வரலாற்றை அறிய உதவும் புகழ்பெற்ற எழுத்தாளரின் இல்லம் இது.

சமோவா கலாச்சார கிராமம் (Samoan Cultural Village, அபியா): 

அபியாவின் மையப்பகுதியில் உள்ள சமோவா கலாச்சார கிராமம் ஃபா சமோவா(Fa'a Samoa) எனப்படும் பாரம்பரிய வாழ்க்கை முறையை நேரில் அனுபவிக்க உதவும் ஒரு முக்கிய சுற்றுலா இடமாகும். இது சமோவாவின் 3,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமான சமோவான் வாழ்க்கை முறையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கவா விழா, பாரம்பரிய நடனங்கள், உணவு தயாரித்தல்(Umu) மற்றும் கைவினைப் பொருட்களை செய்வது போன்ற செயல்பாடுகளை வழங்குகிறது. சமோவாவின் பாரம்பரியம், உணவு மற்றும் நடனங்களை அறிய சிறந்த இடம்.

நமுவா தீவு 

அமைதியான சூழலில் படகு சவாரி மற்றும் கடலோர பறவைகளைக் காண ஏற்ற இடமிது. இந்தத் தீவைச் சுற்றி கடல் ஆமைகள் நீந்துவதைக் காணலாம். அக்டோபர் முதல் ஜூன் வரை முட்டையிடவதற்காக வரும் ஆமைகளால் நிறைந்திருக்கும் காயல் நீரின் அமைதியான பகுதி அனைவரையும் வெகுவாகக் கவரும்.

பபபபைத் நீர்வீழ்ச்சி (Papapapaital Falls):

உயரமான, பசுமையான மலைகளில் இருந்து விழும் அழகான நீர்வீழ்ச்சி.

பயணக் குறிப்பு: 

சமோவா தீவில் கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் அதிகமாக இருப்பதால், நீந்துவதற்கும் ஸ்நோர்கெல்லிங் செய்வதற்கும் கால்களைப் பாதுகாக்க வாட்டர் ஷூக்கள் அணிவது நல்லது.

இதையும் படியுங்கள்:
இந்த இந்திய நகரில் அசைவம் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?
Payanam Articles

செல்ல சிறந்த நேரம்: 

ஆண்டு முழுவதும் இதமான வானிலை நிலவுகிறது. இருப்பினும் சமோவாவிற்கு செல்ல சிறந்த நேரம் மே முதல் அக்டோபர் வரையாகும். நவம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் இத்தீவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

எப்படி செல்வது?  இந்தியாவிலிருந்து சமோவா செல்ல, சென்னை அல்லது பிற முக்கிய நகரங்களில் இருந்து பிஜி (Nadi) அல்லது நியூசிலாந்து (Auckland) வழியாக அகோலோ சர்வதேச விமான நிலையம் (APW) செல்லவேண்டும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 60 நாட்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம். தீவுகளுக்கு இடையே செல்ல படகு வசதிகள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com