

செஷெல்ஸ் (Seychelles) என்பது இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு அருகில் அமைந்துள்ள 115 தீவுகளைக்கொண்ட ஒரு அழகான தீவுக்கூட்ட நாடாகும். ஆப்பிரிக்காவின் மிகச்சிறிய நாடான இது வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள், அரிய வகை ஆமைகள் (எஸ்மரால்டா) மற்றும் பிரம்மாண்டமான கிரானைட் பாறைகளுக்கு பெயர் பெற்றது. விக்டோரியா இதன் தலைநகரம் மற்றும் இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.
18ஆம் நூற்றாண்டு வரை இங்கு மனிதர்கள் இல்லை. ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்பு இந்த தீவுக்கூட்டம் மக்கள் வசிக்காத பகுதியாக இருந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து1976 ஜூன் 29ல் விடுதலை பெற்றது.
1971 இல் செஷெல்ஸ் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக இங்கு உருவெடுத்தது. இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்கு வடகிழக்கிலும், கென்யாவிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. 115 தீவுகளில் மாஹே(Mahe), பிரஸ்லின் (Praslin) மற்றும் லா டிக் (La Digue) ஆகியவை முக்கிய உள் தீவுகளாகும். இவை கிரானைட் பாறைகளால் ஆனவை.
அழகான கடற்கரைகள், நீர்மூழ்கி விளையாட்டு (டைவிங்) மற்றும் இயற்கை வனப்புக்காக சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். மறக்க முடியாத தேனிலவுக்கு இவை சரியான காதல் நிறைந்த இடங்களாகும். உலகின் மிக அழகான அரச தம்பதிகளான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்கள் தேனிலவை இங்குதான் கழித்தனர். கிரியோல்(Creole), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாகும்.
பார்க்க வேண்டிய இடங்கள்:
கியூரியஸ் (Curieuse ) தீவில் உள்ள ஆமை சரணாலயம் இங்கு மிகவும் பிரபலம். எஸ்மரால்டா என்ற 670 பவுண்டு எடையுள்ள ராட்சத ஆமைகள் மற்றும் பல அரிய பறவை இனங்கள் உள்ளன.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான வலீ டி மே(Vallee de Mai National Park) இயற்கை பூங்கா அபூர்வமான கோகோ-டி-மெர் (Coco de mer) பனைமரங்களுக்கு பெயர் பெற்ற இடமிது.
Anse Source d' Argent (லா மிகு): உலகின் மிக அழகான மற்றும் புகைப்படங்களுக்கு புகழ்பெற்ற கிரானைட் பாறைகள் நிறைந்த கடற்கரை.
Beau Vallon Beach (மாஹே): நீர் விளையாட்டுகள் மற்றும் உணவகங்களுக்கு பிரபலமான முக்கிய கடற்கரை.
நீச்சல், ஸ்நோர்கெலிங் மற்றும் தீது பயணங்களுக்கு இது ஒரு சொர்க்கமாகும். செஷெல்ஸ் தீவிற்கும் புதுச்சேரிக்கும் நெருங்கிய வரலாற்று தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தீவினை கட்டமைக்க அடித்தளமிட்டவர்கள் புதுச்சேரி தமிழர்கள் தான். செஷெல்ஸ் குடியரசை உருவாக்குவதில் புதுச்சேரி தமிழர்களின் பங்கு அதிகம்.
செஷெல்ஸ் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும் அதன் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மீன்பிடித்தலை பெரிதும் நம்பியுள்ளது.
செஷெல்ஸ் தீவுக்கு செல்ல சிறந்த நேரம்:
இத்தீவின் காலநிலை ஆண்டு முழுவதும் இனிமையாக இருப்பதால் ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானால் சென்று வரலாம். ஏப்ரல் முதல் மே வரையிலும் மற்றும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் உள்ள காலம் பயணம் செய்வதற்கு ஏற்ற நேரமாகும். இந்த மாதங்களில் தங்கும் இடம் மற்றும் விமான கட்டணங்கள் குறைவாக இருப்பதுடன், நீரின் வெப்பநிலையும் நீந்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.