அன்னம் பால் குடிக்கும் கதை தெரியுமா? சித்தன்னவாசல் முதல் திருமயம் வரை 1 நாள் பயணம்!

தாமரைத் தடாகப் பழமொழி முதல் அருவ வழிபாடு வரை—குழந்தைகளுடன் ரசிக்க புதுக்கோட்டை வழிகாட்டி.
புதுக்கோட்டை
புதுக்கோட்டைGemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

பயணம் செல்வது என்றால் அனைவருக்கும் அல்வா சாப்பிடுவது போல் தான். அதுவும் குழந்தைகளுடன் செல்கிறோம் என்றால் கேட்கவே வேண்டாம். நாம் கேட்க வெட்கப்படும் சில கேள்விகளை, அவர்களை கேட்க வைத்து நாம் தெளிவு பெறுவதற்கு சுற்றுலா ஒரு சிறந்த அறிவுப்பயணமாக விளங்குகிறது. இந்தப் 'பயணம்' குறிப்பில் ஊமைத்துரை பதுங்கிய திருமயம் கோட்டை மற்றும் புதுக்கோட்டை பக்கம் ஒரு நாள் பயணத்தில் பார்க்க வேண்டிய சிறப்பான இடங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஒரு கோட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த கோட்டையில் என்ன சிறப்பு? யார் வாழ்ந்தார்கள் அல்லது பதுங்கி இருந்தார்கள்?அவர்களின் வரலாறு என்ன? எதனால் அந்த திருமயம் கோட்டை சிறப்பு பெற்றது என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதனைப் பற்றி முதலில் பார்ப்போம்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஊமத்துரை ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டக் காலத்தில் திருமயம் கோட்டையில் தஞ்சம் புகுந்த வரலாற்றுத் தொடர்பு காரணமாக இப்பகுதி தனித்துவமான முக்கியத்துவம் பெறுகிறது. 

ஊமைத் துறையின் வரலாற்றுடன் தொடர்புடைய திருமயம் கோட்டை:

தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரை (இயற்பெயர்: குமாரசாமி நாயக்கர்) அசாத்திய துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் பெயர் பெற்ற ஒரு மாவீரர் ஆவார்.

​பேசும் திறனற்றவராக இருந்த போதிலும், ​ ஊமைத்துரையின் கண்களும், கை அசைவுகளும் படைவீரர்களுக்குத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பிக்கும் வல்லமை கொண்டிருந்தன.​போர்க்களத்தில் அவர் முன் நின்று சைகை காட்டினால், வீரர்கள் உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுவார்கள். அண்ணன் கட்டபொம்மனுக்கு இணையாக மக்கள் இவர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

புதுக்கோட்டை|திருமயம் கோட்டை
புதுக்கோட்டை|திருமயம் கோட்டை

1799-இல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, ஊமைத்துரையும் அவரது தம்பி செவத்தையாவும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி, சிவகங்கை மருது சகோதரர்களின் உதவியோடு, சந்நியாசிகள் வேடத்தில் வந்த வீரர்களின் துணையுடன் பாளையங்கோட்டைச் சிறையை உடைத்துத் தப்பினார். இது ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாக வரலாற்றில் பதிவானது.

பாஞ்சாலங்குறிச்சியை மீண்டும் கைப்பற்றியது:

​சிறையிலிருந்து தப்பிய வெறும் 6 நாட்களுக்குள், தரைமட்டமாக்கப்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை உள்ளூர் மக்களின் துணையோடு இரவோடு இரவாக மண் சுவர்களால் மீண்டும் எழுப்பினார். ஆங்கிலேயர்களின் நவீன பீரங்கிகளையும், பெரும் படையையும் எதிர்த்துப் பல மாதங்கள் தீரத்துடன் போரிட்டார்.

மருது சகோதரர்களுடனான கூட்டணி & திருமயம் தொடர்பு:

​பாஞ்சாலங்குறிச்சி இறுதிப் போரில் பலத்த காயமடைந்த ஊமைத்துரை, உயிருக்குப் போராடிய நிலையில் சிவகங்கைக்குத் தப்பிச் சென்றார். அங்கு மருது பாண்டியர்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்துச் சிகிச்சை அளித்தனர்.​ தென்னிந்தியப் புரட்சியாளர்களின் கூட்டமைப்பில் (South Indian Rebellion) மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார். போரின் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேயப் படைகள் சுற்றி வளைத்தபோது, திருமயம் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுங்கி இருந்து போராட்டத்தைத் தொடர முயன்றார்.

இறுதித் தியாகம்:

​இறுதியில் திருமயம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் ஆங்கிலேயப் படைகளால் கைது செய்யப்பட்ட ஊமைத்துரையும், அவரது சகோதரர் செவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, 1801-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர் என்பது வரலாறு. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

​

வரலாற்றுக் குறிப்பு: 

ஆங்கிலேயத் தளபதிகளே தங்களின் போர்க் குறிப்புகளில், "வாய் பேச முடியாத அந்த மனிதரின் ஆளுமையும், மக்களைத் திரட்டும் சக்தியும் எங்களை வியக்க வைத்தது" என்று ஊமைத்துரையின் வீரத்தைப் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்தே ஊமைத்துறையின் வீரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இனி புதுக்கோட்டை பக்கம் ஒரு நாள் பயணத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்!

திருமயம் மலைக்கோட்டை மற்றும் குடைவரைக் கோயில்கள்

வரலாற்றுச் சிறப்பு: இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வட்டவடிவக் கோட்டை, பின்னர் தொண்டைமான் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் கால வரலாற்றோடு தொடர்புடையது. பாளையக்காரர் போர்க் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரை இப்பகுதியுடன் தொடர்பு கொண்டிருந்த வரலாற்றுப் பின்னணி இக்கோட்டைக்குத் தனிச் சிறப்பு சேர்க்கிறது.

பார்க்க வேண்டியவை: 

கோட்டையின் பாதுகாப்பு மதில் சுவர்கள், மேலிருந்து தெரியும் இயற்கைக் காட்சி, சத்தியமூர்த்தி பெருமாள் குடைவரைக் கோயில் மற்றும் சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்.

சத்தியமூர்த்தி பெருமாள் கோயில்: 

பாறையில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் பெருமாள் சிற்பம் மற்றும் பிற புராணச் சிற்பங்கள் இதன் தனிச்சிறப்பு.

​சத்தியகிரீஸ்வரர் கோயில்:

பழமையான சிவன் கோயில்; இதன் அருகிலுள்ள கல்வெட்டுகளில் இசை தொடர்பான பண்டைய குறிப்புகள் ('பரிவாதினிதா' போன்ற கல்வெட்டுத் தகவல்கள்) காணப்படுகின்றன.

சித்தன்னவாசல்:

​கலை மற்றும் வரலாறு: 

பண்டைய சமணத் துறவிகள் வாழ்ந்த இடமாகவும், குகை ஓவியங்களுக்காகவும் உலகப் புகழ் பெற்றது.

அன்னம் பாலை மட்டுமே எப்படி அருந்தும்?

​தாமரைத் தடாகம் உள்ளிட்ட இயற்கை வண்ணங்களில் வரையப்பட்ட பழமையான சுவரோவியங்களை, நாங்கள் குடும்பத்துடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த கைடு அவற்றைப்பற்றி தெளிவாக ஒவ்வொரு படத்தையும் காண்பித்து அதன் சிறப்புகளை கூறிக் கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை|சித்தன்னவாசல்
புதுக்கோட்டை|சித்தன்னவாசல்

அப்பொழுது அதில் உள்ள அன்னப்பறவைகளை காண்பித்து அன்னப்பறவைகள் பாலில் நீர் கலந்திருந்தால் அந்த நீரை ஒதுக்கி விட்டு பாலை மட்டும் அருந்தும் என்று கூறுவதை எடுத்துக்காட்டி, அதற்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். நாங்கள் தெரியாது என்று கூறவும் அவரே அதற்கான விளக்கத்தையும் தந்தார்.

அந்த தாமரை தடாகத்தில் அன்னப்பறவைகள் நீந்தி வரும் பொழுது சில நேரம் அந்த தண்டுகள் உடைந்து அதிலிருந்து பால் வெளியில் வரும். அந்தப் பாலை மட்டும் அன்னப்பறவைகள் அருந்துவதால் ஏற்பட்டது தான் இந்த பழமொழி என்று விளக்கம் தந்தார். சித்தன்ன வாசலுக்கு ஒரு காலத்தில் அன்னவாசல் என்று பெயர் இருந்தது. இதிலிருந்தே அன்னப் பறவைகள் இங்கு அதிகம் இருந்திருப்பதற்கான தடயங்கள் உள்ளன என்றும் கூறினார்.

 இங்கு மேலும் நாம் பார்க்க வேண்டியது மலையின் உச்சியில் உள்ள சமணர் படுக்கைகள் மற்றும் அருகிலுள்ள பூங்கா.

புதுக்கோட்டை|குடுமியான்மலை
புதுக்கோட்டை|குடுமியான்மலை

குடுமியான்மலை:

இசை மற்றும் சிற்பக் கலை:

பண்டைய இசை இலக்கணம் மற்றும் கல்வெட்டுகளுக்காகப் பிரபலமான தலம். குடுமிநாதர் (சிக்கநாதீஸ்வரர்) கோயில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள்.

நார்த்தாமலை:

​கட்டிடக் கலை: 

தொடக்க காலச் சோழர் காலக் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இடம். விஜயாலய சோழீஸ்வரர் கோயில், பாறைக் குடைவரைகள் மற்றும் இயற்கையான பாறை அமைப்புகள்.

புதுக்கோட்டை அருங்காட்சியகம்

​வரலாற்றுப் பெட்டகம்: 

தமிழ்நாட்டின் பழமையான மற்றும் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்று. திருமயம் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழங்கால ஆயுதங்கள், பீரங்கிக் குண்டுகள், உலோகச் சிலைகள், நாணயங்கள் மற்றும் தொல்லியல் பொருட்கள். (பொதுவாக வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்).

ஆவுடையார்கோயில்:

சிற்ப நுணுக்கம்: 

சற்று கூடுதல் நேரம் ஒதுக்க முடிந்தால், மாணிக்கவாசகருடன் தொடர்புடைய ஆத்மநாத சுவாமி கோயிலுக்குச் செல்லலாம். இங்குள்ள கற்சிற்ப வேலைப்பாடுகள் (கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி, கயிறு போன்ற அமைப்புகள்) தனித்துவமானவை.

ஆவுடையார்கோயில் (பண்டைய திருப்பெருந்துறை) பற்றிய மிகச் சிறப்பான ஒரு தகவல் என்னவென்றால், இது மற்ற சிவாலயங்களைப் போல உருவ வழிபாடாக இல்லாமல், 'அருவ வழிபாடு' (Formless worship) நடைபெறும் தனித்துவமான ஆலயமாகும்.

புதுக்கோட்டை|ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை|ஆவுடையார் கோவில்

லிங்கம் இல்லை, ஆவுடையார் மட்டுமே: இங்குள்ள மூலவரான ஆத்மநாத சுவாமியின் கருவறையில் லிங்கமோ அல்லது பிற சிலைகளோ கிடையாது. வெறும் பீடமான 'ஆவுடையார்' மட்டுமே (அதன் மேல் உலோகக் கவசம் சாத்தப்பட்டு) இறைவனின் உருவமற்ற (அருவ) நிலையைக் குறிக்கும் வகையில் வழிபடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாபநாசம் சுற்றுலா வழிகாட்டி: வான தீர்த்தம், காரையாறு அணை, மாஞ்சோலை முழு விவரம்!
புதுக்கோட்டை

பிற தனிச்சிறப்புகள்: 

மற்ற கோயில்களில் இருப்பது போல் இங்கு நந்தி, கொடிமரம், பலிபீடம் அல்லது தனி நவக்கிரக சந்நிதி ஆகியவை கிடையாது (நவக்கிரகங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன). மேலும், கருவறையில் உள்ள இறைவனுக்குப் பதிலாக, மாணிக்கவாசகரே உற்சவமூர்த்தியாகத் திருவீதி உலா வரும் சிறப்பு இங்குள்ளது.

கற்கோயில் சிற்ப அழகு:

மண்டபங்களின் மேற்கூரையில் ஓடு வேய்ந்தது போன்ற தோற்றத்தைக் கல்லிலேயே செதுக்கியுள்ள சிற்ப நுணுக்கமும், கற்சங்கிலிகளும் இதன் கட்டடக்கலைப் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

ஒரு நாள் பயணத்திற்கான எளிய திட்டமிடல்:

காலை: சித்தன்னவாசல் மற்றும் குடுமியான்மலை (வெப்பம் குறைவாக இருக்கும் நேரத்தில் பாறை மற்றும் குகைப் பகுதிகளைப் பார்க்க வசதியாக இருக்கும்).

பிற்பகல்: புதுக்கோட்டை நகரில் மதிய உணவு மற்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்.

​மாலை: திருமயம் மலைக்கோட்டை (மாலை நேரத்தில் கோட்டைப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது).

இதையும் படியுங்கள்:
மேகங்களே மலைமீது இறங்கி வரும் மேகமலை… ஏன் இதை மிஸ் பண்ணக் கூடாது?
புதுக்கோட்டை

குழந்தைகளை முதன்முதலாக புதுக்கோட்டை பக்கம் சுற்றுலா அழைத்து செல்பவர்கள் வரலாற்று தொடர்புடைய அந்த திருமயம் கோட்டை கொத்தளங்களை காண்பித்து, அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்களையும் காண்பித்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி இன்பமுடன் பொழுதை கழித்து வாருங்கள். அதற்கு இது நல்ல வழிகாட்டியாக அமையும்.

பிரபலமான பழமொழிக்குப் பின்னால் உள்ள சுவாரசியமான விளக்கத்தையும், குடும்பத்துடன் எளிதாகப் பின்பற்றக்கூடிய ஒரு நாள் பயண வரிசையையும் வாசகர்கள் அடைவார்கள்.