

Snake Canyon Oman: மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே பரந்து விரிந்த வறண்ட பாலைவனங்களும், பல அடுக்குகள் கொண்ட ஆடம்பரமான ஷாப்பிங் மால்களும் தான் நமது நினைவுக்கு முதலில் வரும். ஆனால் ஓமன் (Oman) நாட்டில் மலைகளுக்கு நடுவே இயற்கை உருவாக்கிய ஒரு பிரம்மாண்டமான வாட்டர் பார்க் ஒளிந்திருக்கிறது.
சாகசப் பிரியர்களை காந்தம் போல ஈர்க்கும் இந்த சுவாரஸ்யமான இடத்தின் பெயர் ஸ்னேக் கேன்யான் (Snake Canyon). கற்பனைக்கு எட்டாத பல ஆச்சரியங்களை தன்னுள் அடக்கியுள்ள இந்த மர்மமான பள்ளத்தாக்கு பற்றி இப்போது பார்ப்போம்.
பாம்பைப் போல வளைந்த பாதை!
ஓமன் நாட்டின் மிகவும் ஒதுக்குப்புறமான வாடி பானி அவுஃப் (Wadi Bani Awf) என்ற பகுதியில் உள்ள ஹாஜர் மலைகளுக்கு (Hajar Mountains) நடுவே தான் இந்த அழகிய இடம் அமைந்துள்ளது. ஒரு பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதைப் போல வளைந்து நெளிந்து செல்லும் ஆபத்தான மற்றும் குறுகலான பாதைகளைக் கொண்டிருப்பதால் இதற்கு ஸ்னேக் கேன்யான் என்று பெயர் வந்துள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளாக மலையிலிருந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த தண்ணீர், அங்குள்ள சுண்ணாம்புப் பாறைகளைக் குடைந்து இப்படியொரு இயற்கை அதிசயத்தை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளது.
இயற்கை உருவாக்கிய வாட்டர் பார்க்!
இது சாதாரண மக்கள் சென்று வரும் வழக்கமான மலை ஏற்றம் செய்யும் இடம் கிடையாது. நீச்சல், மலை ஏறுதல் மற்றும் பாறைகளில் சறுக்குதல் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான சாகச தளமாக இது விளங்குகிறது. இங்குள்ள பாறைகள் சுமார் நாற்பது மீட்டர் உயரம் வரை வானை முட்டி கம்பீரமாக நிற்கின்றன. அந்த இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே உள்ள மிகக் குறுகலான பாதையில் உடலை வளைத்து நுழைந்து செல்வது அட்ரினலினை எகிறச் செய்யும் ஒரு புதுமையான அனுபவமாகும்.
இங்குள்ள பாறைகளில் பல நூற்றாண்டுகளாக நீர் ஓடி ஓடி, அவை பார்ப்பதற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட வாட்டர் ஸ்லைடுகளைப் போலவே மிகவும் வழுவழுப்பாக மாறிவிட்டன. இதில் சறுக்கிக்கொண்டே சென்று கீழே உள்ள பச்சை நிறப் படிகக் குளங்களில் விழுவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு திரில்லிங்கான ஃபீலிங்.
பயணத் திட்டம் மற்றும் சீசன்
இந்த குகைகளுக்குள் செல்லச் செல்ல அதன் அமைப்பு ஆச்சரியப்படும் வகையில் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் சூரிய வெளிச்சமாகவும், அடுத்த நிமிடம் இருட்டாகவும் மாறி சிலிர்ப்பைக் கொடுக்கும். ஓமன் தலைநகர் மஸ்கட் (Muscat) நகரத்தில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
கரடுமுரடான மலைப்பாதை என்பதால் 4x4 வகையைச் சேர்ந்த வாகனங்களில் செல்வதே மிகவும் பாதுகாப்பானது. இந்த பயணத்திற்கு தோராயமாக 3 மணி நேரம் வரை ஆகலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் இங்கு செல்வதற்கு மிகச் சிறந்த காலமாகும்.
இந்த இடத்திற்குச் செல்ல நீங்கள் கட்டாயம் சிறந்த உடல் தகுதியுடன் இருக்க வேண்டும், அதேபோல நீச்சல் தெரிந்திருப்பதும் மிக மிக அவசியம். அங்கிருக்கும் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் ஹெல்மெட், கயிறு மற்றும் லைஃப் ஜாக்கெட் போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் நமக்குக் கொடுப்பார்கள்.
ஆடம்பரமான ஹோட்டல்களைத் தாண்டி, நிஜமான இயற்கையின் காட்டுத்தனமான சாகசத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால், இந்த ஸ்னேக் கேன்யான் ஒரு சூப்பர் சாய்ஸ்.