பாலி தீவு சில சுவாரஸ்ய தகவல்கள்!

Some interesting facts about Bali Island!
Payanam articles
Published on

- ஜி. இந்திரா

லகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவுதான் பாலி (Bali). இங்கே 93 சதவிகித மக்கள் இந்துக்கள். 42 லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. பாலியைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்.

இங்கே ஒவ்வொரு மார்ச் மாதம் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதை Nyepi Day என்று சொல்கிறார்கள். மார்ச் 12ம் தேதி இது நடக்கிறது. இந்துக்களின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எந்தப் போக்குவரத்தும் இருக்காது. விமான நிலையம்கூட மூடியிருக்கும். வீட்டில் இருந்தபடியே எல்லோரும் தியானம் செய்வார்கள்.

பாலியில் இருக்கும் இந்து கலாசாரம், இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளைப் பற்றிய பாட திட்டங்கள் இருக்கின்றன. அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைப் பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், ரிஷிகளைப் பற்றி பாலி குழந்தைகள் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

பாலியில் ஆண், பெண் என இரு பாலருக்கும் தேசிய உடை வேஷ்டிதான். எந்த ஒரு பாலி கோயிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ செல்லமுடியாது.

பாலியில் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பு ரிஷிகள் உருவாக்கிய 'Tri-Hija–Karana’ எனும் கோட்பாட்டின்படிதான் அமைந்துள்ளது. அதைத்தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

’த்ரிகால சந்தியா’ என்பது சூரிய நமஸ்காரம். அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தையும் அவர்கள் பள்ளியில் சொல்ல வேண்டும். பொதுவாக, பாலி ரேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
இயற்கையழகு கொஞ்சும் அற்புதமான உப்பலமடுகு நீர்வீழ்ச்சி... ஒரு விசிட்!
Some interesting facts about Bali Island!

பாலி கோயில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேஷியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான அங்கு அனைத்து மதக்கோயில் பூசாரிகளின் சம்பளத்தையும் அரசே கொடுக்கிறது.

இந்தோனேஷியாவின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே. அதனால், அவர்களின் பண்பாடுகளில் இந்தியக் கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேஷியா முக்கியப் பங்கு வகிக்கிறது. பாலித் தீவு முழுவதும் அரிசி வயல்கள்தான் இருக்கின்றன. அங்கு விளையும் அரிசியை முதலில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்குப் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோயில் இருக்கும். விவசாயிகள் இந்த தெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாயத் தொழிலுக்குச் செல்வார்கள். இங்கே நீர்ப்பாசனம் முழுவதும் கோயில் பூசாரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின்பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இந்தியாவில் இன்று இல்லை.

பாலி இந்துக்கள் பூஜை செய்யும்போது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதில்லை. இன்றும்கூட அவர்கள் கையால் எழுதப் பட்ட ஓலைச்சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். இங்கு ராமாயணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ராமாயண ஓலைச்சுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.

அனைத்துத் திருவிழாக்களிலும் பாலி நடனம் ஆடுவார்கள். அதில் பெரும்பாலும் ராமாயண, இதிகாசங்களை கதைகளாகச் சொல்வார்கள். இந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த ஐயமும் இல்லை. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியம்மிக்க ஹிந்து கலாசாரம், நடனம், இசை என இந்தத் தீவு உலகச் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

இப்பயணக்கட்டுரை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இதையும் படியுங்கள்:
ரயில் பயணத்தில் செளகரியங்கள் - அசெளகரியங்கள் என்ன தெரியுமா?
Some interesting facts about Bali Island!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com