

பொதுவாக ரயில் பயணத்தில், ஒவ்வொரு நிறுத்த பிளாட்பாரங்களில் உணவுப் பொருட்கள் விற்பதைப் பார்க்கிறோம். சிலர் ரயில் பெட்டியினுள் வந்தும் விற்பார்கள். இவை தவிர, ரயிலிலேயே இணைக்கப் பட்டிருக்கும் சமையல் கூடத்திலிருந்தும் உணவு தயாரிக்கப்பட்டு, பயணிகளுக்கு அவரவர் இருக்கைக்கே வந்து வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறு அளிக்கப்படும் உணவு வகைகளுக்கு உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால் சச்காந்த் எக்ஸ்ப்ரஸ் ரயிலில், அதில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும், காலை, மதியம் மற்றும் இரவு உணவுகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. இந்த ஏற்பாட்டை செய்திருப்பது இந்திய ரயில்வே அல்ல; அன்புள்ளம் கொண்ட சீக்கிய அன்பர்கள்தான்.
மஹாராஷ்டிராவிலுள்ள நந்தேத் ஸ்டேஷனிலிருந்து பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் ஸ்டேஷன் வரை சுமார் 35 மணிநேரம் பயணிக்கிறது சச்காந்த் எக்ஸ்ப்ரஸ். நந்தேத் என்பதும், அமிர்தசரஸ் என்பதும் சீக்கியர்களின் இரு புனிதத்திருத்தலங்கள். இரண்டிற்கும் இடையே சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவு. கிட்டத்தட்ட இரண்டு நாள் பயணம்.
இந்த ரயிலில் செல்லும் அனைத்துப் பயணியருக்கும் அவரவர் தகுதி பாராமல், அவர்கள் ஏஸி பெட்டி முதல் சாதாரண பெட்டிவரை, எந்த வகுப்பில் பயணித்தாலும், ஏழை – பணக்காரர், உள்ளூர்க்காரர் – வெளியூர் அல்லது வெளி மாநிலத்தவர் என்ற பாகுபாடின்றி இலவச உணவு வழங்கப்படுகிறது. எந்தப் பயணியிடமிருந்து எந்த வசூலும் இல்லை; தங்கள் நன்றியை இவ்வாறு நன்கொடை மூலம் தெரிவிக்க விரும்பும் பயணிகளிடம், மென்மையாகப் பேசி மறுத்துவிடுகிறார்கள், தொண்டுள்ளம் கொண்ட அந்த அன்பர்கள்.
இவ்வாறு அளிக்கப்படும் சாம்பார் சாதம், சப்பாத்தி, சப்ஜி போன்ற உணவு வகைகள், எந்த ஸ்டேஷன் கேண்டீனிலும் தயாரிக்கப்படுவது இல்லை. அந்தந்த ஊரில் இருக்கும் ‘குருத்வாரா‘ என்ற சீக்கிய கோயில்களில் தயாரிக்கப்பட்டு, தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இந்த உணவுவகைகள் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளுக்கும் அந்தந்த நேரத்திற்கு ஏற்புடையனவாக இருக்கின்றன. அதனால், அவுரங்காபாத், போபால், ஜான்ஸி, க்வாலியர், டெல்லி மற்றும் லூதியானா ஸ்டேஷன்களில் இந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் துவக்க காலத்தில் பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் ஃபாயில் கொள்கலன்களில் கொடுத்து வந்தார்கள் என்றும், தற்போது, பயணிகள் அவரவர் கொண்டு வந்திருக்கும் தட்டு அல்லது பாத்திரங்களில் வழங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் சுற்றுச் சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் சச்காந்த் எக்ஸ்ப்ரஸ் நிற்கும்போது, தொண்டர்கள் ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் புகுந்து தாங்கள் கொண்டு வந்திருக்கும் பெரிய பாத்திரங்களிலிருந்து உணவை எடுத்து விநியோகிக்கிறார்கள். தவிர, ஸ்டேஷன் ப்ளாட்பாரத்திலேயே ஒரு நீண்ட மேசை மீது பரப்பி வைத்தும், வந்து கேட்பவர்களுக்கெல்லாம் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் பிளாட்பாரத்தில் தொண்டர்கள் கொண்டுவரும் தட்டுகளிலேயே உணவுகள் பரிமாறப்படுகின்றன. ரயில் புறப்படும் நேரத்துக்குள்ளாக உணவை உட்கொள்ளும் பயணிகள், அந்த தட்டு மற்றும் ஸ்பூன் போன்றவற்றை பக்கத்திலேயே இருக்கும் குழாயில் கழுவி திரும்பக் கொடுத்து விடுகிறார்கள். இந்தப் பாத்திரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு மொத்தமாக, பின்னால் முழுமையாக சுத்தப்படுத்தப் படுகின்றன.
இந்த உணவுவகைகள் அனைத்துமே சுத்த சைவம் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
சீக்கிய மதகுருவான குருநானக் அவர்கள் 1481ம் ஆண்டில் ஆரம்பித்து வைத்ததுதான் அன்னதானத் திட்டம். அப்போதெல்லாம் குருத்வாராவுக்கு வருவோருக்கும், அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. இப்போது சுமார் 30 ஆண்டுகளாக சச்காந்த் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணியருக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.