கோடைகாலம் மேற்கத்திய நாடுகளுக்கு மகிழ்ச்சியான விஷயம். ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள நம் நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நேரம். அதிக வெப்பத்தினால் வாகனங்கள் கோடைக்காலத்தில் பழுதடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் கோடை காலத்தில் காரை பராமரிக்கும் 4 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. காரின் கூலிங் சிஸ்டத்தை பராமரித்தல்:
காரின் கூலிங் சிஸ்டம் என்பது என்ஜின் சிஸ்டத்தை குளிர்வித்து என்ஜினில் பழுதுகள் ஏற்படுவதை தடுப்பது ஆகும். தொடர்ந்து காரின் எஞ்சின் இயங்குவதால் ஏற்படும் வெப்பமும், வெளியில் இருந்து ஏற்படும் வெப்பம் காரணமாகவும் எஞ்சின் சிஸ்டத்தில் வெப்பம் அதிகரிக்கும். இதை சமாளிக்க கார் நிறுவனங்கள் குளிர் வூட்டுவானை வழங்குகின்றன.
கோடை காலத்தில் இந்த கூலிங் சிஸ்டத்தில் திரவமானது கசிவு, ஆவியாதல் போன்றவற்றினால் வேகம் குறையும் என்பதால் கோடை காலத்திற்கு முன்னரே இதனை சரி பார்த்து வைப்பதோடு திரவ கசிவுகளை தடுக்க என்ஜின் ரேடியேட்டர், குழாய்கள் மற்றும் குளிர்விப்பானை கொண்டிருக்கும் ரிசர்வர் உள்ளிட்டவை நல்ல நிலையில் உள்ளனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கூலண்ட் ஃபிளஷ் பயன்படுத்தினால் கூலிங் சிஸ்டத்தில் உள்ள அடைப்புகள் மற்றும் துருப்பிடித்தல்களை நீக்கி கூலிங் சிஸ்டத்தின் செயல்படுதிறனை மேம்படுத்தலாம்.
2. டயர்களை பராமரித்தல்:
அதிக வெப்பத்தினால் டயருக்குள் அழுத்தம் அதிகமாகி டயர் வெடிக்கும் என்பதால், வெயில் காலத்தில் காரின் சக்கரங்களின் பிரஷரை அவ்வப்போது செக் செய்து, டயரின் அழுத்தத்தை சீராக பராமரிக்கவும். குறிப்பாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது முன்னெச்சரிக்கையாக இருப்பதோடு டயர்களில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளவும். டயர் அதிகம் பழுதாகி இருப்பதுபோல் தோன்றினாலே, எந்தவொரு சமரசமும் இன்றி அந்த டயரை மாற்றிவிடுங்கள்.
3. பேட்டரியை சரிப்பார்த்தல்:
அதிக வெப்பத்தினால் பேட்டரிக்குள் இருக்கும் திரவம் ஆவியாகி, பேட்டரிக்குள் அரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பேட்டரிக்குள் வெப்பம் அதிக அளவில் பரவுவதை தடுக்க பேட்டரியுடன் வயர் இணைக்கப்படும் பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்து பேட்டரியில் இருந்து சீராக மின்னோட்டம் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பேட்டரிக்குள் இருக்கும் திரவம் ஆவியானால், பேட்டரியின் வடிவத்தில் மாற்றம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. ஏசி சிஸ்டத்தை சரி பார்த்தல்:
ஏசி சிஸ்டத்தில் கசிவுகள் உள்ளனவா என்பதை குறைந்த குளிர்ச்சி அல்லது ஏசி சிஸ்டத்தில் இருந்து ஏற்படும் விசித்திரமான சத்தத்தின் மூலமாக அறியலாம். எல்லா நேரங்களிலும் ஏசி-ஐ பயன்படுத்த முடியாது என்பதால், சில நேரங்களில் ஏசி சிஸ்டத்தில் இருக்கும் மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், உங்களது காரின் ஏசி-இல் இருந்து போதிய அளவிற்கு காற்று வரவில்லை எனில், உங்களது ஏசி சிஸ்டத்தில் குளிர்பதன பொருளை புதியதாக நிரப்ப வேண்டியிருக்கும். ஆகவே கோடை காலத்தில் ஏசியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதா அல்லது ஏதேனும் நீர்க்கசிவு உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.
கோடை காலத்தில், மேற்கூறிய நான்கு வழிகளிலும் காரை பராமரிக்க, அது பயணத்தின் போது நமக்கு உற்ற துணைவனாக இருக்கும்.