
மலையேற்றம் என்று பொதுவாக கூறினாலும் இதில் ஹைகிங், ட்ரெக்கிங் என பல வகைகள் உள்ளன. ஹைகிங் என்பது சில மணி நேரத்தில் இருந்து ஒருநாள் வரை மலைப்பகுதிகளில் ஏறி இறங்கிவிடும் மலையேற்ற மாகும். இதற்கு குறைவான பொருட்களை மட்டுமே எடுத்துக்கொண்டு செல்வார்கள். Trekking என்பது முறையான பாதை எதுவும் இல்லாத மலையில் ஏறுவதும், தங்குவதற்கான டென்ட், உணவுகள் போன்ற தேவையான முக்கிய பொருட்களை எடுத்துச் செல்வதுமாகும்.
மலையேற்றம் (Sweet Mountain Journey! ) செய்வதற்கு உடல் வலிமையுடன் மனவலிமையும் மிகவும் அவசியம். மனதை அமைதியாகவும், அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதில் பயமோ சஞ்சலமோ சிறிதும் இருக்கக்கூடாது.
முதல் முறையாக மலையேற்றம் செய்பவராக இருந்தால் தனியாகச் செல்லாமல் அனுபவம் வாய்ந்த ஒருவருடனோ அல்லது குழுவுடனோ செல்வது நல்லது. அத்துடன் நம் திறமைக்கு ஏற்றவாறு மலையேற்ற பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
மலையேற்றம் செய்வதற்கு திட்டமிட்டால் முதலில் அதற்காக தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது வாக்கிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.
மலையேற்றத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் முறையாக மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதும், தியானம் செய்வதும் அவசியம்.
நாம் செல்லும் மலைப்பகுதிக்கு ஏற்ப ஷுக்களை பார்த்து வாங்க வேண்டும். வனப்பகுதிகளில் மலையேற்றம் செய்யும்போது காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
மலையேற்றத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வது அவசியம். பொருட்களை எடுத்துச் செல்லும் பொழுது எடை குறைந்த பொருட்களை எடுத்துச் செல்வது நம் பயணத்தின் சுமையை குறைக்க உதவும்.
மலையேற்றத்தின்போது நிறைய பொருட்களை எடுத்துச் செல்வது தேவையற்ற சுமையை சுமந்து செல்வது போலாகும். மிகவும் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றால் பயணம் இனிமையாக இருக்கும்.
மலையேற்றத்தின் பொழுது பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மலையேற்றம் செய்யும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பருவ காலத்தைப் பொறுத்து திட்டமிடுவதும், வானிலை மாற்றம் மற்றும் பாதையில் கவனம் செலுத்துவது முக்கியம்.
மலையேற்றத்தை மெதுவாகவும் நிதானமாகவும் தொடங்குங்கள் சோர்வாக உணர்ந்தால் அல்லது சவாலான நிலப்பரப்புகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்பு தொடருங்கள். மழைக்காலத்தில் மலையேற்றம் செய்வதாக இருந்தால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் மலையேற்றம் சற்று சவாலானதாக இருக்கும்.
நீரிழப்பை தவிர்க்க தேவையான நீர் அருந்துவதும், ஊட்டச்சத்து மிக்க பழங்கள், உணவுகளை எடுத்துக் கொள்வதும் நம்மை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடன் இருக்க வைக்கும்.
முதலுதவிப் பெட்டி, வசதியான உடைகள், தகுந்த காலணிகள், மழைக்கால தடுப்பு உடைகள் போன்றவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
ட்ரெக்கிங் செல்வதற்கு என்று பயிற்சி நிலையங்கள் உள்ளன. அவற்றில் பயிற்சி பெற்ற பின்பு மலையேற்றங்களை தொடங்குவது சிறப்பாக இருக்கும்.