

இயற்கை இருக்கிறதே அது இரக்கமும் கனிவும் மிக்கது. எப்பொழுதும் மனித வாழ்க்கை சிறக்க இயன்றதைச் செய்வது! என்ன? அதன் தன்மையை நாம் சரியாகப் புரிந்து கொள்வதும் இல்லை, அப்படியே புரிந்து கொண்டாலும் அதற்கேற்ப நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வதும் இல்லை. சென்னையில் வெயில் அதிகமானால், மலை வாசஸ்தலங்களில் உடலுக்கு இதமான குளிரைப் பரவவிடுகிறது. செலவு சற்றே அதிகம் என்றாலும், மூச்சைப் பிடித்தபடி முயன்று வந்து விட்டால், சுவிஸ் தரும் சுகம் அலாதிதான்! ஓரிரு முறையாவது இதனை வந்து அனுபவிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்!
என்ன செய்வது? எத்தனை முறை எவ்வளவு சொன்னாலும், நம்மூரில் பலரால் பழமையிலிருந்து மாறி இதனையேற்க மனம் வருவதில்லை. கிராமத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரரின் மகனும், மகளும் முறையே அமெரிக்காவிலும், லண்டனிலும் இருக்கிறார்கள். அவர்கள் வற்புறுத்தி அழைத்தும், நானும் பலமுறை சொல்லியும், ”மாடு கன்னை விட்டுட்டு எப்படி போறது?” என்ற ஆதங்கத்துடனேயே மச்சி ஆயுளை நெருக்கி விட்டார். இப்பொழுதோ, “வயதாகிவிட்டது! இனி நான் போய் எதைப் பார்த்து என்ன செய்யப் போகிறேன்?” என்று விரக்திப் பேச்சில் இறங்கி விட்டார். வசதி, வாய்ப்புகள் இருந்தும், பொருளாதாரம் இடம் கொடுத்தும், மச்சியைப் போன்ற பிடிவாதக்காரர்களே நம்மூரில் அதிகம்!
மச்சியின் மனைவிக்குப் பல நாடுகளையும் பார்க்கும் ஆசை இருந்தாலும், பதியைத் தனியே விட்டு விட்டுப் போக மனது இடம் தராததால் அவர்களும் மறுகியே வாழ்கிறார்கள்.
சரி! வாருங்கள், கிப்ஃ(Gipf) என்ற இடத்திற்கு இன்று சென்று வருவோம். இங்கு விசேஷம் என்னவென்றால், செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதுதான். நம் இந்திய நாட்டிற்கும், சுவிசுக்கும் ஏகப்பட்ட விதங்களில் ஒற்றுமையுண்டு. கோடை ஆரம்பித்துவிட்டாலே நாம் குன்றுதோறும் இருக்கும் குமரனுக்கு விழாவெடுத்து மலையேறுகிறோம். கோயில்களில் திருவிழா நடத்தி, உற்றார், உறவினருடன் சேர்ந்து உற்சாகம் பெறுகிறோம். இங்கே பூப்பதைப் பார்க்கக் குடும்பம் குடும்பமாகக் கூட்டம் (Cherry Blossom) கூடுகிறார்கள். அது போலவே பின்னர் பழங்களைப் பறிக்க (Fruit Picking) மலையேறி மகிழ்கிறார்கள்.
சுவிசைப் பொறுத்தவரை, கிராம வாழ்க்கையே உற்சாகமானது; இயற்கையோடு இணைந்தது. பெரும்பாலும் மக்கள் கிராமங்களில் வசிப்பதையே விரும்புகிறார்கள்.கிராமம் என்றால் அனைத்து வசதிகளும் நிரம்பப் பெற்ற கிராமங்கள். நாங்கள் வசிக்கும் ‘காட்டிகன்’ (Gattikan) வில்லேஜ் சூரிக்கிலிருந்து 15,20 நிமிடப் பயணத் தூரத்தில்தான்.
கிப்ஃ க்குக் காரில் 45 நிமிடப் பயணந்தான்! இப்பொழுது இங்கு மின்சாரக் கார்கள் அதிக அளவில் வந்து விட்டன. ஒரு ட்ராக்கில் விட்டுவிட்டால் அது தானாகவே
ஓடுகிறது. முன், பின் வரும் கார்களைக் கண்டறிந்து அவற்றிற்கேற்பத் தன் வேகத்தைக்கூட்டிக் குறைத்துக் கொள்கிறது. போகப்போக, மனிதனை விஞ்ஞானம் முழுச் சோம்பேறியாக்கிச் சாகடிக்கும் என்றே தோன்றுகிறது. ஏஐ முழுதான பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அதுதான் நடக்கும் போலும்.இங்கு சாலைகளில் பயணம் செய்வதே உற்சாகந்தான்! மலைகளைக் குடைந்து மலைக் குடைவுப் பாதைகளை அவ்வளவு நேர்த்தியாகச் செய்து வைத்திருக்கிறார்கள். போக ஒன்று! வர ஒன்று! சில இடங்களில் மேலும் ஒன்று என்று விளையாடி வைத்திருக்கிறார்கள்!
சாலைகளின் நேர்த்தி, நாம் காரில் செல்வதாகவே காட்டுவதில்லை. ஏதோ விமானத்தில் பயணிப்பதைப் போன்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. நமது பொறியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் மனது வைத்தால் நம்மூரிலும் இந்த நேர்த்தி சாத்தியமே!
சாலைகள் மட்டுமல்ல, சாலைகளில் செல்வோரும் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். 80 கி.மீ., வேகம் என்றால்
அந்த ஸ்பீடில் மட்டுமே செல்கிறார்கள். 120 கி.மீ., என்றால் உடன் வேகத்தைக் கூட்டிக் கொள்கிறார்கள். மீண்டும் அறுபதே என்றாலும் அந்த வேகம் மட்டுமே!
நமது கிப்ஃ வில்லேஜ் வந்ததும், பார்க் செய்யும் இடத்திலிருந்து எப்படிப் போகவேண்டுமென்பதை சிறு பலகை அறிவிப்பின் மூலம் உணர்த்துகிறார்கள். வீடுகளைக் கடந்து மலையில் ஏறிச் செல்ல, டீப் ஸ்லோப் (Deep Slope) இல்லாத சாலைகளை அமைத்திருக்கிறார்கள். வயதானவர்களுங்கூட எளிதாகவே நடந்து, இருபுறமும் பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களை ரசிக்கலாம். ஆங்காங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல, மர பெஞ்சுகளை அமைத்திருக்கிறார்கள்.
மேலே செல்ல ஆரம்பிக்கும் சாலையிலேயே பெரிய ஐஸ் க்ரீம் பார்லர் உண்டு. 4.8 கி.மீ., உள்ள தூரத்தை நாம் வேடிக்கை பார்த்தபடியே கடக்கலாம். சைக்கிளிலும் செல்கிறார்கள். சுமார் 2.0 கி.மீ., தாண்டியதும் நடமாடும் ட்ரிங்க்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கடை வைத்திருக்கிறார்கள். மலைக்காற்று உடலைத் தழுவ, இதமாக ஏதாவது சாப்பிடும்போது ஏற்படும் உற்சாகமே அலாதியானதுதானே!
மண்ணின் மீது உள்ள அனைத்து இன்பங்களையும் ரசிக்கும் மக்களாகவே இங்குள்ளவர்கள் இருக்கிறார்கள்.
நாமோ அடுத்த தலைமுறைக்குச் சேர்க்க வேண்டுமென்றும், சிலவற்றைச் செய்தால் திருஷ்டிப் பட்டு விடுமென்றும் எண்ணி, நிகழ்காலத்தைக் கோட்டை விட்டு விடுகிறோம்! ஒவ்வொருவரும் இரண்டு கைகள், கால்கள் மூளையுடன்தான் பிறக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற மனோ நிலையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மதியம் சுமார் 3.00 மணிக்கு ஆரம்பித்த பயணத்தை 6.00 மணி வாக்கில் முடித்தபோது, மனதும் உடலும் லேசாகியிருந்ததை உணர மடிந்தது. அரை நாளில் எளிதான ஓர் சிற்றுலா சென்று வந்த உணர்வு மகிழ்ச்சி தந்தது! ‘ப்ளாசம்’ பார்த்தாச்சு!’ பிக் அப்’ எப்போது என்கிறீர்களா? இப்பொழுதுதானே பூக்கிறது! அது காய்த்துப் பழுத்ததும் நிச்சயமாக வருவோம்! நாம் எல்லோருந்தான்! சரியா?