
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 33 ஆண்டுகளில் இது வரை 3.70 கோடி கிமீ தூரம் விமானங்களில் பறந்துள்ளார். அமெரிக்காவின் "அப்பல்லோ 11" விண்கலத்தில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட 15.33 லட்சம் கிமீ தான் பயணித்துள்ளார். இவர் அதையும் தாண்டி நிலவுக்கு சென்று வந்த தூரத்தைவிட ஆறு மடங்கு தூரம் அதிகம் பயணித்துள்ளார்.
தன் பயணத்தில் ஒருமுறை தொடர்ந்து 12 நாட்கள் நியூயார்க் டூ சான்பிரான்சிஸ்கோ, பாங்காங் டூ துபாய் என பறந்துள்ளார். அப்போது தூங்காமல் விமான நிலைய ஓய்வறைகளில் ஓய்வெடுத்து பயணித்திருக்கிறார். 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமே 300 முறை விமானத்தில் பயணித்தார். உலகின் பல நாடுகளின் உயர்தர சொகுசு விடுதிகளில் தங்கியுள்ளார். பல நாடுகளின் உணவுகளை ருசித்துள்ளார்.
இது எப்படி சாத்தியமாயிற்று? 1990-ஆம் ஆண்டு, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். ஒரு அற்புதமான சலுகையை அறிவித்திருக்கிறது. வாழ்நாள் முழுவதற்குமான முதல் வகுப்பு பயண அனுமதி $290,000 (இன்றைய மதிப்பில் சுமார் 2.38 கோடி ரூபாய்) என அறிவித்திருக்கிறது. டாம் ஸ்டுக்கர் இந்த சலுகை பாஸ்யை வாங்கியிருந்தார். இந்தச் சலுகை உலகம் முழுவதும் முதல் வகுப்பில் வரம்பற்ற பயணத்தை அவருக்கு அனுமதித்தது.
டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் பயன்படுத்தி 2.4 கோடி மைல்கள் பயணித்து ஒரு அசாதாரண சாதனையைப் படைத்துள்ளார். இவர் நியூஜெர்சியில் ஒரு சாதாரண தொழிலாளி வர்க்கத்தில் 7 வது குழந்தையாக பிறந்தவர்தான். படிப்படியாக முன்னேறியவர்.
ஆரம்பத்தில், விமான பயணத்திற்குப் பயந்த இவருக்கு அதனைத் தணிக்கப் பிரார்த்தனையும், மது பானமும் உதவியாக இருந்துள்ளன. வேலைக்காகத் தொடர்ந்து பயணித்ததையடுத்து அவரது பயம் படிப்படியாகக் குறைந்ததுள்ளது.
2009-ஆம் ஆண்டு, யுனைடெட் ஏர்லைன்ஸில் 10 மில்லியன் மைல்களைப் பயணித்த முதல் பயணியாக அவர் மாறினார். இந்த மைல்கல்லை ஏர்லைன்ஸ் பெருமையுடன் கொண்டாடியது. 2018-ஆம் ஆண்டு, அவர் 20 மில்லியன் மைல்களை எட்டினார். 2024 மே மாதத்தில், 24 மில்லியன் மைல்களை கடந்தார்.
இதுவரை, டாம் 12,000-க்கும் மேற்பட்ட விமான பயணங்களை மேற்கொண்டு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பார்வையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை எட்டிய முதல் "யுனைடெட் ஏர்லைன்ஸ்" விமான வாடிக்கையாளர் டாம் ஸ்டுக்கர்தான். இந்த நிறுவனம் தற்போது இந்த மாதிரியான சலுகைகள் நிறைந்த பாஸ்களை வழங்குவதில்லை. எனவே இவரது சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாம் அடிக்கடி பயணிப்பவர் மட்டுமல்ல, ஏர்லைன்ஸின் பிராண்ட் தூதராகவும் மாறியிருக்கிறார். யுனைடெட் ஏர்லைன்ஸ் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இரண்டு விமானங்களுக்கு அவரது பெயரைச் சூட்டியதாகக் கூறப்படுகிறது.
அவர் எப்போதும் முதல் வகுப்பில் முன் வரிசை இருக்கை 1B-ஐ தேர்ந்தெடுப்பாராம். அதை அவர் தனது ‘இரண்டாவது வீடு’ என்று அழைக்கிறார். டாம் ஸ்டூக்கரின் இந்தப் பயணம், 2009-ஆம் ஆண்டு வெளியான அப் இன் தி ஏர் என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு உத்வேகமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு, மொத்தம் 1.46 மில்லியன் மைல்கள் 373 விமானங்களில் பயணம் செய்ததாகவும், அந்த ஆண்டு தான் பயணம் செய்வதற்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர் ரொக்கமாக செலுத்தியிருந்தால் இந்த விமானங்கள் அனைத்திற்கும் அவருக்கு $2.44 மில்லியன் செலவாகியிருக்கும்.
அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார் டாம் ஸ்டுக்கர்.
நீங்கள் விமானத்தில் ஏறும்போது விமான நிறுவனத்தின் இருக்கை வரைபட செயலியைத் திறந்து வைத்திருங்கள். நீங்கள் விரும்பிய பூட்டப்பட்ட இருக்கை திறந்தால், அதை எடுத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் விமான நிறுவனம் அதை விற்க முடியாது, அதைப் பற்றி கவலைப்படாது.
நீண்ட தூரம் பறக்கும்போது, உங்கள் கடிகாரத்தை உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப மாற்றவேண்டாம்; அதற்கு பதிலாக, மூன்று மணி நேரம் தூங்குங்கள்.
அதிகளவில் பையை ஒருபோதும் கொண்டு வரவேண்டாம். ஒவ்வொரு நகரத்திலும் சலவை நிலையங்கள் உள்ளன. கடைகள் உள்ளது. வேண்டியதை வாங்கி கொள்ளலாம். விமானங்களில் ஹெட் போன் இல்லாமல் வெறும் போனுடன் மட்டும் பயணிக்க வேண்டாம்.