
இந்தியன் ரயில்வே வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றது மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில். இந்திய ரயில்வே புதிய அம்சங்கள் ஏதேனும் அறிமுகம் செய்தால், அவை பெரும்பாலும் முதலில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் செய்யப்படுகிறது என்கிறார்கள். மதுரை:வைகை எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டு 2025 ஆகஸ்ட் 15 அன்று, 48 ஆண்டுகள் நிறைவடைந்ததை, பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் தனது முதல் சேவையை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பிறந்த நாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
வைகை அதிவிரைவு வண்டி மதுரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே 493 கிலோமீட்டர்கள் (306 mi) தூரத்தை 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நாளில் 7 மணி நேரம் 5 நிமிடங்களில் அதிவேகமாக கடந்தது, அது மதுரை ரயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு கிளம்பி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மதியம் 1.05 மணிக்கு அடைந்தது. பிறகு பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் 7 மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பயண நேரம் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் ரயிலுக்கு மூன்று நிறுத்தங்கள் மட்டுமே இருந்தன, அவை விழுப்புரம் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் திண்டுக்கல் சந்திப்பு. பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறுத்தங்கள் அதிகரிக்கப்பட்டன.
1999 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜிலிருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பொன்மலை அகலப்பாதை டீசல் இன்ஜின்களால் இழுத்துச் செல்லப்பட்டது. பிப்ரவரி 2014 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மின்சார இன்ஜின் WAP-4 மூலம் மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இழுத்துச் செல்லப்படுகிறது.
பல சிறப்புகளுக்கு சொந்தமான வைகை எக்ஸ்பிரஸ்:
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் மதுரை - சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த இந்தியாவின் முதல் ரயில் இதுவே ஆகும். அதுமட்டுமன்றி, அதுவரை இரவு ரயில்களில் மட்டுமே இருந்த உணவகப் பெட்டி (பேண்ட்ரி), பகல் நேர ரயிலான வைகை எக்ஸ்பிரஸ்சில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1979ஆம் ஆண்டு ஒய்டிஎம் 4 ஏ டீசல் என்ஜின் அறிமுகப்படுப்பட்டது.1994ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்களில் முதன் முதலாக வைகை எக்ஸ்பிரஸில் தான் 42 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன இருக்கை வசதிப் பெட்டியும் அறிமுகப்படுப்பட்டது.
1995ஆம் ஆண்டு ஒய்ஏஎம் (YAM) 1 மின்சார என்ஜின் சென்னையிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு அகல ரயில் பாதையில் மீண்டும் அறிமுகமான வைகை எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.2006ஆம் ஆண்டு 24 பெட்டிகளாக உயர்த்தப்பட்டது.2008ஆம் ஆண்டு சென்னையிலிருந்து திருச்சி வரையும், 2014ஆம் ஆண்டு சென்னை - மதுரை வரையும் மின்சார ரயிலாக மாற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டு மதுரை - சென்னை இருவழிப்பாதை அறிமுகமானபோது, வைகையின் பயணம் நேரம் 7 மணி 35 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. இரு நகரங்களுக்கு இடையிலான மிக வேகமாகப் பயணிக்கும் இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் பெற்றது.மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு பயண நேரம் 7 மணி 25 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
தென்னிந்திய ரயில்வே ஓடும் ரயிலில் உள்ள பெட்டிகளில் முதல் முறையாக டியூப் லைட்கள் மாட்டப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில்தான்.1996 ம் ஆண்டு கடும் புயல் வெள்ளம் காரணமாக விழுப்புரம் அருகே ரயில் பாதைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.அப்போது மட்டுமே வைகை எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்கள் சேவையை நிறத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.