கோவாவில் சுற்றுலா... செல்வோமா ஜாலியா...

Goa tourism
Goa tourism
Published on

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமே கோவா ஆகும். குளிர்காலத்தில் அயல்நாட்டினரும், கோடைக்காலத்தில் இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினரும் தங்கள் விடுமுறையை கழிக்க கோவாவிற்கு வருகின்றனர். கோவா அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள், மெழுகுச்சிலை காட்சியகம், பாம் இயேசு தேவாலயம் மற்றும் கோவில்களால் புகழ்பெற்று விளங்குகிறது.

சுமார் 77 மைல்களுடைய (125 கி.மீ) கரையோரப் பகுதியில் ஆங்காங்கே கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் வடக்கு கோவா கடற்கரைகள் மற்றும் தெற்கு கோவா கடற்கரைகள் என பகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட கடல் உணவுகளும், மதுபானங்களும் கிடைக்கின்றன.

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல், ஜோர்டான், நியூசிலாந்து, பிரேசில், ஃபின்லாந்து, கென்யா, நார்வே, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகை தருவதாக கூறப்படுகிறது.

வடகோவா கடற்கரைகளின் உள்ள தங்கும் விடுதிகளில் நாளொன்றுக்கு 1500 ரூபாய் முதல் அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. வடகோவா கடற்கரைகளில் தண்ணீர் விளையாட்டுகள் வான்குடை மூலமாக பறப்பது, தண்ணீர் வண்டி போன்ற தண்ணீர் விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. பாகா, கண்டோலிம், கலங்குட் ஆகியவை வட கோவாவில் உள்ள அழகான கடற்கரைகள் ஆகும்.

மிராமர், பணாஜியில் உள்ள கடற்கரை ஆகும். டோனா பவுலா கடல் பணாஜியில் உள்ள கடல் ஆகும். இங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகின்றனர். காரணம் இவை குளிப்பதற்கு உகந்த பகுதிகள் அல்ல. பிரபல இந்தி திரைப்படமான ஏக் தூஜே கே லியேவின் பெரும் பகுதியும், ரோஹித் ஷெட்டியின் சிங்கம் இந்திப் படத்தின் ஒரு சண்டைக்காட்சிகளும் இங்கே படப்பிடிப்பு செய்யப்பட்டவையாம்.

தெற்கு கோவாவில் 2.4 கிலோ மீட்டர் (1.5 மைல்)இல் அமைந்துள்ள கோல்வா கடற்கரை, அகோண்டா கடற்கரைகள் வெண்மணல் கடற்கரை என்றும் அழைக்கப்படுகின்றன. கோல்வா கடற்கரை நீச்சல் பகுதிகளில் எச்சரிக்கைகள் கொடியிடப்பட்டுள்ளதோடு, உயிர் காக்கும் படையினரும் 24 மணி நேரமும் ரோந்தில் உள்ளனர்.

என்.பத்ரி - கோவா கட்டுரை ஆசிரியர்
என்.பத்ரி - கோவா கட்டுரை ஆசிரியர்

கோவா உலகப்புகழ் வாய்ந்த தலங்களான பாம் ஜீசஸ் பசிலிக்கா மற்றும் சில குறிப்பிடத்தக்க கன்னி மாடங்களைக் கொண்டுள்ளது. பசிலிக்காவில் கோவாவின் புனித இரட்சகர் என பல கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்ட ஜோசப் வாஸ் என்பவர் தான் கோவாவின் மறைமாகாணத்தின் இரட்சகர் ஆவார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படுகிறது.

இங்குள்ள வெல்காஸ் கான்குயிஸ்டாஸ் என்கிற பகுதி போர்ச்சுகீசிய-கோவா காலத்துக் கட்டிடக்கலைக்குச் சான்றாகும். டிரக்கால், சோப்ரா, கோர்ஜியம், அகுடா, காஸ்பர் டயஸ் மற்றும் கபோ-டி-ரமா போன்ற பல கோட்டைகள் இங்குள்ளன.

கோவாவின் பல பகுதிகளில், இந்தோ-போர்ச்சுகீசிய காலக் கட்டிடக்கலைக்குச் சான்றாக இன்றும் பல மாளிகைகள் நிலைத்து இருக்கின்றன. பனாஜியில் உள்ள போன்டைன்ஹஸ் என்னுமிடம் கோவா மக்களின் வாழ்க்கையையும், கட்டிடக் கலை மற்றும் கலாச்சாரத்தையும் காட்டும் கலாச்சார பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
Jackfruit Seeds: தூக்கி எறியும் விதை தரும் அற்புத நன்மைகள்!
Goa tourism

கோவாவின் மங்குய்ஷி கோவில் மற்றும் மஹலசா கோவில் போன்ற சில கோவில்களில் போர்ச்சுகீசியக் கால கட்டிடக்கலையின் தாக்கம் கண்கூடாக காணப்படுகிறது. எனினும், 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றில் பெரும்பான்மையானவை இடிக்கப்பட்டு உள்நாட்டு மரபான இந்திய முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பனாஜியில் உள்ள கோவா மாநில அருங்காட்சியகமும், வாஸ்கோவில் அமைந்துள்ள கடற்படைத் தள அருங்காட்சியகமும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. இந்தியாவிலேயே கோவாவில் மட்டும் தான் இது போன்ற கடற்படைத் தள அருங்காட்சியகம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக கோவா அறிவியல் மையம் ஒன்று பனாஜியில் உள்ளது.

நாம் யாவரும் வாழ்வில் ஒரு முறையாவது அதிக செலவில்லாமல் பார்க்க வேண்டிய மிக அழகான இடம் கோவா என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
எந்நாடே என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?
Goa tourism

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com