
ஆதி பிரம்ம புராணம் போன்ற நூல்களில் கூறப்பட்டிருக்கும் ஒரு புனித நகரமாகிய உஜ்ஜையினி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானதாகும். ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள் உஜ்ஜையினியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்வு விமரிசையாக நடைபெறுகிறது. முக்கியமான கோவில்களையும், அருமையான இடங்களையும் காண, புனித நகரமான உஜ்ஜையினிக்குப் பயணிப்போமா..?
காலபைரவர் கோவில்:
உஜ்ஜையினின் காவல் தெய்வமாக கருதப்படும் கால பைரவர் கோவில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. மூன்றடுக்குகளைக் கொண்ட கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றர். தெய்வத்தின் உருவம் குங்குமம் மற்றும் வெர்மிலியனால் அடுக்கப்பட்ட பாளை வடிவ முகத்தைக் கொண்டது.
காலபைரவருக்கு மது பிரசாதமாக அளிக்கப்படுவதால், கோவிலுக்கு வெளியே இருக்கும் கடைகளில் தேங்காய், பழம், பூக்கள் கொண்ட கூடையில், ஒரு பாட்டில் மதுவும் வைத்து விற்கப்படுகிறது.
கோவில் பூசாரி, சாஸரில் சிறிது மதுவை விட்டு பிரார்த்தனை செய்தபின், சற்றே திறந்திருக்கும் காலபைரவரின் உதடுகளில் சாய்க்கையில், மது மறைந்துவிடுகிறது. நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிபவர் கால பைரவர்.
ஸ்ரீ ராம்காட்:
ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் புனிதத் தலமாகிய ராம்காட் பழமையானதும் மற்றும் பெரியதுவும் ஆகும். ஷிப்ரா நதியில் பக்தர்கள் நீராடுகின்றர். ஸ்ரீராமபிரான், தன்னுடைய தகப்பனார் தசரத மகாராஜாவிற்கு இங்கே பிண்ட பிரதானமளித்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீராம்காட்டில் தினமும் மாலையில் கங்கா ஆரத்தி சிறப்பாக நடைபெறுகிறது.
கலியாமே அரண்மனை:
உஜ்ஜையினியின் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையிலும், ஆட்சி புரிந்த அரசர்கள் மற்றும் இளவரசர்களின் வரலாற்றைக் குறிப்பிடும் சின்னமாகவும் கலியாமே அரண்மனை அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் கிடையாது.
சிந்தாமன் கணேஷ் கோவில்:
உஜ்ஜையினியில் இருக்கும் மிகப்பெரிய விநாயகப் பெருமானின் சிந்தாமன் கணேஷ் கோவிலின் உள்ளே இருக்கும் விநாயகர் சுயம்பு மூர்த்தியாவார். இவரது துணைவிகளாகிய ரித்தி-சித்தி இருவரும் இங்கே உள்ளனர். பொதுக்கூடம் மற்றும் சன்னிதியிலுள்ள வெள்ளை நிறக் கல் தூண்கள் கோவிலின் பழமையான புனிதத்தை வரையறுக்கும் வகையில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்திர்:
ஜந்தர் மந்திர் ஒரு அருமையான சுற்றுலாத்தலம். காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை பார்வையிட நுழைவுக் கட்டணம் உண்டு. ஆடியோ மற்றும் வழிகாட்டிக்கு, கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும். ருசியான உணவுகளை ஜந்தர் மந்திரில் வாங்கி சாப்பிடலாம்.
ராம் ஜனார்தன் மந்திர்:
17 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் அருமையான கட்டிடக் கலையை ராம் ஜனார்தன் மந்திரில் காணலாம். ஸ்ரீராமர் மற்றும் சீதாதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ராம் ஜனார்தன் மந்திர்.
மகா காலேஷ்வர் மந்திர்:
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகிய மகா காலேஷ்வர் மந்திர் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மேலும், மகாசக்தி பீடங்களில் ஒன்றெனக் கூறப்படும் மகா காலேஷ்வர் மந்திரில் நடைபெறும் பஸ்ம ஆரத்தி பிரபலமானதாகும்.
உஜ்ஜையினியில் இருக்கும் பட்னி பஜார், மகாசால் மார்க்கெட், ஃப்ரீகன்ஞ் மார்க்கெட் போனற இடங்களில், உள்ளூர் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உடைகள், நகைகள் என பல பொருட்களை வாங்கலாம்.
பழமையான மற்றும் புனித நகரமான உஜ்ஜையினிக்கு செல்ல, நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் இணைப்புகள் உள்ளன.