

ஊரோஸ் தீவுகள் (Uros Islands) என்பவை தென் அமெரிக்காவில் பெரு (Peru) மற்றும் பொலிவியா (Bolivia) நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள டிடிகாகா (Lake Titicaca) ஏரியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிதக்கும் தீவுகளாகும் (Uros Floating Islands). இது ஆண்டிஸ் மலைத் தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,812 மீ(12, 507 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள, கப்பல் போக்குவரத்துக்கான மிகப்பெரிய ஏரி டிடிகாகா ஏரியாகும். உலகின் மிக உயரமான மற்றும் ஆழமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் உள்ள ஊரோஸ் மிதக்கும் தீவுகள் மனிதர்களால் முழுமையாக புற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உலக அதிசய விந்தையாகும்.
மிதக்கும் தீவுகள் (Uros Floating Islands):
ஊரோஸ் பழங்குடியின மக்கள் ஏரியில் வளரும் 'டோடோரா' (Totora) என்ற சிறப்பு வகை நாணல் புற்களைக் கொண்டு செயற்கைத் தீவுகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாணல் புற்களைக்கொண்டே வீடுகள், படகுகள் மற்றும் கைவினைப் பொருட்களை செய்து, ஏரி மீதே மிதக்கும் சமூகமாக வாழ்கின்றனர். டிடிகாகா ஏரியின் நீர் மற்றும் வளம் இந்தப் பழங்குடியினரின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. மீன் பிடித்தலும், கைவினைப் பொருட்கள் தயாரிப்பதும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதும் இவர்களின் முக்கிய தொழிலாகும்.
இந்தத் தீவுகள் 'டோட்டோரா' எனப்படும் ஒருவகை நாணல் புற்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. புற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, மிதக்கும் தளங்களாக உருவாக்கியுள்ளனர். புல்லால் ஆன இந்தத் தீவுகள் தண்ணீரில் மிதக்கக் கூடியவை. தீவு அரிக்கப்படாமல் இருக்க, மக்கள் புதிய நாணல்களை மேலடுக்காக தொடர்ந்து பரப்பி பராமரித்து வருகின்றனர். இன்கா (Inca) பேரரசிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பூர்வகுடி மக்களான ஊரோஸ் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த மிதக்கும் தீவுகளை உருவாக்கினர்.
பெரு நாட்டின் புனோ (Puno) நகரின் துறைமுகத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவுகள் உள்ளன. புனோவிலிருந்து படகு மூலம் இந்தத் தீவுகளுக்கு சுமார் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம். இது ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலமாகும்.
இங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் என அனைத்தும் இந்த நாணல் புற்களாலேயே கட்டப்படுகின்றன. முனா மேட் என்பது டிடிகாகா ஏரியைச் சுற்றியுள்ள சூழலில் வளரும் ஒரு மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீராகும். இந்த அருமையான பானத்தை சுவைக்க மறக்கவேண்டாம்.
டோட்டோரா படகு சவாரி (Floating Totora Boat):
நாணல்களால் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட பாரம்பரிய படகுகளில் ஏரிக்குள் பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
டகோயில் தீவு (Taquile Island):
இந்தத் தீவு அதன் பாரம்பரிய நெசவு கலைகளுக்குப் பெயர் பெற்றது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இவர்களின் கைவினைப் பொருட்களை வாங்கவும், அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் செய்யலாம்.
அமந்தனி தீவு (Amantani Island):
முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள, இயற்கையான அழகும், அமைதியும் நிறைந்த இந்தத் தீவில் உள்ளூர் குடும்பங்களுடன் தங்கி, அவர்களின் வாழ்க்கை முறையை அறியும் 'ஹோம்ஸ்டே' (Homestay) வசதிகள் உள்ளன. இத்தீவின் மிக உயரமான பகுதிகளில் பசாட்டடா(Pachatata) மற்றும் பசாமமா (Pachamama) என இரண்டு மலைகள் உள்ளன. இவற்றின் உச்சியில் பழங்கால இன்கா மற்றும் திவானாகு (Tiwanaku) காலத்து இடிபாடுகள் காணப்படுகின்றன. மலையேற்றம் சென்று அங்கிருந்து மறக்க முடியாத சூரிய அஸ்தமனத்தைக் காணலாம்.
புனோ (Puno):
இந்த ஏரிக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கும், அங்குள்ள கலாச்சார உணவுகளை ருசிப்பதற்கும் புனோ நகரம் முக்கிய மையமாக உள்ளது. இங்குள்ள கதீட்ரல் மற்றும் பிளாசா டி அர்மாஸ் (Plaza de Armas) பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம்.
பார்வையிட சிறந்த நேரம்:
ஏரி உயரமான இடத்தில் இருப்பதால் இப்பகுதியில் இரவு நேரம் குளிர் அதிகம் இருக்கும். எனவே குளிரை தாங்கக்கூடிய ஜாக்கெட்டை எடுத்து செல்வது அவசியம். ஏப்ரல் முதல் நவம்பர் வரை வானிலை வெயிலாகவும், இனிமையாகவும் இருக்கும். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் டிடிகாகா ஏரியைப் பார்வையிட சிறந்த நேரமாகும்.
எப்படி செல்வது?
புனோ நகரத்திற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம், அருகிலுள்ள ஜூலியாகா நகரில் அமைந்துள்ளது. குஸ்கோவில் இருந்து விமானப் பயணத்திற்கு சுமார் 1 மணி நேரமும், லிமாவிலிருந்து ஒன்றரை மணி நேரமும் ஆகும். அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து புனோ நகரத்திற்கு செல்லலாம். புனோவிற்குச் சென்று அங்கிருந்து டிடிகாகா ஏரியின் மிதக்கும் தீவுகளைக் காண்பதற்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.