இந்த 18-ஆம் நூற்றாண்டு வரலாற்று அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க!


A historical wonder
A historical wonder
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ட்டக்கோட்டை (Vattakottai Fort) என்பது கன்னியாகுமரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிகப் பழங்கால கோட்டையாகும். வட்டக்கோட்டை என பெயர் பெற்றிருந்தாலும் இது செவ்வக வடிவில்தான் உள்ளது. வட்டக்கோட்டை தமிழ்நாட்டினுடைய ஒரு பகுதியாக இருந்தாலும் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களால் ஆளப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

இந்த கோட்டை 18ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மா மன்னர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் முன்னாள் கடற்படை தளபதி கேப்டன் எஸ்டேசியஸ் டி லனாய் என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இது திருவாங்கூர் ராஜ்யத்தின் படைத்தளமாகவும் போர் முகமாகவும் திகழ்ந்தது. இந்த கோட்டை திருவிதாங்கூர் அரசின் கரையோரங்களை கண்காணிக்கவும், கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டது.

கோட்டை அமைப்பு:

3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோட்டையில் ஆயுத அறை, கண்காணிப்பு கோபுரங்கள், ஓய்வறைகள் போன்றவை உள்ளன. சுவர்களின் உயரம் 25 அடி மற்றும் முன்புறம் சுமார் 29 அடி தடிமன் கொண்டது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கோட்டைக்கு 4 அடி அகலத்தில் ஒரு சுரங்கப்பாதை வழியாக ஒரு ரகசிய பாதை இருந்ததாக கூறப்படுகிறது.

அது தற்பொழுது மூடப்பட்டுள்ளது. இந்த வட்டக்கோட்டை செல்வ செழிப்பான துறைமுகமாக விளங்கிய கன்னியாகுமரி துறைமுகத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ராணுவ தளமாகும். இங்கு பாண்டியர்களின் சின்னமான மீன் சில இடங்களில் பொறிக்கப்பட்டிருப்பதால் கிபி 12ஆம் நூற்றாண்டில் இந்தக்கோட்டை சில காலம் பாண்டியர்கள் வசம் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கம்: குருசடை தீவு ஒரு விசித்திரப் பயணம்!

A historical wonder

1809 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தபொழுது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டு செல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப் பட்டுள்ளது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானை சிலைகள் வரவேற்கின்றன. ஏராளமான திறந்தவெளிகள் மற்றும் இடையில் ஒரு குளம் கொண்டு வட்டக்கோட்டை மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கின்றன. இந்த கோட்டையின் பராமரிப்பு இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமான இந்த கோட்டைக்கு அருகில் ஓடும் சிறு ஓடையும், கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேல் என்று காணப்படும் சுற்றுச்சூழலும் மனதை வெகுவாக கொள்ளை கொள்ளும்.

கன்னியாகுமரி நகரின் பல பகுதிகளில் இருந்தும் வட்டக்கோட்டைக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. வட்டக்கோட்டைக்கு அருகே உள்ள கடற்கரை கருப்பு மணலுக்கு பெயர் பெற்றது. அமைதியான சூழலும், ஒரு புறம் கடல் அலைகளின் காட்சியும், மற்றொருபுறம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் காட்சியும் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

வட்டக்கோட்டையும், வட்டக்கோட்டை கடற்கரையும் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய சிறந்த அருமையான இடமாகும். வட்டக்கோட்டையின் கம்பீரமான காட்சியும், கடற்கரையின் இயற்கையான எழிலும், கடற்கரையில் இருந்து கடலின் காட்சி பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். சமயம் கிடைக்கும் பொழுது கன்னியாகுமரி பயணத்தில் இந்த கோட்டையையும், கடற்கரையும் தவறாமல் சென்று பார்க்கவும்.

இதையும் படியுங்கள்:
வெளிநாடு செல்ல பிளான் பண்றீங்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

A historical wonder

எப்படி செல்வது?

இக்கோட்டை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். ‌நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரின் பல பகுதிகளில் இருந்தும் வட்டக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com