தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள வியட்நாம் அதனுடைய வளமான வரலாறு மற்றும் அழகான நிலப்பரப்புகளால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. வியட்நாமில் பார்த்து ரசிக்க வேண்டிய அழகான மற்றும் சுவாரசியமான இடங்கள் நிறைய உள்ளன.
வியட்நாமின் தலைநகரம் ஹனோய். நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹனோய் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கிய நகரமாகும். இது பழங்கால கோவில்கள், காலனித்துவ கட்டடங்கள், நவீனமான வானளாவிய கட்டடங்கள் என்று பழமையும் புதுமையும் கலந்த நகரமாகும். வியட்நாமின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் இடமாக உள்ளது. கம்பீரமான ஹோ சி மின் கல்லறை, பண்டைய இலக்கிய கோவில், ஹோன் கீம் ஏரி மற்றும் பழைய காலனித்துவ கட்டடங்கள் ஆகியவற்றை காண்பதன் மூலம் ஹனோயின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய முடியும்.
இந்த ஹா லாங் விரிகுடா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். வியட்நாமின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான இது சுண்ணாம்பு பாறைகள் மற்றும் தீவுகளால் சூழப்பட்ட ஒரு அழகிய கடல் பகுதியாகும். டோன்கின் வளைகுடாவின் மரகத வண்ண நீரிலிருந்து எழும் ஆயிரக்கணக்கான சுண்ணாம்பு தீவுகளைக் கொண்டுள்ளது. இங்கு சுகமான ஒரு கப்பல் பயணம், கயாக்கிங் அல்லது சில குகைகள் மற்றும் மிதக்கும் கிராமங்களை அழகாகக் காண முடியும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காணவும் ஏற்ற இடம் இது. சுண்ணாம்பு குன்றுகள் மற்றும் படகு பயணங்களுக்கு பெயர் பெற்ற இடம் இது.
'ஹோய் ஆன்' என்பது கடந்த காலத்தின் கட்டிடக்கலை மற்றும் சூழலை பாதுகாக்கும் மிக அழகான நகரமாகும். இது ஒரு காலத்தில் சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வணிகர்களை ஈர்த்த முக்கிய வர்த்தகத் துறைமுகமாக இருந்தது. ஆனால், இன்றோ நகரத்தின் பன்முக கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக மர வீடுகள், கோவில்கள், பாலங்கள் என ரசிக்க வேண்டிய இடங்கள் அதிகமுள்ளன. மேலும் இந்த இடம் கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளுக்கும் பிரபலமானது.
சாபா என்பது வியட்நாமின் வடமேற்கில், சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு மலைப்பாங்கான நகரமாகும். பசுமையான மலைகள் மற்றும் பழங்குடி கிராமங்களுக்கு பெயர் பெற்றது. இது பாரம்பரிய கிராமங்களில் வசிக்கும் வண்ணமயமான ஆடைகளை அணிந்த ஹமாங், டாவோ, டே மற்றும் கியே போன்ற பல இன சிறுபான்மையினரின் தாயகமாகும். நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், மலை சிகரங்கள் போன்றவை மலையேற்றம் செய்பவர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடமாகும். கேபிள் கார் மூலம் இந்தோ சீனாவின் மிக உயரமான ஃபான்சிபன் மலையையும் பார்க்க முடியும்.
வடக்கு வியட்நாமின் தெற்கில் உள்ள மாகாணமான நின் பின் சுண்ணாம்பு கற்கள், ஆறுகள், குகைகள் மற்றும் நெல் வயல்களின் அழகான கண் கவரும் நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள மக்களின் கிராமப்புற வாழ்க்கையை காண்பதற்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு கிராமப்புறங்களை சுற்றி வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். நின் பின்னில் bamboo rafting மிகவும் பிரபலமானது.
ஹா கியாங் என்பது வியட்நாமின் வடக்கே சீனாவின் எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும். இது வியட்நாமின் மிகவும் தொலைதூர மற்றும் தொடப்படாத பகுதிகளில் ஒன்றாகும். மாறுபட்ட கலாச்சாரங்களை இங்கு காண முடியும். ஹா கியாங் அதன் அழகிய லூப் சாலைக்கும் பிரபலமானது. இங்கு மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், காடுகள் மற்றும் பூக்களின் அற்புதமான நிலப்பரப்புகளைக் காண முடியும்.
வியட்நாமில் பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. அவை கலாச்சார ஆர்வலர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானவை. இந்த தளங்கள் வியட்நாமின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள உதவும்.
செல்ல சிறந்த நேரம், நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் வறண்ட காலம் சிறந்த நேரமாகும். இந்த சமயத்தில் வசதியான வெப்ப நிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் இருப்பதால் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பார்வையிட ஏற்றதாக இருக்கிறது.