

மற்றவர்கள் கண்களை அகலவிரித்து, புகழ்ந்து அந்த இடத்தைப் பற்றி பேசியபொழுது நாமும் ஒரு முறையாவது அங்கு சென்று பார்த்து விடவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. பார்க்க வாய்ப்பு கிடைத்த பொழுது நன்றாகக் கண்டுகளித்து அனுபவித்த இடம் அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் (Walt Disney World Resort). உலகின் மிகச்சிறந்த மற்றும் பிரபலமான பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ (Orlando) நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இதனைப் பற்றிய சிறப்பான கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இதோ:
ஒரு பிரம்மாண்டமான உலகம்
வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட் வெறும் ஒரு பூங்கா மட்டுமல்ல; இது ஒரு சிறிய நகரத்தைப் போன்ற பரப்பளவு கொண்டது. இதில் நான்கு தனித்தனி கருப்பொருள் பூங்காக்கள் (Theme Parks), இரண்டு நீர் பூங்காக்கள் (Water parks), ஏராளமான தங்கும் விடுதிகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் உள்ளன.
நான்கு முக்கிய பூங்காக்கள்: வால்ட் டிஸ்னியின் முக்கிய ஈர்ப்புகளாக இவை நான்கு உள்ளன.
மேஜிக் கிங்டம் - Magic Kingdom:
இதுவே டிஸ்னியின் மிகப் புகழ்பெற்ற பூங்கா. புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கோட்டை (Cindrella castle) இங்கேதான் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் மாயாஜால உலகம் இது. இந்தக் கோட்டையின் மீது இரவில் நடைபெறும் வானவேடிக்கை நிகழ்ச்சியில்போது கோட்டை சுவரில் நிகழ்த்தப்படும் புரஜக்ஷன் மேப்பிங் & சிறப்பு விளைவுகள் (Projection Mapping & Effects) தொழில்நுட்பம் அந்தக் கோட்டையே பேசுவது போலவும், மாறுவது போலவும் பிரம்மாண்டமான மாயையை உருவாக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாக என்றென்றும் நினைவில் நிழலாடுகிறது. அப்படி ஒரு அருமையான தொழில் நுட்பம் இணைந்தது இது.
எப்காட் - Epcot:
இதன் தொழில்நுட்பம் எதிர்காலம் மற்றும் உலகின் பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அமைக்கப் பட்டுள்ளது. எப்காட் பூங்காக்களில் உள்ள சவாரிகளில் பயன்படுத்தப்படும் இந்த ரோபோக்கள் மிக நுணுக்கமான மென்பொருட்களால் (software programming) இயக்கப்படுவது இதன் சிறப்பம்சமாக திகழ்கிறது.
டிஸ்னி ஹாலிவுட் ஸ்டுடியோஸ் - Disney's Hollywood Studios:
திரைப்படங்கள் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட சாகச சவாரிகள் மற்றும் நிகழ்ச்சிகள் இங்கு உண்டு.
டிஸ்னி அனிமல் கிங்டம் - Disney's Animal Kingdom:
இது உலகின் மிகப்பெரிய விலங்கியல் கருப்பொருள் பூங்காக்களில் ஒன்று. இயற்கை மற்றும் விலங்குகள் சார்ந்த சாகசங்கள் நிறைந்த இடம்.
வரலாறு:
வால்ட் டிஸ்னி அவர்கள் தனது கனவுத்திட்டமாக இதனை உருவாக்கினார்.1971 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இது அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
இந்த டிஸ்னி வேர்ல்ட் இவ்வளவு பிரபலமாவதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அனுபவம்தான். டிஸ்னி கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பது, அற்புதமான பரேடுகள் (Parades) மற்றும் இரவு நேர வானவேடிக்கை நிகழ்ச்சிகள் என இது ஒரு மாயாஜால உணர்வைத் தருகிறது. இதனால் இது பிரபலம் அடைந்துள்ளது.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் குறிப்பிடத்தக்கது. Monorail, படகுகள், பேருந்துகள் மற்றும் தங்கும் விடுதிகள் என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கின்றன.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தம்பதிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. இதுவும் இது பிரபலமடைய காரணமாகின்றது.
டிஸ்னி ரிசார்ட்டுக்கு சென்றுவிட்டால் இதை எல்லாம் கட்டாயமாக நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம். டிஸ்னி வேர்ல்ட் மிகவும் பெரிய இடம் என்பதால் இங்கு சென்று வர குறைந்த பட்சம் 4, 5 நாட்களாவது தேவைப் படுகிறது. மேலும் அவரவர் விருப்பம் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்ப இரண்டு நாட்களிலும் பார்க்கலாம். ஒரே நாளிலும் சென்று வரலாம்.
சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்ட டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்வது அவசியம். ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் ஜூலைகளில் சென்று வரலாம். அப்போது டிக்கெட்டின் விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
அமெரிக்கா செல்பவர்கள் குறிப்பாக ஃப்ளோரிடா மாகாணத்துக்குச் செல்பவர்கள் வால்ட் டிஸ்னி ரிசார்ட்டை தவறாமல் கண்டுகளித்து வாருங்கள்.
நாங்கள் அங்கு சென்ற நாள் அன்னையர் தினமாக இருந்ததால், அங்குள்ள பல்வேறு பெண்மணிகள் 'ஹாப்பி மதர்ஸ் டே' கூறி போட்டோ எடுத்துக் கொண்டது மறக்க முடியாத அனுபவம்.