வானில் தோன்றும் வானவில், நிலத்தில் தோன்றினால்? வானவில் மலைகள் எங்கு உள்ளன தெரியுமா?

Rainbow Mountains
Rainbow Mountains
Published on

உலகில் உள்ள நிலப்பரப்புகளில் உயரமானது மலைகள். பச்சை பசேல் என்று கண்களை கவரும் வகையில் இருக்கக்கூடிய மலைகளை நாம் அதிகமாக பார்த்திருப்போம். அதையும் தாண்டினால் வெள்ளை வெளேரென்று மனதை கொள்ளை கொள்ளும் பனி மலைகளை பார்த்திருப்போம். இவற்றையெல்லாம் தாண்டி கண்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும் வானவில் மலைகளைத் பற்றி இப்பதிவில் காணலாம். நம் கண்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வானவில் மலைகள் உலகின் இரண்டு இடங்களில் உள்ளன. எங்கு தெரியுமா? 

1) சீனாவில் வடமேற்கில் உள்ள கன்சு மாகாணத்தில் சுமார் 200 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது ஜாங்கியே டான்சியா தேசிய பூங்கா. இந்த இடத்தில் தான் வண்ணமயமான வானவில் மலைகள் உள்ளன. இவைஉண்மையிலேயே மலைகள் கிடையாது. உயரமான நிலப்பரப்புகள்தான். 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை பாரம்பரிய தலமாக அறிவித்தது. அதற்கு பின்னர் இந்த வானவில் மலைகள் சர்வதேச சுற்றுலா தலமாக மாறியது.

வண்ணமயமான மலைகள் மற்றும் பாறைகளுக்கு புகழ்பெற்ற ஜாங்கியே டான்சியா சுமார் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் ஒரு பகுதியாக இருந்ததாம். பின் டெக்கானிக் தட்டு மோதலின் விளைவாக நிலப்பரப்புகள் மடிந்து நாளடைவில் மலைகளாக மாறியதாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடிய இத்தகைய வானவில் மலைகள் சீனாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

வானில் தோன்றும் வானவில் நிலத்தில் தோன்றினால் எப்படி இருக்கும்! அதைப்போலவே வானவில்லின் ஏழு நிறங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும் இந்த வானவில் மலைகள் ஒரு முறை பார்த்தாலே எப்போதும் கண்ணை விட்டு அகலாக அற்புதக் காட்சிகளாக கண்களுக்குள் பதிந்து விடுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆமைத் தீவு எங்கிருக்கிறது தெரியுமா?
Rainbow Mountains

2) மற்றுமொரு வானவில் மலைகள் தென் அமெரிக்காவின் பெருநாட்டில் உள்ளன.

அடுத்தடுத்து நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளாலும் புவியின் மேல் அடுக்கு நகர்வினாலும் ஏற்பட்டது இத்தகைய வானவில் மலைகள். பூமிக்கு அடியில் உள்ள பல்வேறு வகையான தாது பொருட்கள் மேலே வாரி இறைக்கப்பட்டதன் விளைவாக இந்த மலைகள் பார்ப்பதற்கு வானவில்லை ஒத்த வண்ணங்களால் நிரம்பி வழிகின்றன. பூமிக்கு அடியில் காணப்படும் இரும்புகளில் இருந்து சிவப்பு நிறத்தையும் இரும்பு சல்பைடிலிருந்து மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தையும் குளோரைடு ஊதா  நிறத்தையும் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

2013 ஆம் ஆண்டு வரை இப்படி ஒரு மலைகள் இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருந்ததாம். ஏனெனில் 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த மலைகள் கடுமையான பனியால் மூடப்பட்டிருந்ததாம். அதன் பின் பனி உருகியதால்  வண்ணமயமான இந்த வானவில் மலைகள் கண்டறியப்பட்டதாம். இப்போது வரை இதில் உள்ள தாதுக்களை எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்களை அமைக்கும் பணியும், அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்களின் எதிர்ப்பு குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:
மரத்தடியில் விமானப் பயணிகள் காத்திருக்கும் விமான நிலையம்!
Rainbow Mountains

தற்போது பெருநாட்டில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் இந்த வானவில் மலைகளும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இதனை அதிகமாக பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள காலநிலைப்படி ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட காலம் நிலவுவதால் மலைகளின் வண்ணங்களை தெளிவாக பார்க்க முடிகிறதாம்.

உள்ளூரைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு சுற்றுலா வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்களாம். சீனா மற்றும் பெரு நாட்டிற்கு சென்றால் இந்த அற்புதமான வானவில் மலைகளை  நீங்களும் பார்த்து மகிழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com