இந்தியாவில் மிகவும் மலிவான பட்ஜெட்டில் தொலைதூரம் பயணிக்க இரயில் பயணம் தான் சிறந்தது. அதோடு இரயில் பயணத்தில் உடல் சோர்வும் குறைவாக இருக்கும். நீண்ட தூர இரயில் பயணத்திற்கு பலரும் முன்பே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்வது வழக்கம். குறைந்தபட்சம் 2 மாதத்திற்கு முன்பே டிக்கெட்டை புக்கிங் செய்தால் பெர்த் கட்டாயம் கிடைத்து விடும். ஆனால், அவசரத் தேவைக்கு உடனே இரயில் பயணத்தில் பயணிக்க தட்கல் டிக்கெட் உதவுகிறது. இதையும் தாண்டி ஒரு ரிசர்வ் டிக்கெட் முறை தெற்கு இரயில்வேயில் மட்டும் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
இரயிலில் பயணிக்க முன்பே திட்டமிட்டு டிக்கெட்டை ரிசர்வ் செய்து விட்டால், நிம்மதியாக பயணிக்கலாம். ரிசர்வ் செய்யவில்லை என்றால் பொதுப் பெட்டிகளில் அவஸ்தையான பயணத்தையே மேற்கொள்ள நேரிடும். குறைந்தபட்சம் ஒரு இரயிலில் 2 பொதுப் பெட்டிகள் மட்டுமே இருப்பதால், கூட்டம் அலைமோதும். இதற்கு விடிவுகாலமே இல்லையா எனப் புலம்பும் பயணிகள் ஏராளம். இப்படியான சூழலில் பாதி வழியில் பொதுப் பெட்டிகளில் ஏறுபவர்களின் நிலைமை இன்னும் மோசம். கழிவறைக்குச் செல்வது கூட கடினமாகவே இருக்கும்.
இரயில் தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது, பாதி வழியில் ஏறும் பயணியாக இருந்தால், உங்களுக்கு டி-ரிசர்வ் டிக்கெட்டுகள் உதவிகரமாக இருக்கும். அது என்ன டி-ரிசர்வ் டிக்கெட்டுகள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஏனெனில் இதுபற்றி போதிய விழிப்புணர்வு பயணிகள் மத்தியில் இல்லை என்பதே நிதர்சனம். டி-ரிசர்வ் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் ரிசர்வ் பெட்டிகளில் நிம்மதியாக பயணிக்க முடியும். ஆனால் டி-ரிசர்வ் பெர்த் காலியாக இருந்தால் மட்டுமே இந்த டிக்கெட் வழங்கப்படும்.
உதாரணத்திற்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரைச் செல்லும் செந்தூர் விரைவு எக்ஸ்பிரஸை எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருந்து மதுரை வரை ஒருவர் ரிசர்வ் செய்து பயணித்தால், மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை அந்த பெர்த் காலியாகவே இருக்கும். இந்த பெர்த் தான் டி-ரிசர்வ் என அழைக்கப்படுகிறது. இந்த பெர்த் காலியாக இருக்கும் பட்சத்தில் டி-ரிசர்வ் டிக்கெட் வழங்கப்படும். அதுவும் இரயில் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே வழங்கப்படும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. இரயில் நிலையத்தில் மட்டுமே வாங்க முடியும்.
டி-ரிசர்வ் டிக்கெட்டுகள் பற்றி இரயில் பயணிகள் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் தான் அவசரத்திற்கு திடீரென செல்வோர் பொதுப் பெட்டிகளில் பயணிக்கிறார்கள். டி-ரிசர்வ் பெர்த்கள் காலியாக இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்த பின்னர், பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வதைப் பற்றி சிந்திக்கலாம்.
நாளுக்கு நாள் இரயில்களில் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரயில் பயணம் குறித்த தகவல்களை நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதிகபட்சமாக 100 கி.மீ. வரை தான் இந்த டிக்கெட்டில் பயணிக்க முடியும். தெற்கு இரயில்வே சார்பில் இயக்கப்படும் 35 இரயில்களில் மட்டுமே தற்போது டி-ரிசர்வ் டிக்கெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த சேவையை இன்னும் விரிவுபடுத்த தெற்கு இரயில்வே திட்டமிட்டு வருகிறது.