

“உலகம் ஒரு புத்தகம்; பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்” என்ற கருத்து, சுற்றுலாவின் சிறப்பை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளையும், அவற்றின் இயற்கை, வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள சுற்றுலா ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்:
உலகின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலங்களை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள ஈஃபில் கோபுரம். உலகின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இது, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள கொலோசியம் பழங்கால வரலாற்றின் சாட்சியாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தப் பிரம்மாண்டக் கட்டடம், ரோமானியப் பேரரசின் வரலாற்றை நினைவூட்டுகிறது.
எகிப்தில் உள்ள கிசா பிரமிடுகள் உலகின் பழமையான அதிசயங்களில் முக்கியமானவை. பாலைவனத்தின் மத்தியில் பிரம்மாண்டமாக நிற்கும் இந்தப் பிரமிடுகள், பண்டைய மனிதர்களின் கட்டிடக்கலைத் திறனை இன்றும் வியக்க வைக்கின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலை, சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதேபோல், ஜப்பானின் கியோட்டோ நகரம் பாரம்பரிய கோயில்கள், தோட்டங்கள் மற்றும் பழமையான கலாசாரத்திற்காகப் புகழ் பெற்றது.
இந்தியாவிலும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு பஞ்சமில்லை. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ராஜஸ்தானின் அரண்மனைகள், கேரளாவின் இயற்கைக் காட்சிகள், காஷ்மீரின் மலைப் பகுதிகள், தமிழ்நாட்டின் கோயில் நகரங்கள் என ஒவ்வொரு இடமும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
சுற்றுலா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. புதிய இடங்களைப் பார்ப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறை, உணவு, கலை, மொழி, பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. சுற்றுலாத் துறை உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில் இயற்கையையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு பயணியின் பொறுப்பாகும்.
சீனாவின் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவர் மலைகளின் மீது நீண்டு செல்லும் பிரம்மாண்டமான கட்டுமானமாகும். இதன் வரலாறும் கட்டிடக் கலைச் சிறப்பும் உலகம் முழுவதிலும் இருந்து பயணிகளை ஈர்க்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கிறிஸ்து மீட்பர் சிலை மலை உச்சியில் கைகளை விரித்தபடி நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ், தனித்துவமான கட்டிடக் கலைக்காக உலகப்புகழ் பெற்றது. கடலும் நகரமும் இணையும் அழகிய பின்னணியில் அமைந்திருப்பது இதன் சிறப்பை மேலும் அதிகரிக்கின்றன. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகள் பனிச்சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்காக சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக உள்ளன.
துருக்கியின் கப்படோக்கியா, வித்தியாசமான பாறை அமைப்புகளுக்கும் வெப்பக்காற்று பலூன் பயணத்திற்கும் புகழ் பெற்றது. கிரீஸின் சாண்டோரினி தீவு வெள்ளை நிற வீடுகள், நீலக்குவி மாடங்கள் மற்றும் கடல் காட்சிகளால் தனி அழகைப் பெற்றுள்ளது.
ஆப்பிரிக்காவின் செரெங்கேட்டி தேசியப் பூங்கா வன விலங்குகளையும் இயற்கை வாழ்வையும் நேரில் காண விரும்புவோருக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. தென் அமெரிக்காவின் மச்சு பிச்சு, மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பழமையான இன்கா நாகரிகத்தின் அற்புதமான நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் இயற்கை, வரலாறு, கட்டிடக் கலை, கலாச்சாரம் என வெவ்வேறு சிறப்புகளைக் கொண்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பது உலகின் பல்வேறு முகங்களை அறிந்துகொள்ளும் அழகிய வாய்ப்பாக அமைகிறது.
சுற்றுலா தரும் சுவாரஸ்யமான அனுபவங்கள்:
ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம் மலைப் பாறைகளையே செதுக்கி உருவாக்கப்பட்ட பழமையான நகரமாகும். அதன் இளஞ் சிவப்பு நிறப் பாறைகளால் இது "ரோஸ் சிட்டி" என்றும் அழைக்கப்படுகிறது.
இலங்கையின் சிகிரியா பாறைக் கோட்டை, உயரமான பாறையின் மீது அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். அங்குள்ள பழமையான சுவரோவியங்களும் பாறை ஓவியங்களும் பயணிகளை ஆச்சரியப் படுத்துகின்றன.
பெருவில் உள்ள மச்சு பிச்சு கடல் மட்டத்திலிருந்து உயரமான மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு செல்லும் பயணம் ஒரு சாகச அனுபவமாகவும் அமைகிறது.
ஐஸ்லாந்தின் ப்ளூ லகூன் வெந்நீர் ஊற்றுக்காகப் புகழ்பெற்றது. இயற்கையான புவிவெப்ப ஆற்றலால் உருவாகும் இந்த நீர் நிலை பனிக்குளிரான சூழலிலும் வெதுவெதுப்பான நீரில் ஓய்வெடுக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
இத்தகைய இடங்கள் வெறும் புகைப்படம் எடுக்கும் தலங்களாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு நாட்டின் வரலாறு, இயற்கை அல்லது பண்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
உலக சுற்றுலா தினம், நாம் வாழும் உலகின் அழகையும் பன்முகத்தன்மையையும் நினைவுபடுத்தும் நாளாகும். புதிய இடங்களை ரசிப்பதுடன் அவற்றின் இயற்கை மற்றும் கலாசாரத்தை மதித்து பாதுகாப்பதும் அவசியம். பொறுப்பான சுற்றுலா மூலம் அழகான உலகை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து வழங்கலாம்.
உலக சுற்றுலா தினத்தின் சிறப்பை உணர்ந்து, உலகின் புகழ்பெற்ற பல வரலாற்று மற்றும் இயற்கை அதிசயங்களைப் பற்றிய புதிய தகவல்களையும் பயணத்தின் அவசியத்தையும் வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்வார்கள்.