

சுற்றுலா செல்லும்போது அந்த நாட்டின் கலாச்சாரம், இயற்கை அழகுடன் பாதுகாப்பும் அவசியம் என்பதைக் வலியுறுத்தும் இந்த கட்டுரை, பாஸ்போர்ட் குறியீடு, உலக அமைதி குறியீடு, ஆபத்து மற்றும் பாதுகாப்புக் குறியீடு போன்ற சர்வதேச அளவுகோல்களை வைத்து ஆப்கானிஸ்தான் முதல் வடகொரியா வரை பல நாடுகள் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டிய ஆபத்தான நாடுகள் ஆக பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகத்தை சுற்றிப் பார்த்து விடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆழ்மனது விருப்பமாக இருக்கும். அதனால் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு பிடித்த இயற்கை சூழ்ந்த இடங்களை தேடித் தேடி பயணம் மேற்கொள்வர். அந்த நாட்டின் கலாச்சாரத்தையும் உபசரிப்பையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பது போல அந்நாட்டின் பாதுகாப்பையும் மனதில் கொண்டே பயணம் மேற்கொள்வர்.
மேலும் போர்கள், உள்நாட்டு கலவரங்கள், அரசியல் ஸ்திரத்தன்மை, கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடாத ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
2026ம் ஆண்டு டூரிசம் ரிவ்யூ' (Tourism Review) பாஸ்போர்ட் குறியீடு, உலக அமைதி குறியீடு, ஆபத்து, பாதுகாப்புக் குறியீடு போன்ற சர்வதேச குறியீடுகளை அடிப்படையாக வைத்து சுற்றுலாப் பயணிகள் செல்லக் கூடாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடாத ஆபத்தான நாடுகளின் பட்டியல்
1. ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், பல ஆண்டுகளாக ஆயுத மோதல்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும் வெளிநாட்டு குடிமக்களுக்கு தூதரக ஆதரவு குறைவாக உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களது குடிமக்களை ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதன் காரணமாக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது.
2. ஏமன்
ஏமன் மிக மோசமான மனிதநேய சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் உள்நாட்டுப் போர், அரசியல் சீர்குலைவு, பயங்கரவாதம், கடத்தல்கள் மற்றும் உள்கட்டமைப்பு சீரழிவு காரணமாக உலகின் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஏமனில் இருக்கும் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, சுகாதார சேவைகளும் மிகவும் குறைவாக உள்ளதால் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஏமனை கொண்டு போய் சேர்த்துள்ளது.
3. சிரியா
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான பல்மைரா மற்றும் டமாஸ்கஸ் போன்றவை சிரியா நாட்டில் உள்ளன. ஆனாலும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் தீவிரமாக பல பிராந்தியங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் சிரியாவில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வருவதோடு, அரசியல் ஸ்திரமற்றதன்மையும் பயணிகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாத ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிரியா இடம் பிடித்துள்ளது.
4. ஈராக்
ஈராக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாக்தாத் மற்றும் குர்திஸ்தான் பகுதிகள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனாலும் ஈராக் நாட்டின் பெரும்பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தங்களும், அபாயங்களும் கோஷ்டி மோதல்களும் அரசியல் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து நிலவி வருகிறது. சில பகுதிகள் ஈராக் நாட்டில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சர்வதேச பயண எச்சரிக்கைகள் காரணமாக ஈராக்கிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவே பரிந்துரைக்கிறது.
5. வட கொரியா
வடகொரியா உலகின் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக இருந்து வருகிறது. அரசின் கடுமையான வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டும். தனியாக பயணம் செய்ய முடியாது என்பதோடு உள்ளூர் பொதுமக்களுடன் பேசுவதற்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் வடகொரிய நாட்டில் உள்ளன.
சிறிய சட்ட மீறல்களுக்கு கூட பலத்த சட்டரீதியான தண்டனைகளை வெளிநாட்டினர் சந்திக்க நேரிடும் என்பது உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யக்கூடாத ஆபத்தான நாடுகளின் பட்டியலில் வடகொரியா இடம்பிடித்துள்ளது.
சுற்றுலா செல்லும் நாட்டில் தனியாக பயணிப்பது, எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றிப் பார்ப்பது, வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நாட்டின் அமைதி, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை, பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பது இயற்கையை கண்டு ரசிப்பதற்கு மனதளவில் தடைகள் இல்லாமல் இருக்கும் நாடுகளே ஆபத்தற்ற நாடுகளாக சுற்றுலாப் பயணிகளின் தோழனாக உள்ளன. இவை இல்லாத நாடுகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் உள்ளதால் சுற்றுலா செல்லும் பயணிகள் மேற்கூறிய நாடுகளை கவனத்தில் கொண்டு அங்கு பயணிப்பதை தவிர்த்து விடவேண்டும்.
இந்தக் கட்டுரையின் மூலம் உலக நாடுகளின் பாதுகாப்பு நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, எந்தவிதமான ஆபத்துகளும் இன்றி உங்கள் கனவுப் பயணத்தை முழுமையான மனநிறைவுடனும் பாதுகாப்பாகவும் திட்டமிடும் திறனைப் பெறுவீர்கள்.