ஆடிப்பூரத்தில் 1008 பால்குட அபிஷேகம் நடக்கும் திருக்கோயில்!

Kundrathur Nageswarar temple
Kundrathur Nageswarar temple
Published on

சேக்கிழாரின் சிவபெருமான்:

பெரியபுராணத்தை எழுதிய தெய்வச் சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்ட திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டத்தில் குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் (வட திருநாகேஸ்வரம்).

இது கும்பகோணத்தில் உள்ள நாகநாதர் சுவாமி திருக்கோயிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டதாகும். கும்பகோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரரை வழிபடுவதற்காக அங்கு சென்ற சேக்கிழார் சிவனின் மீது பக்தி பூண்டார். அடிக்கடி அங்கு சென்று வழிபட முடியாததால் அவர் பிறந்த குன்றத்தூரில் சிவத்தலம் ஒன்றை அமைத்து வட திருநாகேஸ்வரம் என்று பெயர் வைத்தார் என்கிறது புராண வரலாறு. 

சென்னை பல்லாவரத்தில் இருந்து 7 கிலோமீட்டர், போரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இத்தடங்களில் பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்து நிலையத்திலிருந்து நேரே கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரம் பக்தியுடன் வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் சேக்கிழார் சன்னதி பிறகு விநாயகர் சன்னதி. உள்ளே லிங்க வடிவில் நாகத்தின் கீழ் அருள்மிகு நாகேஸ்வரப் பெருமான் காட்சி தருகிறார். அம்மன் காமாட்சி அம்மன் என அழைக்கப்படுகின்றாள்.

இக்கோயில் மிகப் பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் காட்சி தருகிறது. பிரம்மாண்டமான பிரகாரங்கள் கோயிலுக்கு அழகு சேர்க்கின்றன. கோவிலின் கிழக்கு பகுதியில் நுழைவாயிலுக்கு நேராக ஒரு அற்புதமான த்வஜஸ்தம்பம் அமைந்துள்ளது. 

பூஜை:

காரணாகம பூஜை நான்கு காலமும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் வைகாசி மாதத்தில் சேக்கிழார் விழா மற்றும் அனைத்து மாதங்களிலும் பஞ்சபர்வ உற்சவங்கள் நடைபெறும். வெளியில் 'சூர்ய புஷ்கரணி' என்று அழைக்கப்படும் திருக்குளம் நல்ல நிலையில் இருக்கின்றது. 

தல விருட்சத்தின் சிறப்பு:

இத்திருத்தலத்தின் தலவிருட்சம் செண்பக மரம் ஆகும். இத்திருக்கோயிலுக்கு வடக்குப் புறம் ஊர் எல்லை தெய்வமாக ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் உள்ளது . இவ்வாலயத்தில் பொன்னியம்மன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக இரண்டு மகிழ மரங்கள் உள்ளன. ஒன்று பூ பூக்கும். மற்றொன்று காய்காய்க்கும் அதிசயம் கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஆடிப்பூரம் ஆகஸ்டு - 7... 'தென்னாட்டுக்கொரு கோதை' - ஆண்டாள்!
Kundrathur Nageswarar temple

ஆடிப்பூரத்தில் 1008 பால்குட அபிஷேகம் நடக்கும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் .

காலை 7:00 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஒன்பது மணி வரையும் தரிசன நேரம் ஆகும்.

பிரார்த்தனை:

குறிப்பாக ராகு கேது பெயர்ச்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தின் போது மாலை 4.30-6வரை ராகுவுக்கான பரிகாரங்கள் இங்கு செய்யப்படுகின்றன.

நாக தோஷ நிவர்த்தி: ராகு பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். அங்கு நடக்கும் ராகு கால பூஜையில் உளுந்து சாதம் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
ஆடிப்பூரம் ஜகத்துதித்த ஆண்டாள் நாச்சியார் வாழியவே!
Kundrathur Nageswarar temple

நேர்த்திக் கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். இந்த ராகு ஸ்தலத்திற்கு பிரார்த்தித்துக் கொண்டவர்கள் பரிகாரம் செய்து தோஷத்தில் இருந்து நிவர்த்தி அடைய இங்கு சென்று வழிபடலாம். 

அருள்மிகு சடையாண்டீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் என்னும் திருக்கோயில்களும் இவ்வூரில் அமைந்துள்ளன. ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் இக் கோயில்களையும் தரிசித்து வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com