தைப்பூசம் என்றாலே முருகனுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் ஏராளம். முருகனின் காவடிகளை சுமந்து சென்று நேர்த்திக்கடனை செய்வதால், முருகனை தரிசிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலன்களோ ஏராளம் ஏராளம்! அந்த காவடி முருகனுக்கு முதன் முதலாக எடுத்தது யார் என்று தெரியுமா?
அகஸ்தியரின் சீடனான இடும்பன் அகஸ்திய முனிவரின் வழிபாட்டிற்காக கைலாயத்தில் இருந்து சிவசக்தி வடிவமாக இருக்கும் சிவகிரி சக்தி கிரி என்கிற மலைகளை துலாபாரம் போல் தூக்கிக்கொண்டு வந்தான். பிரம்மதண்டத்தை கொண்டு சிவகிரி ஒருபுறமும் சக்தி கிரியை ஒருபுறமும் தோளில் சுமந்து கொண்டு வந்தான். அந்த மலைகளை தூக்கி வரும்போது, 'தான் எத்தனை பல சாலி' என இடும்பனுக்கு மனதில் அகந்தை ஏற்பட்டது. ஆனால் அவன் நினைத்த சிறிது நேரத்திலேயே மலைகளின் பாரம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் களைப்படைந்த இடும்பன், மலைகளை ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு ஓய்வு எடுக்க நினைத்தான். மீண்டும் அந்த மலைகளைத் தூக்க முயன்ற போது அவனால் தூக்கம் முடியவில்லை.
சிவகிரியின் மேலே சிறுவன் ஒருவன் ஆண்டி கோலத்தில் கையில் தண்டத்துடன் நிற்பதை கண்ட இடும்பனுக்கு கோபம் வந்தது. மலையை விட்டு இறங்கச் சொல்லி இடும்பன் சொல்ல, அந்த சிறுவன் மறுக்க, இருவருக்கும் சண்டை வந்தது. சிறுவன் உருவில் வந்த முருகப்பெருமான் தாக்கியதில் இடும்பன் மயக்கம் அடைந்தான். பிறகு இடும்பனின் மனைவியும் அகஸ்தியரும் கேட்டுக் கொண்டதால் அவனை மன்னித்து அருள் செய்தார் முருகப்பெருமான். அதோடு இடும்பனை போல் காவடி சுமந்து வருபவர்களுக்கு வேண்டும் வரங்களையும் அருளையும் வாரி வாரி வழங்குகிறார்.
இடும்பனுக்கு பழனி மலையின் அடிவாரத்தில் சன்னதி உள்ளது. முதலில் இடும்பனை வணங்கி விட்டு தான் மலையேறி எம்பெருமான் முருகனை வணங்க வேண்டும்.
முருகப்பெருமானுக்கு இருபது வகையான காவடிகளை எடுப்பார்கள்.
அதில் தங்க காவடி எடுத்தால் நீடித்த புகழையும் வெள்ளி காவடி எடுத்தால் நல்ல ஆரோக்கியத்தையும் பெறலாம்.
பால் காவடி எடுத்தால் செல்வ செழிப்பை பெறலாம், சந்தன காவடி எடுத்தால் வியாதிகள் நீங்கும்.
பன்னீர் காவடி எடுத்தால் மனநல பாதிப்புகள் நீங்கும், சர்க்கரை காவடி எடுத்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.
அன்னக்காவடி எடுத்தால் வறுமை நீங்கும், இளநீர் காவடி எடுத்தால் சரும வியாதி போகும்.
அலங்கார காவடி எடுத்தால் திருமண தடை நீங்கும், அக்கினி காவடி எடுத்தால் பின்னி சூனியம் அகலும்.
கற்பூர காவடி எடுத்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கும், சர்ப்பக் காவடி எடுத்தால் குழந்தை வரம் கிடைக்கும்.
மஞ்சள் காவடி எடுத்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கும், சேவல் காவடி எடுத்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
புஷ்பக் காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும், தேர் காவடி எடுத்தல் உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமையும்.
மச்ச காவடி எடுத்தால் வழக்கு விஷயங்களில் இருந்து விடுபட நேர்மையான தீர்ப்பு கிடைக்க உதவும், மயில் காவடி எடுத்தால் இல்லத்தில் இன்பம் பெருகும்.
பழக்காவடி எடுத்தால் தொழிலில் நலம் பெருகும் லாபம் கிடைக்கும், வேல் காவடி எடுத்தால் எதிரிகள் நம்மை பார்த்து அஞ்சிடுவார்கள்.
காவடி வேண்டுதல் என்பது, நம்முடைய துன்பம் துயரங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் மட்டுமின்றி புண்ணியம் இன்பம் ஆகியவற்றையும் சுமந்து சென்று முருகனின் காலடியில் சமர்ப்பிப்பது ஆகும். காவடி எடுப்பதால் நமது அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில் இன்பம் மட்டுமே நிலைத்து நிற்கும். நாம் நினைத்தது நிறைவேறும் முருகனின் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.