

சத் பூஜையை (Chhath Puja) இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும், நேபாளத்தின் சில பகுதிகளிலும் தான் முதன் முதலில் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால், இப்போது வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்த சத் பூஜையின் நான்கு நாள் கொண்டாட்டங்கள் பலரையும் ஈர்க்கின்றன.
பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளுக்கு ஒரு முக்கிய பண்டிகையான சத் பூஜை தீபாவளி அமாவாசையின் ஆறாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆறாவது நாளை தான் நம் தமிழ் நாட்டில் ஸ்கந்த ஷஷ்டி விழா அல்லது சூர சம்றார விழாவாக கொண்டாடுகிறோம். ஷஷ்டி மற்றும் சத் என்றால் ஆறாவது நாள் என்று பொருளாகும்.
வட இந்தியாவில் இப்பண்டிகையின் போது முக்கியமாக சூரியனின் துணைவியாகக் கூறப்படும் சத்தி மையாவை வழிபடுகிறார்கள். இந்த வருடம் நாளை முதல் (அக்டோபர் 25 ஆம் தேதி) சத் பூஜை விழாக்கள் தொடங்குகின்றன.
நான்கு நாட்கள் இந்த பூஜையானது நீடிக்கும். குடும்பத்தின் ஒட்டுமொத்த செழிப்புக்காக சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இது அனுசரிக்கப்படுகிறது. சத் பூஜையின் சரியான தோற்றம் வரையறுக்கப்படாமலும் தெளிவற்றதாகவும் இருந்தாலும், சிலர் இது இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
ராமாயணத்தின் படி, ராமர் வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பியதும், ராமரும் சீதையும் சூரியக் கடவுளைக் கௌரவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து, மறுநாள் விடியற்காலையில் அதை முடித்ததாகவும், பிற்காலத்தில் இந்த சடங்கு தான் சத் பூஜையாக உருவெடுத்ததாகவும் கருதப்படுகிறது.
புராணக் கதாபாத்திரமான கர்ணன் சூரியனுக்கும், குந்திக்கும் பிறந்த குழந்தை என்று கூறப்படுகிறது. கர்ணன் தண்ணீரில் நின்று கொண்டு தனது பிரார்த்தனைகளை மத ரீதியாகச் செய்து, ஏழைகளுக்கு பிரசாதம் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையில், திரௌபதியும் பாண்டவர்களும் தங்கள் ராஜ்யத்தை மீண்டும் பெறுவதற்காக இதேபோன்ற பூஜையை செய்தார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த வருடம் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் சத் பூஜை விழாக்கள் தொடங்குகின்றன. நான்கு நாட்கள் இந்த பூஜையானது நீடிக்கும். 28ந் தேதி காலை சூரிய வழிபாட்டிற்கு பிறகு இந்த பூஜை நிறைவடைகிறது. குடும்பத்தின் ஒட்டு மொத்த செழிப்பிற்காக சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
முதல் நாளை பண்டிகையை தூய்மைப்படுத்தும் சடங்கு குளியலுடன் தொடங்குகிறார்கள். அன்று மதியம் பாரம்பரிய உணவைத் தயாரிக்கிறார்கள். பெரும்பாலும் சுரைக்காய் (லௌகி) மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.
இதை லௌகி பாத் என்றழைக்கிறார்கள். விரத்தை தொடங்குவதற்கு முன்னால் கடைசியாக இதை உண்கிறார்கள்.
இரண்டாம் நாள் பகல் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். மாலையில், பிரார்த்தனை செய்த பிறகு, வெல்லம் சார்ந்த அரிசி பாயாசம் (கீர்) மற்றும் சப்பாத்தி சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள். இது 36 மணி நேர நிர்ஜலா (தண்ணீரற்ற) விரதத்தை குறிக்கிறது.
மூன்றாம் நாளில் முழுவதுமாக விரதம் இருக்கிறார்கள். பக்தர்கள் ஆற்றங்கரையிலோ அல்லது நீர்நிலைகளிலோ கூடி, மறையும் சூரியனுக்கு 'அர்க்யா' (காணிக்கை) செலுத்துகிறார்கள். பக்தி பாடல்கள் மற்றும் சடங்குகளுடன் இந்த மாலை வழிபாட்டை நடத்துகிறார்கள். இது தான் சத் பூஜையின் ஒரு முக்கிய அம்சமாகும். இது அன்றைய ஒளி மற்றும் ஆற்றலுக்கான நன்றியைக் குறிக்கிறது.
இறுதி நாளில், ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக ஆசீர்வாதம் வேண்டி, உதய சூரியனை (உஷா அர்க்யா) நோக்கி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. காலை சடங்குகளுக்குப் பிறகு, பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்து, நான்கு நாள் அனுஷ்டானத்தை முடிக்கிறார்கள். இந்த பூஜையின் போது சூரிய பகவானுக்கு தான் பிரசாதத்தை வைத்து படைப்பார்கள். மேலும் அகல் விளக்கை ஏற்றி நதியில் விடுவார்கள்.
'டேக்குவா' என்ற சொல்லபடுகின்ற கோதுமை மாவு மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கும் இனிப்பு தான் இந்த பூஜையில் செய்யக் கூடிய சிறப்பான இனிப்பாகும். இதைத் தவிர வாழைப் பழம், கரும்பு முதலியவற்றையும் சூரிய பகவானுக்கு படைத்து வணங்குவார்கள். இந்த பூஜை கிட்டதட்ட நம் தமிழ் நாட்டு பொங்கல் விழாவை போன்று சூரியனுக்காக அர்ப்பணிக்கும் பெரிய மற்றும் முக்கியமான விழாவாகும்.